இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்!

இந்தியா மக்களாட்சி நாடு என்று சொல்லப்பட்டாலும் மத்திய மாநில அரசுகளே மக்கள் நாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதுதான் வழக்கமாக உள்ளது. தேர்தல் மூலம்தான் மக்கள் நாயகமே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையமே மக்களாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வதில்லை. ஆளும் தலைமையின் தாளத்திற்கேற்ப ஆணையம் ஆடுவதால் மக்களாட்சியும் சிதைக்கப்படுகிறது. பல நல்ல தீர்ப்புகளை வழங்கும் நீதி மன்றங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உண்மையான ஆட்சிதான் அரசை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று எண்ணுவதில்லை.

இவ்வாறான நாணயமற்ற நாணமற்ற செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் சட்ட மன்றம் தலைக்குனிவிற்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மக்களாட்சி முறை தேவையில்லை என்னும் புதிய இலக்கணம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை; மத்திய அரசின் ஏவலரான ஆளுநர் ஒருவரின் ஆதரவு இருந்தால் போதும் என்று உருவாக்கப்படுகிறது. மக்களின் ஆதரவைவிட மத்திய அரசின் முறையற்ற ஆதரவு இருந்தால் ஆட்சி நடத்தலாம் என்பது செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் துறைகள் மக்கள் பணியாற்றுவதற்குரியன அல்ல; மத்திய அரசின் ஏவலைச் செய்யும் வேட்டையாடும் துறைகள் என மெய்ப்பிக்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான நிலைப்பாடுகளில் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட அணுகுமுறை. தமிழகச்சட்ட மன்றத்தில் ஆட்சித் தலைமை மீது நம்பிக்கையின்மையை மாநிலத்தலைமையான ஆளுநரிடம் முறையீடு கொடுத்ததற்கு ஒரு நீதி. சட்ட மன்றத்தில் ஆளும் தலைமை மீது நம்பிக்கையில்லை என வாக்களித்தவர்கள் தொடர்பில் வேறொருவகை நீதி.

உண்மையில் யார் பக்கம் இருக்க வேண்டுமோ அவர்கள் பக்கம் நீதித்துறை இல்லை.

தேர்தல் ஆணையமும் தேர்தல் சின்னம் தொடர்பான முறையீடுகளில் முறையற்ற தீர்ப்புகளை வழங்குகிறது. மத்திய அரசின் தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் சரியான முறை என்னும் அறமுறையற்ற நிலைப்பாட்டைப் பின்பற்றி வருகிறது. 

இதனால் மக்கள் பெரும்பான்மை ஆதரவு இலலா ஆட்சி நடைபெறுவதாக எண்ணுகின்றனர். தத்தம் தொகுதி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களின் சட்டமன்றக் கடமையை ஆற்ற முடியாமையால் தொகுதி நலன்கள் பாதிக்கப்படுவதாகக் கவலைப்படுகின்றனர். ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்சி நடக்கின்றது. தமிழக ஆட்சி மத்திய அரசின் மிரட்டல்களுக்கு அடி பணிந்தாலும் ஆட்சி காப்பாற்றப்படுவதால் மகிழ்ச்சியில்தான் திளைக்கிறது.

இந்தச் சூழலில் பதவி பறிக்கப்பட்ட பதினெண்மரும் கட்டுக்கோப்பாகத் தடம் புரளாமல் விலை போகாமல் உறுதியாக நிற்பது பாராட்டிற்குரியது. அவர்களை அவ்வாறு வழிநடத்தும் தினகரன் செயற்பாடும் போற்றுதற்குரியது.

இவர்களுக்கு எதிராக நடைபெற்ற அறமுறையற்ற செயல்களை நாம் முன்னரும் சுட்டிக்காட்டியுள்ளோம். மக்களும் நன்கறிவர். இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருப்பது மக்கள் கைகளில்தான் உள்ளது.

இடைத்தேர்தல்களில் மக்கள் வேறு கண்ணோட்டங்களில் வாக்களிக்காமல் இவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி இடமுடியும் என்பதை எண்ணிப்பார்த்து இவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். மாறாக வாக்களிக்கும் பொழுது இதுபோன்ற குறுக்கு வழிகளில் ஆளுங்கட்சிகள் தம் தேவைக்கேற்ப ஈடுபடும். நாம் என்ன குறுக்கு வழிகளில் இறங்கினாலும் மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொண்டால்தான் ஆளுங்கட்சிகள் குறுக்கு வழிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறிக்கா.

சட்டமன்றத் தொகுதிகளில் பதவி பறிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்களித்தாலும் அத்தொகுதி அடங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கட்டும்.

எனவே, சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்ற, உறுப்பினர் பதவிகளைக் குறுக்கு வழிகளில் பறிக்காமல் இருக்க, கட்சிச் சார்பு எண்ணங்களைக் கைவிட்டு, வேறு வகை அளவுகோல்களைத் துறந்து, பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களிக்க வேண்டுகிறோம்.

அதிகார மிகுதியால் அல்லது செருக்கு மிகுதியால் மிக்க தீமை செய்தவர்களை வாக்காளர் என்னும் தகுதியால் மக்கள் வெல்ல வேண்டும். இப்பொழுது, வெல்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு வந்துள்ளது. வாக்குச்சீட்டு ஆயுதத்தால் வெல்க உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டவர்களின் வெற்றி அவர்களுடையதல்ல  மக்களுடையது மக்கள் நாயகத்தினுடையது என்பதை உணர்ந்து செயல்படுக

 

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்

தகுதியான் வென்று விடல் (திருவள்ளுவர், திருக்குறள் 158)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை