ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆவணியில் தொடங்குவது ஆண்டு!
சித்திரையில் தொடங்குவது வருடம்!
தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன்.
60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும். அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை.
வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஆண்டு என்பது என எண்ணுவோரே உள்ளனர். வருடம் என்று சொன்னால் தமிழ்ப்பற்றற்றவன் என முத்திரை குத்தும் தனித்தமிழன்பர்களும் உள்ளனர். ஆனால் இரண்டுமே வெவ்வேறு காலப் பகுப்பைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களே!
ஆண்டு, வருடம் இரண்டுமே ஏறறத்தாழ 365 நாட்களும் 12 திங்களும் 52 வாரங்களும் கொண்ட கால அளவுதாம். ஆனால்,அத்தகைய காலத்தின் தொடக்கமும் நிறைவும் வெவ்வறோனவை.
பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பியர் காலத்தில் ஆண்டின் தொடக்கம் ஆவணியாக இருந்திருக்கும் என்கிறார். அவர்,
அறிஞர்கள் சிலர் தொல்காப்பியர் காலத்தில் ஆண்டுத் தொடக்கம் கார் பருவத்தின் முதல் திங்களாகிய ஆவணி எனக் கருதுகின்றனர். கேரளாவில் இன்றைய நாளிலும் ஆவணியை முதலாகக் கொண்ட ஆண்டினை கணக்கிட்டு வருவது நடைமுறையில் இருப்பதை இதற்குச் சார்பாகக் கூறுவர் (நூற்பா. 6, 7, 8, 9, 10 இவற்றிற்கான நச்சினார்கினியர் உரை)
எனத் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (பக்கம் 480) என்னும் நூலில்(Tholkāppiyam in English with critical studies) குறிப்பிடுகிறார்.
“கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன. பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.” என்றும் செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 137) தெரிவிக்கிறார்.
இதுதான் சரியானது என்பதை ஆண்டு என்பதன் சொற்பொருளே விளக்குகிறது.
365 நாளுக்கு ஒரு முறை முளைக்கும் மூங்கிலுக்கு ஆண்டு எனப் பெயர். அண்டையிற் கிளைத்து முளைக்கும் மூங்கில் முளை அண்டு எனப்பெற்றது; ஆண்டு என மாறியது. இக்குறிப்பைச் செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியிலும் காணலாம்.
மூங்கில் முளைக்கும் திங்கள் ஆவணி. எனவே, ஓராண்டுக் கால அளவைக்குறிப்பிடும் மூங்கில் தோன்றிய மாதத்தில் இருந்து ஆண்டினைக் கணக்கிட்டுள்ளனர்.
சேரநாடாக இருந்த கேரளத்தில் தமிழில்இருந்து கிளைத்த மலையாள மொழியில் மூங்கில், ஆண்டு எனக் குறிக்கப்படுகின்றது; ஆவணி முதல் ஆடி முடிய உள்ள காலத்தை ஆண்டுப் பகுப்பாகக் கருதும் ஆண்டுக்கணக்கு நடைமுறை உள்ளது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் ஆண்டு என்பது ஆவணி முதல் ஆடி முடியவே என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.
நிதியாண்டு, கல்வியாண்டு, வேளாண்(பயிர்)ஆண்டு என்று நாம் வெவ்வேறு வகையாக இப்பொழுது குறிப்பிடுகிறோம். இவைபோல் சித்திரையை முதலாகக் கொண்ட 12 மாதக் காலப்பகுப்பும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், எப்பொழுதிலிருந்துவந்தது என்று தெரியவில்லை. சூரியன் முதலான கோள்கள், சுழற்சிகள் மாற்றத்தின் அடிப்படையில் சித்திரை முதலாகக் கொண்ட வருடம் தோன்றியிருக்கலாம். நிகண்டுகளிலும் வருடம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது
சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடிவது வருடம். சித்திரைத்திங்கள் மேழ ஓரையில் வருகிறது. மேழம் என்பது வருடை என்னும் ஒரு வகை ஆட்டைக் குறிக்கும். வருடையில் தொடங்கும் ஆண்டுப்பகுப்பு வருடம் எனப்படலாயிற்று. வருடம் என்பதை நாம் ‘வருசம்’ எனக் குறிப்பதால் தமிழ்ச்சொல்லல்ல என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. வேறு காலப்பகுப்பைக் குறிக்கும் ஆண்டு என்னும் சொல்லே வருடத்திற்கான நல்ல தமிழ்ச்சொல் என நாம் எண்ணிவிட்டோம்.
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து (நக்கீரர்: நெடுநல்வாடை: அடிகள் 160-161)
என வரும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஆட்டினை – சித்திரையை – முதலாக உடைய காலப்பகுப்பைக் குறிக்கின்றது.
சித்திரையை ஆண்டுத் தொடக்கமாகக் கூறும்பலரும் இவற்றை விளக்கியுள்ளனர்.
ஆனால், மற்றொரு செய்தியும் உள்ளது. நட்சத்திரங்கள் அடிப்படையில் பார்த்தாலும் 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் புரவி (அசுவினி) என்பதாகும். அடுத்தது அடுப்பு(பரணி), மூன்றாவது ஆரல்(கார்த்திகை). புரவி, அடுப்பு, ஆரலில் ஒரு பகுதி தோன்றும் காலம் சித்திரைத் திங்களாகும். எனவே, நட்சத்திரங்களின் அடிப்படையில் பார்த்தால் வருடத் தொடக்கம் என்பது சித்திரைதான்.
ஆனால், சித்திரை வருடத்திற்கும் ஆவணிஆண்டிற்கும் இடையில் தையை முதலாக உடைய காலப்பகுப்பு இருந்திருக்கலாம். சிலர் தொல்காப்பியர் காலத்திற்கும் முன்னர் முதலில் தை ஆண்டுத் தொடக்கமாக இருந்திருக்கும் என்கின்றனர். அவ்வாறு இருந்து சான்றுகள் கிடைக்காவிட்டாலும் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும் நாம் தை முதல்நாளை ஆண்டுப்பிறப்பாகக் கொள்ளத் தடை ஏதும் இல்லை.
சல்லிக் கட்டு என்பது கிரந்த எழுத்துப் பயன்பாட்டில் குறிக்கப்பெறுகிறது. இதனால் ஏறுதழுவல் தமிழர்க்குரியதல்ல என்றாகிவிடுமா?
தொடக்கத்தில் 60 ஆண்டு காலச் சுழற்சி முறையும் பயன்பாட்டில் இருந்துள்ளது. சீனாபோன்ற நாடுகளில் இன்றும் அறுபது ஆண்டுமுறை உள்ளது.
தமிழகத்திலும் 60 ஆண்டு சுழற்சி முறை இருந்துள்ளது. பின் வந்த ஆரியர்கள், கிருட்டிணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த குழ்நதைகளே 60 ஆண்டுகள் என ஒழுக்கததிற்கும் பண்பாட்டிற்கும் கேடுவிளைவிக்கும் கதையைக் கட்டியதாலும் பழந்தமிழ்ப்பெயர்களை அழித்து சமற்கிருதப் பெயர்களைச் சூட்டியதாலும், நம்மால் இவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகிறது.
பழம் ஓலைச்சுவடிகள் அல்லது தொல்லாராய்ச்சி மூலம் 60 ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள் கிடை த்தால் நாம் அவற்றைப் பயன்படுத்தலாம். திணிக்கப்பட்ட சமற்கிருதப்பெயர்களுக்கான தமிழ்ப்பெயர்களைச் சூட்டி அதைப் பயன்படுத்தத் தேவையில்லை. எனவேதான், திருவள்ளுவர் ஆண்டு என்னும் தொடர் ஆண்டினைத் தமிழறிஞர்கள் வலியுறுத்தினர். அரசும் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்துள்ளது. அரசின் ஆணைகளில் தவறாமல் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெறுகிறது. இலக்கிய இதழ்களில் திருவள்ளுவர் ஆண்டினைக் குறிக்கின்றனர். ஆனால், அழைப்பிதழ்கள், கல்வெட்டுக்குறிப்புகள், பத்திரப்பதிவுகள்,அன்றாட நடைமுறை ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. நாம் அனைவரும் உறுதிஎடுத்து எல்லா இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த வேண்டும்.
திருவள்ளுவர் ஆண்டினைப் பின்பற்றும்போது, இயல்பாகவே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமான தை முதல்நாள்தானே ஆண்டுப்பிறப்பாகும். எனவே, தமிழ்ப்புத்தாண்டாகத் தை முதல்நாளைக் குறிப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், தமிழ்நாட்டில் கட்சிகைளப்பொருத்தே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக செய்தனவெல்லாம் தவறு. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக செய்தனவெல்லாம் தவறு என்னும் போக்கே மேலோங்கியுள்ளது. மாறி மாறி ஆண்டுத் தொடக்கத்தை மாற்றுவது என்பது நல்ல நடைமுறை யல்ல. இதனைத் தவிர்க்க,
ஆவணி முதல்நாள் தொல்காப்பியர் ஆண்டுத்தொடக்கம்
தை முதல்நாள் திருவள்ளுவர் ஆண்டுத்தொடக்கம்
சித்திரை முதல்நாள் இளங்கோவடிகள்ஆண்டுத் தொடக்கம்
என்று பின்பற்றலாம்.
அரசாணைக்கிணங்க நடைமுறையில் உள்ள திருவள்ளுவர் ஆண்டினை எல்லா இடங்களிலும் கட்டாயமாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று ஆண்டுப்பிறப்பையும் சிறப்பாகக்கொண்டாட வேண்டும். இதன் மூலம் சித்திரையில் தொடக்கத்தில் ஆண்டுப்பிறப்பைக் கொணடாடியவர்களும் வழக்கம்போல் கொண்டாட வழி ஏற்படும். தை முதல்நாளே ஆண்டுப்பிறப்பு என்போரும் தமிழ்ப்புத்தாண்டினைக் கொண்டாடி மகிழலாம். நமக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண இலக்கியமான மூவாயிரம் ஆண்டிற்கும் முற்பட்ட தொல்காப்பியம், தொல்காப்பியர் சிறப்புகளைப் பாரறியச் செய்யலாம்.
ஆவணி முதல் நாளே ஆண்டின் தொடக்கம் !
சித்திரைமுதல் நாளே வருடத்தின் தொடக்கம்!
தை முதல்நாளே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம்!
என்பனவற்றை ஏற்று முவ்வகை ஆண்டுப்பகுப்பையும் போற்றுவோம்!
தமிழின் சிறப்பை நாளும் பரப்புவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
மிகப் புதிய தகவல்கள்! மிக்க நன்றி ஐயா!