ஆளுநராயினும் நா காக்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
வரலாற்றை அறியாமலும் அறிந்தும் வரலாற்றை மறைத்தும் யாராக இருந்தாலும் உளறக்கூடாது என்பதை உணர்ந்து உண்மையைக் கூற வேண்டிய உயர்ந்த பொறுப்பில் உள்ள ஆளுநர், தமிழ்நாடு என்னும் பெயரை அகற்றும் வகையில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள் 355)
என்பதை உணர்ந்து பேச வேண்டியவர், தமிழ்நாடு என்னும் பெயரின் உண்மை வரலாறு அறியாமல் இப்பெயரை மாற்ற வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார்.
“தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” எனப் பேசியுள்ளார்.
பா.ச.க. ஆட்சியில் ஆளுநர்கள், பாசக மாநிலத் தலைவர்களாகச் செயற்பட்டு ஆளுநர் மாளிகையைப் பா.ச.க. அலுவலகமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
அதன் விளைவுதான் இதில் பேசியுள்ள இரு தொடர்களும். கட்சித் தலைவர்போல் திராவிட ஆட்சி என்றெல்லாம் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதற்குத் தமிழ்நாட்டுக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழ்நாடு என்பதைச் சரியல்ல என்னும் தொனியில் பேசியதைப் பார்ப்போம்.
தமிழ்நாட்டுக் கட்சிகளும் தமிழார்வர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுபோல் நாமும் எதிர்ப்பைத் தெரிவிப்பதே முறையாகும்.
திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனப் பேசியுள்ள மேதகு மேதைக்கு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் எனப் பெயர் மாற்றுவதற்கான சட்ட வரைவைக் கொண்டுவந்த பூபேசு குபுதா திராவிடக் கட்சித் தலைவர் அல்லர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர். அதுபோல் தமிழ்நாடு சட்டமன்றத்தில், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் கோரித் தீர்மானத்தைக் கொண்டுவந்த பி.எசு.சின்னதுரை திராவிடக்கட்சியைச் சேர்ந்தவர் அல்லர்.
மக்கள் சமவுடைமைக் கட்சியின் (பிரசா சோசலிசுட்டுக்கட்சியின்) சட்ட மன்ற உறுப்பினர்.
தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரும் திராவிடக் கட்சியினர் அல்லர்; பேராயக்கட்சியான காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.
இந்திய விடுதலைக்கு முன்னரும் இம்மாநிலத்தைச் சென்னை மாகாணம் என்றும் சென்னை மாநிலம் என்றும் அழைத்தாலும் 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு முன்னரும் பொதுமக்களும் பெரும்பாலான கட்சியினரும் தமிழ் அமைப்பினரும் தமிழ்நாடு என்றுதான் குறிப்பிட்டு வந்தனர்.
இதிலிருந்தே தமிழ்நாடு என்பதுதான் அனைத்துத் தரப்பாரின் விருப்பம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (1949), தமிழ் நாடு மின்சார வாரியம் (1957), தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்(1955) முதலான அரசு நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பலவற்றின் பெயர்களும் தமிழ்நாடு என்றே குறிக்கப்பட்டன.
தமிழ்நாடு என்பது இன்று நேற்று வந்த பெயரன்று. காலங்காலமாகத் தமிழ்நாடு என்று அழைத்து வந்தமையை இலக்கியங்கள் கூறுகின்றன.
சேர சோழ பாண்டிய மூவேந்தர்கள் ஆண்ட பொழுதிலும் தமிழ்நாடு என்று குறிப்பிட்டு மகிழ்ந்து வந்தனர்.
“இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய” எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார்.
“தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு அகம் எல்லாம்’ எனப் பரிபாடல் கூறுகிறது.
சேக்கிழார் தம்முடைய காப்பியமான பெரிய புராணத்தில் பின்வருமாறு 12 அடிகளில் தமிழ்நாடு/தமிழ்நாட்டு எனக் குறித்துள்ளார்.
1. “சந்த பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம்”
2. “வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து”
3. “ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற”
4. “பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்த”
5. “தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார்”
6. எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு”
7. “பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம்”
8. “நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி”
9. “புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு”
10. “தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன்”
11. “தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார்”
12. “செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான”
இவ்வாறு காலந்தோறும் இலக்கியங்களில் புலவர்களும் வழி வழி மக்களும் நம் நாட்டைத் தமிழ்நாடு என்றே அழைத்துவந்துள்ளனர்.
இப்பொழுதும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக அளவிலும் தமிழ்நாடு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, கட்சிப்பணிகளை ஆளுநர் போர்வையில் ஆற்றி வரும் மேதகு மேதை இனிமேலாவது தம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவர் போல் வேறு சில எழுத்தாளர்களும் கட்சியினரும் தமிழ்நாடு என்று குறிப்பதை மாற்றித் தமிழகம் எனக் குறிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அல்லது தமிழ்நாட்டு மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள்.
நம் முன்னைப் புலவர்கள் வழி நாமும்,
நம் நாடு தமிழ் நாடு நாமெல்லாம் தமிழ் மக்கள்
இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே
அம்மூச்சும் தமிழே!
என முழங்குவோம்.
இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி: தாய், 06.06.2023
Leave a Reply