ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!– இலக்குவனார் திருவள்ளுவன்
வழிபாட்டு முறையில் ஆகமம்
ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!
தமிழர்களுக்காகத் தமிழர்களால், தமிழர்களின் கடவுள்களை வழிபடுவதற்குக் கட்டப்பட்ட கோயில்களே தமிழகக் கோயில்கள். இக்கோயில்களில் மண்ணின் மக்களுக்கும் மக்களின் மொழியாகிய தமிழுக்கும் இடமில்லை என்பவர்கள் அயல்மண்ணைச் சேர்ந்தவர்களும் அயல் இனத்தைச் சேர்ந்தவர்களுமே.
தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களுக்கு உரிய விதிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும் அயலார் எப்படி இயற்ற இயலும்? அவ்வாறு இயற்றப்பட்டதாகக் கூறும் விதிகள் தமிழ்மக்களை எங்ஙனம் கட்டுப்படுத்தும்? பொதுவாக ஆகமவிதிகள் சைவ சமயக்கோயில்களுக்கே உள்ளன.
சைவ ஆகமங்களாகத் திருவடிகள் முதல் 22 உடலுறுப்புகளையும் குண்டலம், முதலிய 6 அணிமணிகளையுமே குறிக்கின்றனர். இதனை,“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்னும் திருமூலர் பாடலடியும் மெய்ப்பிக்கின்றது. அவ்வாறிருக்க, இவை எங்ஙனம், கோயில் கட்டுமான முறைகள், சிலை அமைப்பு முறைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றைக் கூறும் விதிகளாகும்?
கட்டடக்கலையிலும் சிற்பக் கலையிலும் தெரிவித்துள்ள, தெரிவிக்க வேண்டிய கருத்துகளையெல்லாம் ஆகம வதிகள் கூறுவதாகச் சொல்வதை எங்ஙனம் ஏற்க இயலும்? காலங்காலமாகச் சமற்கிருத வழிபாடே இருந்ததாகக் கூறுவதும் நாம் நம்பிக்கொண்டிருக்கும் பொய்யான வாதமாகும்.
திருநாவுக்கரசர் திருஅடைவு திருத்தாண்டத்தில் கோயில் வகைகளைக் குறிப்பிடுகையில்,
இருக்குஓதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில்
என ஒரு வகையைக் குறிப்பிடுகிறார்.
இதில் இருக்கு வேதம் ஓதுவோருக்கு என ஓர் இளங்கோயில் கட்டித் தரப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் அதுவரை தமிழ் வழிபாட்டுக் கோயில்களே இருந்துள்ளன என அறியலாம். அவ்வாறு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் காலத்தில்தான் சமற்கிருத வழிபாட்டுக் கோயில் முதலில் கட்டப்பட்டுள்ளது. ஆக அதுவரை அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாடே இருந்தது என உணரலாம்.
பின்னரும் படிப்படியாக முதன்மைக்கோயில்களில் சமற்கிருத வழிபாடு புகுத்தப்பட்டாலும். தனி அம்மன் கோயில்களிலும் சிறுதெய்வ வழிபாட்டுக்கோயில்களிலும் தமிழ் வழிபாடே இருந்தது, இருக்கின்றது. பெண்கள் இறைவர்களாக இருந்தாலும் இழிவானவர்கள் என்பதே வேதங்கள் வலியுறுத்தும் கருத்து. எனவே, இறைவர்களாக இருந்தாலும் பெண்கள் அல்லவா? எனவே, சமற்கிருதம் பேசக்கூடாது. ஆதலின், அக்கோயில்களில் சமற்கிருத வழிபாடுகள் கிடையா.
எனவே, ஆகமவிதிகள் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துகளை அகற்ற நீதிமன்றங்கள் துணை புரிய வேண்டும். தமிழ் வழிபாடும் அனைத்துப் பிரிவுத் தமிழர்களும் பூசாரியாக இருக்கும் நிலையும் என்றென்றும் இருக்க வேண்டும். அரசின் கொள்கைக்கு உண்மையான இறைநெறியன்பர்கள் துணை நிற்க வேண்டும்.
– தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்,
தலைவர், இறைநெறி மன்றம்
– இரியாசு அகமது, குமுதம் ரிப்போர்ட்டர், 02.09.2022
Leave a Reply