57neerkkaakam

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை

தேனிப்பகுதியில் பகுதியில் ஆலைக் கழிவுகளால் நீர்க்காக்கை இனங்கள் அழிந்து வருகின்றன.

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், வைகை அணை, அ.வாடிப்பட்டி பகுதிகளில் காப்பித்தொழிற்சாலை, சர்க்கரைத்தொழிற்சாலை, சாயத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரோடு கலந்து விட்டன. மேலும் கழிவுநீர்களை இப்பகுதியில் உள்ள ஊருணிகளில் இரவோடு இரவாக ஊற்றி வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள், பறவைகள் இறந்து வருகின்றன.

நவம்பர் மாதம் முதல் பிப்பிரவரி மாதம் வரை இப்பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்தத்தண்ணீரில் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள், கொக்குகள், நீர்க்காக்கைகள் போன்றவை தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேடும். அதன்பின்னர் அங்குள்ள மணல்திட்டுகளிலும், குளங்களில் உள்ள மரங்களின் கிளைகலும் கூடுகட்டியும் வாழும். இரண்டு சிறகுகளையும் நன்றாக விரித்து வைத்துக்கொண்டு கரையோர மரங்களில் நீர்க்காகங்கள் உட்கார்ந்து அதன்பின்னர் மீண்டும் தண்ணீரில் கூட்டம் கூட்டமாக நீந்திச்செல்லும்.

காக்காவைப்போல் கறுப்பாக இருப்பதாலும் நீரில் இருப்பதாலும் நீர்க்காகங்கள் என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இவற்றில் சிறிய நீர்க்காகம், பெரிய நீர்க்காகம் என இரண்டு வகை உண்டு. நீரில் இருக்கும்போது இந்தப் பறவை வாத்தைப்போலத் தோற்றமளிக்கும். வாத்துக்கு இருப்பதைப்போலவே, இதன் கால்களில் சவ்வு இருக்கும். சிறிய நீர்க்காகங்கள் அண்டங்காக்கைகளை விடப் பெரியதாக இருக்கும்.

ஆறு, குளம், குட்டை போன்றவற்றில் காணப்படும் பெரிய நீர்க்காகம் இதை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும்.

இவ்வாறு அரியவகையான நீர்க்காகங்கள் இப்பகுதியில் உள்ள குளங்களில் மாசுபட்ட தண்ணீரைக் குடிப்பதால் நோய்வாய்ப்பட்டு செத்து மிதக்கின்றன.

எனவே பொதுப்பணித்துறையினர் குளம், குட்டைகளை மாசுபடுத்துவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

57vaigai aneesu_name