(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9  தொடர்ச்சி)

தலைப்பு-ஆரியச்சூழ்ச்சி, பெரியார், முத்துச்செல்வன் ;thalaippu_aariya-chuuzhchi_muthuchelvzn

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்

9/9

 அத்துடன் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியபோது. “இந்தியால் தமிழ் கெட்டுவிடும் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்தியால் மட்டுமல்ல வேறெந்த மொழியாலும் நமது மொழியைப் பொறுத்தவரையில் கெட்டுவிடாது. ஆனால், இந்தியால் நமது பண்பாடு அடியோடு அழிந்துவிடும். இப்போதே வடமொழி நம் நாட்டில் புகுந்து, நமது பண்பாடு எவ்வளவு கெட்டுவிட்டது?” என்று கருத்தறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (விடுதலை 15.8.1948). தமிழை எம்மொழியாலும் அழிக்க முடியாது என்பதில் தந்தை பெரியார் உறுதியாக இருந்துள்ளார் என்பதையே மேற்கண்ட வரிகள் மெய்ப்பிக்கின்றன.

  இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தந்தை பெரியாரே விளக்கியுள்ளார்.  1.8.1938 –இல் திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் படை வழிஅனுப்பு விழாவில் ஆற்றிய உரையாயினும் இன்றும் – சமற்கிருதத் திணிப்புச் சூழலில் –  தேவைப்படுவதாகவே உள்ளதை உணரலாம்.

 “இன்று இக்கொடுமையில் இருந்து தப்புவதற்குத் தமிழ்மக்களுக்கு வேண்டியது முதலாவது ஒற்றுமையாகும். நிலைகுலைந்த தமிழ்மக்கள் முதலில் நிலைபெற வேண்டும்; ஒன்று சேர வேண்டும்; சில்லறை கருத்து  வேறுபாடுகளை, பொறாமையை விட்டு, உடன்பிறப்பு உணர்ச்சி கொள்ள வேண்டும். தங்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தப் பாகத்தை இந்த அருமையான – முதன்மையான செயலுக்கு உதவலாம் என்று கவலை கொள்ள வேண்டும். … … எதிரிகள் கொடுங்கோன்மையை ஒழிக்க – தங்கள் தங்களைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் தியாகத்தைச் செய்யலாம் என்று நன்றாய் எண்ணி முடிவுக்கு வந்து வெளியில் புறப்பட்டுவிட வேண்டும். இத்தியாதி காரியங்கள் செய்யாவிட்டால், இந்த 50 அல்லது 100 ஆண்டுகளுக்குள் தமிழ்மக்கள் அடைந்துள்ள சுதந்திரம், மானம், சமத்துவம் எல்லாம் நாசமாகிப் பழைய வர்ணாசிரம தர்ம நிலைக்குப் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்பதை நன்றாக உணருங்கள்.” – விடுதலை 2.8.1938.

   சமற்கிருதம் குறித்துப் பார்ப்பனர்கள் ஒற்றுமையாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த ஒற்றுமை உணர்வு நம்மிடையே உள்ளதா என்பது ஐயத்திற்குரியதாகவே உள்ளது. தமிழர்களுக்கு இன உணர்ச்சி குறைந்ததற்கு, ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதும் ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இனவுணர்ச்சி வலிமை பெறவில்லை என்பது மட்டுமல்லாமல் இருந்த உணர்வும் குறைந்துவிட்டது என்று வருந்தும் பெரியார், “மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததியினர்க்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்” என்று தமிழர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் (விடுதலை 25.7.1972)

  தமிழரிடையே வளர வேண்டிய ஒற்றுமை உணர்வு குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒவ்வொரு சொல்லும் நமக்குப் பாடமல்லவா?  நம்மிடையே அந்த உணர்வு உள்ளதா? “சில்லறை கருத்து  வேறுபாடுகளை, பொறாமையை விட்டு, உடன்பிறப்பு உணர்ச்சி கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறாரே! தமிழ்நாட்டின் பொதுச் சிக்கல்களை எடுத்து வைப்பதிலும் அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் அத்தகைய உணர்வு உள்ளதா என்பதை எண்ணிப் பார்ப்பீர்!

  பெரியார்  கூறியவாறு ஒற்றுமை உணர்வை நாம் பெற்றோமானால், இந்தித்திணிப்பு, சமற்கிருதத்திணிப்பு முதலான ஆரியச் சூழ்ச்சிகளை முறியெடுத்து நம்மொழியையும் நம் இனத்தையும் காக்கலாம்.

(நிறைவு)

–    பெங்களூரு முத்துச்செல்வன்