ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால்

கைதும் விடுதலையும்

 நக்கீரன் இதழாசிரியர் நக்கீரன் கோபால், நேற்று(9.10.2018) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து, பேரா.நிருமலாதேவி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து நக்கீரன் இதழில் வருவதாகவும் இவை ஆளுநரை மிரட்டுதல், ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகியன தொடர்பான குற்றப்பிரிவு 124.அ இன்கீழ் வருவதாகவும் காவல் துறையினர் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் இதை உசாவிய எழும்பூர் 3 ஆவது பெருநகர நடுவர் கோபிநாத்து, குற்றச்சாட்டு பொருந்தவில்லை எனக் கூறி நக்கீரன் கோபாலை விடுதலை செய்தார்.

  கருத்துரிமையை மதித்து நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோபிநாத்திற்குப் பாராட்டுகள்.

  ஆளுநர் மாளிகை தந்த முறையீட்டின் அடிப்படையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

  சட்டம்பற்றி ஒன்றும் அறியாப் பாமரனுக்குக்கூட இச்சட்டப்பிரிவைப் படிக்கும் பொழுது பொருத்தமற்ற  குற்றச்சாட்டு என்பது நன்கு புரியும். அவ்வாறிருக்க மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இவ்வாறு தவறான குற்றச்சாட்டை முன் வைத்தது எவ்வாறு எனத் தெரியவில்லை. தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்காமல் நேரடியாக இறங்கிக் களங்கப்பட்டதும் ஏன் எனப் புரியவில்லை?

  ஒருவேளை தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறி அவர்கள் மறுத்துவிட்டனரோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் வந்துள்ள செய்திகள், மேதகு ஆளுநர், அவர் செயலர், இருவரின் அறிவுறுத்தலில் தலைமைச்செயலர் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கின்றன. இத்தகைய செயல்பாடு மக்களாட்சி மாண்பிற்குக் கேடு விளைவிக்கும் என்பதை உணராதது ஏன் என்றும் தெரியவில்லை?

  மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம் ஏற்படும்? உண்மையில்லாத செய்திக்கு ஏன் கவலைப்பட வேண்டும்? அல்லது தொடர்ந்து வரும் செய்திகளால் தன் பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்று கருதினால் முதலில் குறிப்பிட்டவாறு தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். மேதகு ஆளுநர் அலுவலகத்திலிருந்தே முறைப்பாடு வந்துள்ளதால் வழக்கு உசாவல் என்றால் எதிர் வழக்குரைஞர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மேதகு ஆளுநர் அலுவலகத்தினர் விடையிறுத்தாக வேண்டும். மேதகு ஆளுநரும் உசாவல் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் எழலாம். பொதுவாக இதழ்களுக்கு வரும் அனைத்துச் செய்திகளையும் வெளியிட மாட்டார்கள். பக்கங்களும் போதா. ஆனால் வழக்கு என்றால் அனைத்துத் தகவல்களும் நீதிமன்றத்திற்கு வரும். சிலர் வேண்டுமென்றே தவறான செய்திகளை அனுப்பியிருக்கலாம், அவையும் நீதிமன்றத்தின் முன்னர் வரும்.  இவற்றால் ஏற்படும் களங்கம்தான் பெரிதாக இருக்கும்.

 நக்கீரன் கோபால் பல அச்சுறுத்தல் வழக்குகளைச் சந்தித்தவர். ஆதலின் வழக்குகளுக்கும் சிறைப்படுத்தலுக்கும் அஞ்சா நெஞ்சினர். அவ்வாறிருக்க மேல் மட்டம் கீழிறங்கி அச்சுறுத்த முன்வந்ததற்குக் காரணம் யாரும் பாசகவினரோ என்ற ஐயமும் வருகிறது.

 காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி ஆளுநருடன் விருந்துண்டபொழுது இவ்வறிவுரை வழங்கப்பட்டிருக்குமோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. நாட்டுமக்கள் அனைவரும் நக்கீரன் படிப்பவர்கள் அல்லர். ஆனால் செய்தியிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் மாணாக்கியரை அலுவலர்களுடன் உறவு கொள்ள வைத்து ஆதாயம் அடைந்த நிருமலாதேவி, மேல்மட்டம் வரை தொடர்பிருப்பதாகக் கூறியது இடம் பெற்றது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் அத்தனை ஊடகங்களையும் மிரட்டும் தொனியில் நக்கீரன் கேபால் கைது செய்யப்பட்டாரா? இதற்கு மாறாகத் தொடர்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் சான்றாதாரங்களை வெளிப்படுத்துவதுதானே முறையாக இருக்கும். அவ்வாறில்லாமல் அடக்குமுறையிலும் ஒடுக்கு முறையிலும் ஈடுபட்டு யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயலைச் செய்யலாமா?

  மக்கள் ஏடு/இட்டவாடா(The Hitavada) என்னும் இதழின் ஆசிரியராக இருந்தவர் நம் ஆளுநர். அவரே இதழ்களை – பத்திரிகைகளை – அடக்கி ஒடுக்கும் முயற்சியில் இறங்கலாமா? அதுவும் ஏப்பிரல் மாதம் வந்த கட்டுரைக்கு இப்பொழுது நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார்கள். அதுவும் முறைதானா? போனது போகட்டும்  வழக்கில் அசிங்கப்பட்டதாக எண்ணித் தன்மானச் சிக்கலாகக் கருதாமல் இத்துடன் நக்கீரன் மீதான நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மாறுதல் பெற்றுச் செல்ல வேண்டும்.

  குற்றம் சுமத்தப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு வதாட வந்த வைகோ சிறைக்காவலில் உள்ளார். அவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.

  அனைத்துக்கட்சித் தலைவர்களும் இதழுலகினரும் இக்கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர். ஆனால் அமமுக துணைப்பொதுச்செயலர் ச.ம.உ. தினகரன் வரவேற்றுள்ளார். நக்கீரன் தனக்கு எதிரானது எனக் கருதி அவ்வாறு தெரிவித்துள்ளாரா எனத் தெரியவில்லை. ஆளுநர் அல்லது பாசக ஆதரவு நிலைப்பாட்டைக் காட்ட விரும்பி அவ்வாறு வரவேற்றாரா எனப் புரியவில்லை. குறைந்தது உசாவி அறிந்தபின் கைது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றாவது சொல்லியிருக்கலாம். எனினும் அரசியல் முதிர்ச்சியாளராகத் தோற்றமளித்தவர் தானே விரும்பிச் சறுக்கிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

  தனிமனிதர் மீதான ஐயப்பாட்டை நாட்டெதிர்/தேசத்துரோக வழக்காக மாற்ற எண்ணுவது அவ்வாறு முயல்வோருக்குத் தீங்கே விளைவிக்கும். எனவே எதற்கெடுத்தாலும் தேச வஞ்சகம்/இரண்டகம் எனத் திரிக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். மக்களாட்சியின் தூணாக விளங்கும் ஊடகங்கள் காக்கப்பட வேண்டும். ஊடகஅறங்களும் பேணப்பட வேண்டும். மறைமுக நெருக்கடி நிலைக்கும் மறைமுக ஆளுநர் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசு தன்னுரிமையுடன் செயல்படவேண்டும்!

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.(திருவள்ளுவர், திருக்குறள் 554)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல