(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 –தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37

8. தன்னம்பிக்கையும் தன்மான வீரமும்

 

பெருங்கவிக்கோ தன்னம்பிக்கை மிகுந்தவர்; தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர்; தன்மானம் மிக்கவர்; அதில் முகிழ்த்த வீரமும் துடிப்பும் கொண்டவர்.

அவருடைய இப்பண்புகள் அவரது கவிதைகளில் ஒளிப்பொறி சிதறிப் பல இடங்களிலும் பரவிக் கிடப்பதைக் காணலாம்.

காலமெல்லாம் விழித்திருந்தே

கடமையாற்றும் கவிஞன் நான்

அவனும் இவனும் எவனும் ஒன்றாய்

ஆகும் கொள்கை யுடையவன் யான்

விருப்பு வெறுப்பை வென்று வாழும்

வேதாந்தி போல் ஞானி நான்

என்று அவர் அறிவிக்கிறார்.

என்னைப் போல் முயற்சிக்கே இவ்வுலகில்

எவன் பிறந்தான்! கையில் செப்புப்

பொன் பொருள்கள் சிறிதுமிலா நிலையில் கூடப்,

புலம்பாமல் அஞ்சா நெஞ்சத்  

தன்னேரில்லாத வகை உழைக்கின்றேன்!

தாரணியில் தமிழே மேன்மைப்

பன்னலமும் பெருகிடப் பேராசை கொண்டே

பணிசெய்தேன்! பகைமை வென்றேன்!

என்று கவிஞர் கூறுகிறார்.

பெருங்கவிக்கோ ஓயாத உழைப்பில் மகிழ்ச்சி காண் பவர். பிறருக்கு உதவி புரியும் நல்ல மனம் பெற்றவர். இவை பற்றி அவர் ஒரிடத்தில் குறிப்பிடுகிறார்:

 ஒடியாடித் தினம் உழைத்து மகிழ்கிறேன்

ஓய்வுக்கு நேரமில்லை-பாக்கள்

பாடித் தேடித்தினம் பண்பட்டுத் தேர்கின்றேன்

பயணம் முடியவில்லை.

 

பிறர்க்குதவி செய்யப் பெருங்கேடு வந்தாலும்

பின்னுக்குப் போகவில்லை-நெஞ்சம்

அறந்தவறிப் பழி ஆக்க நினைப்பினும்

அதனை யான் செய்யவில்லை.

 

ஊரார் பணத்திலே நீராடி என்னையான்

ஊட்டி வளர்க்கவில்லை-யானும்

பேராக வேண்டுமென்றே வஞ்சகர் மார்பினைப்

பிடித்துத் தழுவ வில்லை.

 

உண்மை நெறியுண்டு உறுதிப் பணிவுண்டு

ஊக்கப் பெருக்கமுண்டு-சிங்கத்

திண்மைக் குணத் தமிழ் செயல்வீர வாளுண்டு

தீமைக் கொலைகளுண்டு!

 

அவரது துணிவு குறித்துக் கவிஞர் இவ்விதம் பாடுகிறார்.

 

இதய அகலில் ஏற்றிய தீபம்

என்றன் துணிவடா-துன்ப

விதவிதமான புயலின் நடுவினிலும்

வென்றதம் மணியடா!

(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்