ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9: பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9 தொடர்ச்சி)
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்
6/9
தமிழ் தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை; சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிடமிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகின்றது என்றும் தொல்காப்பியம் பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட நடனப் பாடல்களுக்கான தொகுப்பேயன்றி இலக்கண நூலன்று என்றும் தமிழரின் பா வகைகள் பரத முனியின் ‘யமகம்’ என்பதன் அடிப்படையில் உருவானவை என்றும் தமிழர்க்கு எந்த வாழ்நெறியும் இல்லை; வடமொழி வேதநெறி மரபையே பின்பற்றி வாழ்கின்றனர் என்றும் தமிழரின் கலை, இசை, நடனம், இலக்கியம் அனைத்தும் கடன் பெற்றவையே என்றும், தமிழர் கூறும் ஐந்நிலப் பகுப்புக் கற்பனையே என்றும் நாம் இங்குச் சிறப்புடன் போற்றும், தமிழ் சார்ந்த அனைத்தும் கற்பனைகளே; இவற்றை உண்மை என நம்பித் தமிழ் உயர்வு பற்றிப் புகழ்தல் எல்லாம் தவறு என்றும் தன் தமிழ்-சமற்கிருதக் கண்ணாடி(The Mirror of Tamil and Sanskrit) என்னும் நூலில் தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி என்னும் பிராமணர் எழுதி அது பிராமண வலைத்தளங்களில் பரவி வருகிறது.. தமிழுக்குச் செம்மொழி நிலை வந்தததை விரும்பாத பிராமணரும் அவர்களால் நன்மை பெறும் தமிழர்களும் இதனைப் போற்றிப் புகழ்கின்றனர். தமிழுக்கென்று தனிச் சிறப்பு எதுவுமே இல்லை என்றும் அனைத்துமே சமற்கிருதத்தினின்றே பெறப்பட்டவை என்றும் தமிழ்நாட்டில் ஒரு பிராமணன் கூறமுடிகிறது என்றால் தமிழரின் பொறுதியை(சகிப்புத்தன்மை) என்னவென்று கூறுவது?. நாகசாமியின் ஒவ்வொரு கருத்தையும் மறுத்தும் கண்டித்தும் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் “நன்றியும் இல்லை! நடுமையும் இல்லை!” என்னும் தம் நூலிலும், முனைவர் தமிழண்ணல், “தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும்” என்னும் தம் நூலிலும் எழுதித் தம் தமிழுணர்வையும் மொழியியல் திறனையும் வெளிப்படுத்தினர்.
17 ஆம் நூற்றாண்டிலேயே, தம் அளவிடவியலாத வடமொழிப்பற்றால் வடமொழி இலக்கணத்தைக் கொண்டு எழுதப்பெற்ற இலக்கணக்கொத்து என்னும் தன் நூலில் சாமிநாத தேசிகர், ”வடநூலைவிட்டுத் தனியே தமிழ் நடவாது” என்று கூறும் அளவிற்குத் துணிந்தார்.. ஐந்தெழுத்தால் (ற, ன, ழ, எ, ஒ ) ஒரு பாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே” என்று கூறும் அளவிற்குச் சென்றார். (பெ.திருஞானசம்பந்தன்,சமற்கிருத ஆதிக்கம் Sanskritization, பெரியார் திறந்த பல்கலைக்கழக வெளியீடு, சென்னை 600 007; முதற் பதிப்பு மார்ச் 1985)
தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கான காரணத்தை, “வடமொழி யிலிருந்தே தமிழ், கடன் வாங்கியது என்றும் தமிழினிடமிருந்து வடமொழி ஒன்றும் கடன் வாங்கியதில்லை என்றும், அதனால் தமிழைவிட வடமொழி உயர்வுடையது என்றும், உண்மைக்கு மாறான கூற்றுகளை வடமொழி கற்றவர் தொடர்ந்து கூறிவந்த காரணத்தால் வடசொற்கள் தமிழர் நெஞ்சில் இடம்பெற முடியாமற் போயிற்று; சிலர் தமிழும் வடமொழியிலிருந்து பிறந்தது என்று செருக்கோடு கூறிவந்தமை பகைமையையும் வளர்த்து வந்தன. நடுவுநிலைமை பிறழ்ந்து ஒரு சாரார் பரப்பிய கருத்துகள் அன்பான இசைவுக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டன. தமிழையும் வடமொழியையும் ஒப்பிட்டு அவற்றின் உண்,மையான வளர்ச்சியையும் சிறப்பியல்பையும் சீர்தூக்கி உணர முடியாத புலவர்கள் சிலர் வடமொழி சார்பாக நடுவுநிலை இலாமல் கூறிய கூற்றுக்கள் பகைமைக்கு வித்திட்டன.” (இலக்கணக் கொத்துரை, பாயிரம்:7) என்று வெளிப்படுத்துகிறார் முனைவர் மு. வரதராசனார் (தமிழ்மொழியில் வடசொற்கள் புகுந்தமை, டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், மேற்கண்ட நூல்).
இன்று நடைபெற்றுவரும் இந்துவிய ஆட்சிக்கும் அதன் சமற்கிருதத் திணிப்பு முயற்சிகளுக்கும் நாட்டில் உருவாகியுள்ள எதிர்வினைகள் ஏமாற்றம் அளிப்பதாகத்தான் உள்ளன. அன்றைய அரசு மேற்கொண்ட சமற்கிருதத் திணிப்பு நடவடிக்கைகளையும் இன்றைய அரசு மேற்கொண்டுவரும் சமற்கிருதத் திணிப்பு நடவடிக்கைகளையும் தந்தை பெரியாரின் கீழ்வரும் வரிகளைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள்.
”அக்டோபர் 1956–இல் ‘சமசுகிருத ஆணையம்’ என்ற ஒன்றை இந்திய அரசார் நியமித்தார்கள். இந்த ஆணையத்தின் நோக்கங்கள் யாவை என்பதையும் அரசாங்கத்தினர் சொன்னார்கள். அதன் நோக்கம் பல்கலைக் கழகங்களிலும் வெளியிலும் சமசுகிருதத்தை – சமசுகிருதக் கல்வியைப் பரப்புவதும், அதற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதுமேயாகும். இந்த ஆணையம் அறிக்கையைத் திசம்பர் மாதம் 1957-இல் அளித்தது. இதன் பரிந்துரைகளை அரசாங்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அதைத் தனது திட்டமாகச் செயல்படுத்திக் கொண்டுவருகிறது. இந்த ஆட்சிக்குப் பெயர் சனநாயகமாம்!” என்று கூறியதுடன் தன் மனக்குறையை, “நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓர் ஆணையம் என்றால் அதற்குப் பல்லாயிரக் கணக்கான உரூபாய்கள் செலவு – வீண் விரயம் என்று பொருள். இதனால் யாருக்காவது ‘காதொடிந்த ஊசியளவு’ பயன் உண்டா? விரயம் செய்யப்பட்ட பணம் அத்தனையும் நம்மிடத்திலிருந்து வரியாகக் கோடிக் கணக்கில்–தில்லி அரசாரால்– பகற்கொள்ளையரைப்போல் எடுத்துச் செல்லப்படுவதுதானே! பார்ப்பனரிடம் இருந்து போகும் வரி விகிதாச்சாரம் எவ்வளவு? ‘அண்டைவீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே’ என்கின்ற தன்மையில், இலட்சக் கணக்கில் இப்படி வாரியிரைத்துப் பதறப் பதற நாசமாகிக் கொண்டிருப்பதை – நாம் இன்னமும் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வாறுதான் இருக்க வேண்டுமா?” என்று வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். பாரதீய சனதாவினர் தங்களை இந்துத்துவவாதிகள் எனக்கூறிக்கொண்டு செயலாற்றுகின்றனர். ஆனால், அன்றைய பேராயக் கட்சி ஆட்சி அப்படிச் சொல்லாமலேயே இந்துவிய ஆட்சியை நடத்தி வந்துள்ளனர் என்பதைத் தந்தை பெரியார் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பேராயக் கட்சியினருள் இந்துவிய வெறி உணர்வுடன் செயலாற்றிய பல பார்ப்பனத் தலைவர்களும் அவர்களுக்குத் துணையாகச் சூத்திரத் தலைவர்களு,ம் இருந்தனர் என்பதையே தந்தை பெரியாரின் சொற்கள் மெய்ப்பிக்கின்றன.
பேராயக்கட்சியில் நிறைந்திருந்த இந்துவியர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் சரியான முறையிலேயே நடைமுறைப்படுத்தியுள்ளனர். சமற்கிருதம் செம்மொழிப்பட்டியலில் இடம் பெறாக் காலத்திலேயே அம்மொழிக்காக எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள். தமிழுக்குச் செம்மொழி நிலை வழங்கிய பின்னரே சமற்கிருதத்திற்கு அந்த நிலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
பெங்களூரு முத்துச்செல்வன்
Leave a Reply