ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தொடர்ச்சி)
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்
3/9
இந்தியாவில் உள்ள மொழிகள் தமிழாயினும் வங்காளமாயினும் மராத்தியாயினும் பஞ்சாபியாயினும் அனைத்துமே இந்திய நாட்டு மொழிகள்தாம். இம்மொழிகள் அனைத்துமே ஒரு செடியில் பூத்த பல மலர்களே. இவை அனைத்தும் மொழிகளின் அரசியும் கடவுள்களின் மொழியுமாகிய சமற்கிருதத்திலிருந்து பிறந்தவையே! வளமையையும் தூயத் தன்மையையும் கொண்ட அது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கவல்ல பொது ஊடகமாகும். சமற்கிருதத்தைக் கற்பது கடினமன்று. இன்றைய நிலையில் சமற்கிருதம் இந்திய நாட்டு வாழ்க்கைமுறைகளை இணைக்கவல்லது ஆகும். ஆயின், போகூழாக அது மக்கள் மொழியாக நடைமுறையில் இல்லை. அதனை நடைமுறை மொழியாக ஆக்கும் கடமையையும் நிறைவேற்ற அரசு முயலவில்லை.” என்று தன் எண்ணக் கொத்து நூலில் தெரிவித்துள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முப்பால் நூலை நாற்பால் நூலாகக் காட்டிய முன்னவர் பரிமேலழகரே ஆவார். இந்தக் கருத்தைத் திருக்குறளுக்கு உரை எழுதிய பல்லோரில் ஒருவராகிய எசு.என்.சிரீராமதேசிகன் என்பார் (காஞ்சி காமக்கோடி பீடாதிபதி செயேந்திர சரசுவதியால் ‘சமற்கிருத மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்’ என்று போற்றப்பட்டவர்) “இந்தியக் கலாச்சாரம் எனச் சொல்லப்படும் வைதீகக் காலாச்சாரத்தைத் தமிழ்நாட்டிற்கு மாத்திரமின்றி உலக முழுவதும் பரப்ப இந்நூலை இயற்றினார் வள்ளுவர். தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொள்வதை விட இந்தியன் என்று கொள்வதில் மிக ஆர்வம் கொண்டிருந்தார். சங்கப் புலவர்கள் தமிழ் மக்களின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, தமிழ் அரசர்களின் சரிதம் ஆகியவற்றைச் சங்க நூல்களில் பேசியிருப்பது போல வள்ளுவர் தனது நூலில் அதுபற்றிப் பிரசுதாபிக்கவே இல்லை. தமிழ் என்ற சொல்லோ, சேர, சோழ, பாண்டியர்கள் போன்ற தமிழ் மன்னர்களின் பெயர், வரலாறு போன்றவையோ, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களையோ மருந்துக்குக் கூடக் குறிப்பிடாதது இங்கு ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கத் தக்க விசயமாகும்.” என்று தனது “திருக்குறள் – தமிழ் ஆங்கிலத் தெளிவுரையுடன்” என்னும் நூலில் ‘எனது வேண்டுகோள்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார். (திருக்குறள்- தமிழ் ஆங்கிலத் தெளிவுரையுடன், எசு. என். சிரீராமதேசிகன், கங்கை புத்தக நிலையம், சென்னை 600 017}.
திருக்குறள் தமிழ்ப்பண்பாட்டுக்குரியதன்று; முழுக்க முழுக்க வைதீகப் பண்பாட்டை வலியுறுத்தவே எழுதப்பட்டது என்று வலிந்து திருக்குறளுக்குக் களங்கம் கற்பிக்கப்படும் நூலை வானதி பதிப்பகத்தின் மற்றொரு பிரிவாகிய கங்கை புத்தக நிலையம் 1991 முதல் 2006 வரையில் பத்துப் பதிப்புகள் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. 2006க்குப் பிறகு எத்தனை பதிப்புகள் வந்துள என்பது தெரியவில்லை. ‘பிராமணீய நாயக’த்துக்கு வால் பிடிப்பதில் அரசியல் கட்சிகளுடன், வேதங்களாலும் சாத்திரங்களாலும் சூத்திரர் என்றும் பஞ்சமர் என்றும் முத்திரையிடப்பட்டோரும், வரிசையில் காத்திருப்பதைத்தான் தந்தை பெரியார் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்தப் பதிப்பகமும் அந்த வரிசையில் சேரத் துடிக்கும் அமைப்பே!
‘இந்து தருமம்’ என்பதே இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் பவுத்தம், சமணம் சார்வாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் தாய் என்பதே சங்கப் பரிவாரத்தினரின் கொள்கை. அதனை, சங்கப் பரிவாரத்தின் மூலவர்களின் ஒருவரான சவார்க்கர்,
“This is Hindu Dharma – the conclusion of conclusions arrived at by harmonizing the detailed experience of all schools of religious thought – Vaidik, Sanatani. Jain, Buddha, Sikha,or Devasamaji. Each one every one of those systems or sects which are the direct descendants of and developments of the religious beliefs, Vaidik and nan-Vaidik, that obtained in the land of the Sapta Sindhus or in the other unrecorded communities in the other parts of India in tha vedic period, belong to and is an integral part of Hindu Dharma” என்று கூறினார்.
(V.D.Savarkar, Hindutva, Swatantryaveer Savarkar Rashtriya Smarak, Mumbai. நன்றி: Jyotirmaya Sharma, Hindutva, Harper Collins Publishers India2015. பக்:198)
ஆர்.எசு.எசு. குருமார்கள் கோல்வாக்கர், சவர்க்கர் ஆகியோரின் கருத்துகளைத் தேசிகன் எதிரொலிப்பதைக் கவனியுங்கள்.
ஆரியர்களின் தமிழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் திரிபுரைகளுக்குச் சான்றாகப் பரிமேலழகர் தன் சிறப்பான உரையின் இடையே ஆரிய நச்சினைக் கலந்துள்ளமையைக் குறிப்பிடலாம். இது குறித்து அறிஞர் பாவாணரின் உண்மை விளக்கம் வருமாறு:
”இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழகருரையே தலைசிறந்ததெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக்கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய நச்சுக்கருத்துகளை, முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக்கொண்டு புகுத்தியிருப்பது, இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது. இனி, சில குறள்கட்கு முழுத்தவறாகவும் சில குறள்கட்குஅரைத்தவறாகவும் பொருள் கூறியுள்ளார். சில தென்சொற்களை வட சொல்லாகக் காட்டியிருப்பதுடன், சில சொற்கட்குத் தவறான இலக்கணவமைதியுங் கூறியுள்ளார்”. (திருக்குறள் தமிழ்மரபுரை. நன்றி: அகரமுதல)
(தொடரும்)
பெங்களூரு முத்துச்செல்வன்
Leave a Reply