இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு!
தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்?
இந்திய விடுதலைக்கு முன்னரே இந்தித்திணிப்பிற்குக் கால் கோளிடப்பட்டது. அதன் ஒரு பகுதிதான் இந்திப்பரப்புரை அவை(இந்திப்பிரச்சாரசபா). இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இந்தித்திணிப்பு என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பேராயக்கட்சியால்(காங்கிரசால்) செயல்படுத்தப்பட்டது. இன்றைய நரேந்திரர்(மோடி) ஆட்சியில் வெகு விரைவாக இந்தித்திணிக்கப்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர் நல மையங்கள் அல்லது ஊழியப் பகுதியில் பொதுவாக இந்தி அல்லது ஆங்கிலம் உள்ளது; குசராத்தி மொழி மிக விரைவாக எல்லா மத்திய அரசு, அரசு சார் நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க தமிழை(யும் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளையும்) அறிமுகப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?
பொதுவாகப் ‘பிறமொழிகள்’ என்னும் தலைப்பில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் எண் கொடுக்கபட்டிருக்கும். பெரும்பாலும் அப்பிரிவு செயல்படாது. அவை செயல்படவில்லை என நாம்ஆங்கிலத்தைத் தெரிவு செய்தாலும் இந்திதான் கேட்கும்; இந்தி பேசுநர்தான் தொடர்பு கொள்வர் அல்லது தொடர்பு அலுவலருக்குப்பேசுவதற்காக எண் 9 ஐ அழுத்தினாலும் வரும் தொடர்பாளர் ‘இந்தி அல்லது ஆங்கிலம்’ என இந்தியிலேயே தெரிவிப்பார். இதுபோன்ற இந்தித்திணிப்புக் கொடுமைகள் கண்டு தமிழ், தமிழ் எனக் கூக்குரலிடுவோர் அமைதி காப்பதேன்?
இங்கே நாம் கூற வந்தது இணைய ஊடகங்களிலான இந்தித்திணிப்புபற்றி.
அச்சுவடிவில் வரும் இதழ்கள் இணையப்பக்கங்களிலும் வெளிவருகின்றன. தனி இணைய இதழ்களும் வருகின்றன. இணையப்பக்கங்களில் காணுரைகள்(videos) இடம் பெறுகின்றன. இதற்கு முன்பு தொடக்கத்தில் விளம்பரம் இடம் பெறும்; அந்தப் பகுதி தேவையில்லை என்றால் நாம் அதனை விட்டுவிட்டுத் தாவிச் செல்ல வாய்ப்பு இருக்கும். இப்பொழுது அவ்வாறல்ல. விளம்பரத்தைக் கண்டிப்பாகப் பார்த்துத்தான் ஆக வேண்டும். ஏனிப்படி என்றால், இப்பொழுது வருவன இந்தி விளம்பரங்கள்.
தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்தித்திணிப்பு தொடங்கப் பெற்றதும் தமிழகக் கட்சிகள் எதிர்க்குரல் எழுப்பியிருந்தால், இந்த நிலை வந்திருக்காது. அவ்வாறில்லாமல் அமைதி காத்ததால், இன்னும் அமைதி காப்பதால், இந்தி விளம்பரங்களுக்கான பச்சசைக் கொடியாக நரேந்திர(மோடி)யின் ஃகிந்திய அரசு(Govt. of Hindia) ஏற்றுக் கொண்டது. எனவே, இணைய விளம்பரங்களை ஃகிந்தி மயமாக்கி வருகிறது.
இந்தியா குடியரசான பொழுது வஞ்சக வாக்கால் இந்தித்திணிப்பு அரங்கேறியது. அப்பொழுது 15 ஆண்டுகளில் – 1965இல்- இந்தி முழுமையாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொலைநோக்கு கொண்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், அவ்வப்பொழுது நடைபெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் போதா எனக் கருதினார். எனவே, 1960 இல் இந்தித்திணிப்பை எதிர்க்கக் ‘குறள்நெறி’ இதழும் தமிழ்க்காப்புக்கழகமும் தொடங்கினார். இதன் மூலம் நாடெங்கும் இந்தி எதிர்ப்புக்கனல் மூட்டப்பட்டது. அத்துடன் பேரறிஞர் அண்ணாவை அழைத்துத் தி.மு.க. விலைவாசிப் போராட்டங்களை விட்டுவிட்டு முழுமையாக இந்தித் திணிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.
பேரறிஞர் அண்ணாவும் அதனை ஏற்றுக் கொண்டு முறைப்படிக் கட்சிப் பொதுக்குழுவைக்கூட்டி இந்திஎதிர்ப்புப் போரில் முழுமையாகத் தி.மு.க.வை ஈடுபடுத்தினார். எனவே, பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், கலைஞர் கருணாநிதி என மேல்மட்டத்தலைவர்கள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டர் வரை இந்தித்திணிப்பின் கொடுமையை மக்களிடம் உணர்த்தினர். இந்திஎதிர்ப்புப்படைத்தளபதி என அழைக்கப்பெறும் பேரா.சி.இலக்குவனார் தலைமையில் மாணவர்கள் அணி அணியாக இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் 1965 இல் ஈடுபட்டனர். இதன் விளைவாக இந்தித்திணிப்பு தடுக்கப்பட்டது பேராயக்கட்சி – காங்கிரசுக் கட்சி – ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்றப்பட்டது அதனால் இதுவரை மீ்ண்டும் கோட்டைக்குச் செல்ல இயலா நிலையை மக்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
ஆனால் இன்றைக்கு அவ்வாறு விழிப்பூட்டும் தமிழ்ப்பேராசிரியர்களைக் காணவில்லை! இந்தி எதிர்ப்புப் போரில் பல களங்களைக் கண்ட தி.மு.க.வும் உறங்குகிறது. அக்கட்சியிலிருந்து கிளைத்து எழுந்த கட்சிகளும் காணா முகமாக உள்ளன. தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கு ‘வந்தேறிகள்’ என வைவதற்கு நேரமிருக்கிறதே தவிர, இது குறித்துச் சிந்திக்க நேரமில்லை.
செல்லும் பணத்தைச் செல்லாதாக்கியதை எதிர்க்க எதிரும் புதிருமாக இருக்கும் பல கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. இந்த ஒற்றுமையை அவர்கள் இந்தித்திணிப்பிற்கு எதிராகவும் காட்ட வேண்டும். கலைஞர் கருணாநிதியை நெறியாளராகக் கொண்டு இக்கட்சிகள் ஒன்றுபடலாம். இவ்வாறு சொல்வதால் தமிழ்ஈழத்தில் அவர் தடம் புரண்டதை ஏற்பதாகப் பொருளல்ல! வேறு காரணங்களுக்காக அவரை எதிர்ப்போர் அவற்றை மறந்துவிட்டு இந்திஎதிர்ப்புப்போரில் அவர் ஆற்றிய தொண்டுகளையும் பட்ட தண்டனைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவது சரியானதே! பிற மாநிலங்களையும் இணைத்து ஓங்கிக் குரல் கொடுத்து இந்தித்திணிப்பை அடியோடுஅகற்ற வேண்டும்.
தமிழகக்கட்சிகள், இந்திப்பரப்புரை அவை தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்படவும் விருப்பப்பாடம் என்ற பெயரில் இந்தி திணிக்கப்படுவதையும் தமிழ்நாட்டிலும், புதுச்சரேியிலும் மத்திய அரசு பள்ளிகளில் இந்திவழிக்கல்வி இருப்பதையும் நிறுத்தவும் விரைந்து செயலாற்ற வேண்டும்.
தமிழ்த்தேசிய இயக்கத்தினர் அல்லது அமைப்பினர் கற்பனையான இந்தி(ய)த்தேசியம் புகுத்தப்படுவதால் தமிழ்த்தேசியம் காணாமல் போகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தி இந்தித்திணிப்பை அகற்ற இணைந்து போராட வேண்டும்.
ஒன்றுபட்ட அமைதியான அறவழிப்போராட்டங்களால் இந்தி அகற்றப்படவும் தமிழ் முதன்மை இடத்தில் வீற்றிருக்கவும் தமிழ்மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். (திருவள்ளுவர், திருக்குறள் 674)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 163, கார்த்திகை 19, 2047 / திசம்பர் 04, 2016
Leave a Reply