இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! -தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 19- இலக்குவனார் திருவள்ளுவன்
இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! –
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 19
(ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 18: தொடர்ச்சி)
இதழ்கள் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்துவதால் தமிழ்க்காப்புப்பணியில் ஈடுபட்டுப் பிற மொழிக்கலப்பிற்கு இடங்கொடாது இதழ்கள் நடத்த வேண்டும். “தமிழே எழுதுக! தமிழையே நாடுக!” என 1915 இலேயே தாம் நடத்திய ‘ஞானபாநு’ இதழில் சுப்பிரமணிய சிவா வலியுறுத்தியுள்ளார். அவர்,
“தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு சன சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதாள். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும், சீரும் அழிந்துவிடும்.” “ உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக!” என வேண்டுகிறார்.
சமற்கிருதக் கலப்பிற்கு எதிராகப் பரிதிமாற்கலைஞர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தென்றல் திருவிக, தேசபக்தன், திராவிடன், நவசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்து நல்ல தமிழ்நடைக்கு வழிகாட்டியாக இருந்தார். தமிழ்க்கடல் மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்ததே அயல்மொழிக் கலப்பிற்கு எதிராகத்தான். இவ்வாறு அறிஞர்கள் பலரும் மொழிக்கலப்பிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் இதழ்களில் மொழிக்கலப்பு கூடாது என்பதை வலியுறுத்தித் தானே முன்னெடுத்துக் காட்டாகச் ‘சங்க இலக்கியம்’, ‘இலக்கியம்’, ‘குறள்நெறி’ முதலிய இதழ்களை நடத்தினார்.
திராவிட இயக்க எழுச்சியால், தமிழ்ப்புலவர்கள் பலரும் பிறமொழிக் கலப்பில்லாத இதழ்களை நடத்தினர். ஆனால், இவை பெரும்பாலும் திங்கள், திங்களிருமுறை, வார இலக்கிய இதழ்களாகத்தான் இருந்தன. தமிழ்ப்போராளி பேரா.சி. இலக்குவனார்தான் ‘குறள்நெறி’ என்னும் நாளிதழையும் நடத்தினார். இதழ்களில் இடம் பெறும் ஆங்கிலக்கலப்பைச் சுட்டிக்காட்டிக் கலப்பற்ற நடையை வலியுறுத்தித் “தமிழிலே பேசுக! தமிழிலே எழுதுக!” என வேண்டினார்.
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா’
எனப் பன்மொழி யறிந்த பாரதியார் கூறினார். ஆனால் அதை நாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. குறிப்பாக இதழ்களில் பணியாற்றுவோர், உயர்ந்த தமிழ்ச்சொற்களைத் துறந்து அயற்சொற்களைக் கலந்து எழுதுகின்றனர்.
“இமயமலைபோல் உயர்ந்த
ஒரு நாடும் தன்
மொழியில் தாழ்ந்தால் வீழும்”
என்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். நாம் நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைப் பயன்பாட்டுத் தளங்களில் இருந்து விரட்டி அடிப்பதால் நாமும் தாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
“மொழி அழிந்தால் இனமும் அழியும்” எனத் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் தந்த எச்சரிக்கைக்குச் செவி மடுக்காததால் நம் இனத்தை அழித்துக் கொண்டுள்ளோம். இன்றைய இந்தியப் பரப்பு முழுவதும் ஒரு காலத்தில் தமிழ் இருந்தது என வரலாறு சொல்கிறதென்றால், அங்கெல்லாம் தமிழ் அழிந்ததால் தமிழினமும் இல்லாமல் போய்விட்டதுதானே வரலாறு காட்டும் உண்மை.
தமிழர் நிலமாக இருந்த இலங்கையில் பெரும்பகுதிச் சிங்களர் நிலமாக மாறிய காரணம், அப்பகுதிகளில் தமிழ் மறைந்து போனதுதானே! இந்த வரலாற்று உண்மைகளை யறிந்தும் நாம் இன்னும் தமிழ்க்கொலையில் ஈடுபட்டு வருகிறாமே!
தமிழ்க்கொலைச் செயல்களில் பெரும்பங்கு ஊடகங்களுக்கு உள்ளது. இவை விரைவாகத் தமிழை அழித்து வருகின்றன. ஊடகங்களிலும் இதழ்கள் புரியும் தமிழ்க்கொலை அளவில.
மொழிகளின் இறப்பு குறித்துக் கட்டுரை எழுதியவர்கள், ஒரு மொழியைக் கடைசியாகப் பேசியவரின் மறைவுடன் அந்த மொழியும் அழிந்துள்ளது என்றும் இத்தகைய போக்கு தொடர்வதாகவும் குறிப்பிடுகிறார்கள். ஒரு மொழியைப் பேசக்கூடியவர் யாருமில்லாதபோது அந்த மொழியும் அந்த மொழி பேசும் இனமும் அழிகின்றன. எனவேதான் ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியைப் பேணும் வகையில் நாளும் பயன்படுத்த வேண்டும். மொழியைப் பயன்படுத்துவது என்றால் பேச்சிலும் எழுத்திலும் கல்வியிலும் கலைகளிலும் வழிபாட்டிலும் என எல்லா இடங்களிலும் தம் தாய்மொழியையே பயன்படுத்துவது ஆகும். அவ்வாறான நிலை இல்லாத மொழிகள் அழிந்து வருகின்றன.
க.சுப்பிரமணி(ஐயர்) 1891 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழைத் தொடங்கியதன் நோக்கம் தமிழ் மக்களுடன் தொடர்பு கொள்வதே. “சுதேசபாசையில் தெள்ளத் தெளியத் தெரிவித்தாலன்றி இந்நாட்டாருக்கு பொதுநல அறிவு விருத்தியாகாது.” எனவே, நாட்டுமொழியில் பத்திரிகை இருக்க வேண்டும் என்றார். இன்றைக்குப் பணமே இலக்கு என்றாகிப் போனதால், மக்களைப்பற்றியோ மக்கள் பேசும் மொழியைப் பற்றியோஇதழ்கள் நடத்துவோர் கவலைப்படுவதில்லை.
“தமிழ்நாட்டில் முழுவதும் தமிழ் நடையை விட்டு விட்டு இங்கிலீசு நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம். நம் பத்திராதிபார்களிடம் காணப்படுகிறது” என்று பாரதியார் அன்று வருந்தினார். இந்த அவலம் நாளும் பெருகி இன்றைக்கு ஆங்கிலம்,இந்தி, சமற்கிருதச் சொற்கலப்பாக இதழ் நடை இருந்துவருகிறது.
இணைய வழியில் கிடைக்கும் இதழியல் தொடர்பான பல கட்டுரைகளையும் சில நூல்களையும் படித்துப்பார்த்தேன். இதழ்களின் தோற்றம், வளர்ச்சி முதலிய தகவல்கள் உள்ளனவே தவிர இதழ்களின் நடைகளைப்பற்றிய குறிப்புகள் இல்லை. இதழ்களின் பணிகள், இதழ்களின் கடமைகள் என்னும் தலைப்பிலான பகுதிகளில் கூட, இதழ்களின் நடை கலப்பற்ற தூய நடையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. (‘அகரமுதல’ இதழில் மட்டுமே இது குறித்த கடடுரைகள் வந்துள்ளன.) கவிஞர்களின் பாடல் வரிகளிலும் தமிங்கிலமாகக் கூறப்படும் இன்றைய நடை குறித்த கட்டுரைகளிலும் கலப்பற்ற நடை வலியுறுத்தப்படுகின்றதே தவிர இதழியல் கட்டுரைகளில் அவ்வாறு இடம் பெறாமை வியப்பாக உள்ளது.
இன்றைய நடையில் எத்தகைய கலப்பு இடம் பெறுகின்றது என்பதற்காகச் சில இதழ்களில் இடம்பற்ற சொற்களைப் பின்வருமாறு காணலாம்:-
bபேச்சுலர், ஃபிரையிங், ஃபேமிலி, ஃபோர்க், அசால்ட், ஆக்டிவ், ஆடியன்ஸ், ஆர்டர், ஆனியன், இட்லி, டிக்கா. ப்ராசஸ்டு சீஸ், எசன்ஸ், எந்திரி, எலக்டிரிக், கட் செய்து, கப், கமிட், கரம் மசாலா, கஸ்ட்டர்ட், காஸ்ட்லி, கிச்சன், கிரிப், கிரியேட்டிவ், கிளாமர், குக்கர், கேப், கேரியர், க்ளிக் செய்யவும், சங்க்ஸ், சாஸ், சிசன், சில்லி, சினிமா, சீசன், சீரியல், சீஸ், சுகியன், சூப்பர், சூப்பர் ஆ, சூப்பர் மார்க்கெட், சூப்பர் ஹிட், செட் செய்யவும், சென்டிமென்ட், சேட், சோசியல் மீடியா, சைடிஷ், சைஸ், டம்ளர், டாக்டர், டாப், டார்க் பிரெளன், டி.வி. டிரீட், டிரெண்ட், டீ ஸ்பூன், டூத் பிக், டேஸ்ட், ட்ரே, ட்ரை பண்ணலாம், தியேட்டர், திருநீர் (திருநீறு), தீம், தோல்(தோள்), நட்ஸ், நிம்கி, நியூட்ரிஷியஸ், நினைவிக்கு, பரீட்சையம், பவுடர், பவுல், பனிர், பார்த்தால் (பார்த்தாள்), பால்ஸ், பிரீ ஹீட், பிரைடே, பிளேட், புடிங், புராஜக்ட், பூகார்(புகார்). சண்டே ஸ்பெஷல், பேக், பேக்கிங், பேச்சுலர், போட்டோ ஷூட், போட்டோசூட், போஸ், மண்டே,மதுர் தட்டை, மஷ்ரூம், மாடலிங், மாடல், மில்க், மிஸ் செய்ய, மூணே விசில், மோல்ட், யூ டியூப்,ரெசிப்பி, ரோஸ்ட், ரைஸ், லாக் டெளன், லீடு ரோல், லைக்குகள், வார் ரூம், வால் வீச்சு, வெரைட்டி, வெஜ், வைரல், ஜாலி சமையல், ஜோடி, ஸ்கிரீன் ஷாக், ஸ்டைல், ஸ்நாக்ஸ், ஷாக், ஷாக்கிங், ஷாட், ஷேர்கள், ஹாட், ஹோட்டல்….. …..
(இதழ்களில் உள்ளவாறே குறிப்பிட வேண்டி வந்தமையால் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்த நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.)
இவை சில இதழ்களில் இடம்பெற்றவைதாம். அனைத்து இதழ்களிலும் அனைத்துச் செய்திகளிலும் இடம் பெறும் மொழிக்கொலையைப் பார்ப்பின் பேரளவாக இருக்கும்.
மொழிக்கொலை என்பது இனக்கொலையில் முடிவதால் இத்தகைய மொழிக்கொலைகளுக்குத் தண்டனைகள் வழங்க வேண்டும். மின்னல்போல் செய்தியைப் பரப்பும் மின்னிதழ் ஒன்றின் சமையல் பகுதியைப் பெண் பெயரில் ஒளிந்து கொண்டு ஆடவர் ஒருவர் எழுதி வருகிறார். தலைப்பிலும் தமிழ் இல்லை. உள்ளடக்கத்திலும் மொழிக்கொலையே யன்றி வேறில்லை. இவருக்கு அதிக அளவு கடுங்காவல் தண்டனை வழங்கினால் பிறருக்கு எச்சரிக்கையாக இருக்கும் எனக் கருதுகிறோம். தூய நடையைப் புறக்கணித்து மொழியைச் சிதைத்துக் கொலைபுரியும் ஒவ்வொருவருக்கும் தண்டனை தருவது இத்தகைய மொழிக்கொலைகளைத் தடுத்து நிறுத்தும்.
தமிழர் நலன்களில் கருத்து செலுத்தும் தமிழ்நாட்டின் அரசு தமிழ்மொழி நலன்களிலும் கருத்து செலுத்தித் தமிழையும் தமிழரையும் காத்திட வேண்டுகிறோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா! அதுவும் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த ஆங்கிலக் கலப்பை விட இன்று அதிகம். முன்னணி இதழ்களே இப்படித்தான் இருக்கின்றன. கேட்டால் மக்களுக்குப் புரிய வேண்டாவா என்கிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் அதுவும் சரிதானோ எனச் சில சமயங்களில் தோன்றுகிறது. ஏனெனில் ஓர் இதழின் நடை என்பது கொஞ்சமாவது மக்களின் நடைக்கு ஒத்துதானே அமையும்? இன்றைய மக்கள் எப்படிப் பேசுகிறார்கள்? ஒவ்வொரு சொற்றொடரிலும் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கு முன்னும் பின்னும் ஆங்கிலச் சொல்லை வைத்துத்தானே பேசுகிறார்கள்? எனில் மக்கள் சுவைக்காக நடத்தப்படும் இதழ்களின் நடையும் அப்படித்தானே இருக்கும்? எனவே இதற்கெல்லாம் ஒரே வழி தனித்தமிழ்நாடு கோரிக்கைதான் ஐயா! நம் நாடு தனி நாடாக இருப்பின் தமிழ் தேசிய மொழியாக இருக்கும். தேசிய மொழியை எல்லாரும் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் எனச் சட்டமும் இயற்ற முடியும். தேசிய மொழியில் எவ்வளவு கடினமாக எழுதினாலும் அதைப் புரிந்து கொண்டு படித்தாக வேண்டிய கட்டாயமும் ஊக்கமும் மக்களுக்கும் இருக்கும். அதாவது ஆங்கிலம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் படிக்கிறார்களே, அப்படி. எனவே தமிழர் உரிமையைக் காப்பாற்ற மட்டுமில்லை, தமிழர்களைக் காப்பாற்ற மட்டுமில்லை, தமிழைக் காப்பாற்றவும் தனிநாடு கோரிக்கை இன்றியமையாதது.