ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்?

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  18

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  17 தொடர்ச்சி)

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இந்தியா நாட்டியவிழா குறித்த விளம்பரங்களை எங்கும் பார்க்கலாம் அதில் ஆங்கில விளம்பரங்களிலில் ஆங்கில முத்திரை இருப்பதையும் காணலாம். தமிழக ஆட்சியாளர்களின் அறியாமைகளுள் ஒன்று ஆங்கில மடல், ஆங்கில ஆணை, ஆங்கில விளம்பரம் முதலியவற்றில் தமிழக அரசின் முத்திரையை ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது. தமிழ் முத்திரையைப் பயன்படுத்தினால் குற்றமாகிவிடும் என்ற பதைபதைப்பு அவர்களுக்கு.

சாலை அறிவிப்புகள், விளம்பரங்கள், ஆணைகள் முதலியவற்றில் ஆங்கிலக் காவல் திலகமாக உள்ள காவல்துறையின் முத்திரை ஆங்கிலத்தில்தான். சில துறைகள் முத்திரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வைத்துள்ளன. எனினும் பெரும்பாலும் பயன்படுத்துவது  ஆங்கில முத்திரைகளைத்தான்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மின் வாரியம் முதலியவற்றில் ஆங்கில முத்திரைகளே கோலோச்சுகின்றன. பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்தானே உள்ளது. அதற்கு ஏன் ஆங்கில முத்திரை? இப்படி ஆராய்ந்து பார்த்தால் பல துறைகளின் முத்திரைகள் ஆங்கிலத்திலி் உள்ளமையைக் காணலாம். இவற்றை யெல்லாம் பார்க்கும்போது அரசின் கண்கள் மூடியிருக்குமோ?

எந்த நாடாவாது வெவ்வேறு மொழிகளில் தன் முத்திரைகளைப் பயன்படுத்துகிறதா எனப் பார்த்ததில் நம் நாடு தவிர, வேறு எந்த நாடும் இல்லை.  இலங்கை அரசின் முத்திரை தமிழ், சிங்கள மொழியினருக்குப் பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுத்துகள் அல்லது முழக்கமில்லாமல் படங்களை உடையதாக உள்ளது.  துறைகள் முத்திரைகள் பொதுவாகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் உள்ளன. படைத்துறை, காவற்றுறைகளில் சிங்களப்பயன்பாடு இருப்பினும் தமிழ்ப்பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படுகிறது. நான் இலங்கைக்குச் சென்றிருந்தபோது, சிங்களக்கட்டுப்பாட்டிலுள்ள ஒரு பகுதியைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கே விடுதலைப்புலிகள் செயற்கைக் கடல் அலைகளை உருவாக்கி நீச்சல் பயிற்சி பெறும் கேணி இருந்தது. வாயில் முதற்கொண்டு வழியெங்கும் சிங்களமே இருந்தது. நான் பொறுப்பிலுள்ள ஒருவரிடம், “ஏன் சிங்களத்தில் மட்டும் குறித்துள்ளீர்கள்” என்றேன். “சிங்களப்படையினர் பயன்படுத்தும் பகுதி என்பதால் தமிழ் தேவையில்லை” என்றார். “அப்படியானால், பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்துள்ளீர்களே! தமிழ்மக்கள் வரவேண்டாவா? அவர்களுக்குத் தமிழில் தகவல் தேவையில்லையா?” என்றேன். “நீங்கள் கூறுவது சரிதான். நாங்கள் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விட்டபொழுது இது குறித்துச் சிந்திக்க மறந்துவிட்டோம். உயர் அதிகாரிகளிடம் கூறித் தமிழில் விளம்பரப்பலகைகள் வைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

இலங்கைஅரசு. இனவெறி பிடித்த அரசாக இருந்தாலும் தமிழ்மக்கள் பயன்பாட்டுப் பகுதிகளில் தமிழ் இருக்க வேண்டும் என்பதில் கருத்து செலுத்துகிறது. வருங்காலத்தினர் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் ஆங்கில முத்திரைகளைப் பார்த்தால் என்ன எண்ணுவார்கள்? “ஆங்கில வெறி பிடித்த அரசு ஆட்சி செய்துள்ளது” எனப் பிழைபட எண்ண மாட்டார்களா? இந்த அவச்சொல் நம் அரசிற்குத் தேவைதானா? சிங்கள வெறி அரசினும் மோசமான ஆங்கில வெறி பிடித்த அரசாக வரலாற்றாசிரியர்கள் எழுதி வைக்க மாட்டார்களா? இதைத்தான் அரசு விரும்புகிறதா?

தமிழ்நாட்டில் தனித்தீவாகச் செயற்பட்டு வருவது உயர்நீதிமன்றம். தமிழ்ப்பற்று மிக்க நீதிபதிகள் பலர் உள்ளனர். அயல்மாநிலத்திலிருந்து வந்து பதவி யேற்றாலும் தமிழின் மீதுள்ள தங்கள் காதலை வெளிப்படுத்திப் பேசுகின்றனர்.  ஆனால் உயர்நீதிமன்ற முத்திரை இந்தி முழக்கத்துடன் கூடிய ஆங்கில முத்திரையாகத்தான் உள்ளது. நம் மாநிலத்தின் பெயரை, 1969 சனவரி 14இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார் பேரறிஞர் அண்ணா. ஆனால், இன்னும் இந்தத்தகவல் உயர்நீதிமன்றத்தின் செவிகளில் சேரவில்லையோ! உயர்நீதி மன்றத்தின் பெயரைத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று குறிக்கத்தான் ஒன்றிய அரசின் ஆணை தேவைப்படலாம்.  ஆனால், தமிழ்நாடு அரசு ‘மெட்ராசு’ என்பதைத் தமிழில் ‘சென்னை’ என்று குறிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தபின்பு முன்னோடியாக உயர்நீதிமன்றம்தானே அவ்வாறு பயன்படுத்தி யிருக்க வேண்டும். (17.07.1996, சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் அறிவிப்பு). ஆனால் இன்னும் மெட்ராசுதான். சென்னை இல்லை. (இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள உயர்நீதி மன்றங்கள், பிற நீதிமன்றங்கள் யாவுமே அந்தந்த மாநில மக்கள் மொழியை முழுமையாகப் பயன்படுத்தும் நிலை வரவேண்டும்.)

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் வேண்டுகோளை ஏற்றுப் பேரறிஞர் அண்ணா ‘வாய்மையே வெல்லும்’ என அரசின் முழக்கத்தைத் தமிழில் குறித்தாரே! உயர்நீதிமன்ற முத்திரையில் மட்டுமில்லை. தமிழ்நாட்டரசின் ஊர்க்காவல் படை முத்திரையிலும் இந்தி எழுத்துகளில்தான் முழக்கம் உள்ளது. தமிழ்நாட்டரசின் கட்டுப்பாட்டில்  ஊர்க்காவல் படை இல்லையோ! இந்தித்திணிப்பை எதிர்ப்பதாக அரசு கூறிக் கொண்டிருந்தாலும் இவையெல்லாம் அரசிற்குத் தெரியா அளவிற்கு அரசு அறியாமையில் மூழ்கி உள்ளதா? அல்லது கண்டும் காணாமல் இந்திக்கு ஆதரவுக்கரங்கள் நீட்டுகின்றதா?  நாம்தான்  ‘தமிழ்நாடு ஊர்க்காவல் படை’ எனக் குறித்துள்ளதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தவறாக எண்ணிவிட்டோமோ!( ‘இந்தியா மை யோசனா’ என்னும் வலைப்பக்க முகவரியைப் பார்க்கும் பொழுதும் ஒன்றிய அரசின் துறைகளின் கிழ்க்குறிக்கப்படும் தளத்தைப்பார்க்கும் பொழுதும் அப்படித்தான் தோன்றுகிறது. இஃதுதான் உண்மை யென்றால் அரசு எதற்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இதனை வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.)

இதற்கு ஒரே தீர்வு. தமிழ்நாட்டரசின் எந்த மொழி விளம்பரம், அறிக்கை, செய்தி, ஆணை எதுவாயினும் அதில் தமிழ் முத்திரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆங்கில முத்திரை செல்லத்தக்கதல்ல என அறிவிக்க வேண்டும். அதையும் மீறி ஆங்கில முத்திரையைப் பயன்படுத்தினால்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் காரணங்கள் என்னென்ன? ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் அரசிற்குத் தெளிவு இல்லை. தான் பிறப்பித்த ஆணை தன்னையும் கட்டுப்படுத்தும் என்ற உணர்வு இல்லை. “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்று சொல்லிவிட்டால் போதும் தமிழ் வளர்ந்து விடும் என்பது அரசியலாளர்களின் நம்பிக்கை. அதுவும் ஒரு காரணம்.  இவையெல்லாம் மாறும் வரை தமிழ்நாட்டில் தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் பிற மொழிப் பயன்பாடு இருக்கத்தான் செய்யும். நாம் என்னதான் குரல் கொடுத்தாலும் கூக்குரலிட்டாலும் பயனில்லை.

என்றாலும் நாம் குரல் கொடுப்போம். குரல் மேல் குரல் கொடுத்தால் சிறிதேனும் பயன் இருக்குமல்லவா?

இலக்குவனார் திருவள்ளுவன்