இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?

3/4

 தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்பது என்ன? அதுவே சாதியத்தின் இருப்பிடம் அல்லவா? தீண்டாமைக்குரிய தண்டனைகள் சாதிக்கு எதிராக அல்லவா அமைந்திருக்க வேண்டும்?

மாநில மக்களின் அனைத்து உரிமைகளிலும் தலையிடுதல்.

356 ஆவது சட்டப் பிரிவு,

ஆளுநர் உரிமைகள்,

எனப் பல பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் பாயிர முன்னுரைக்கு எதிரானவை.

200 ஆண்டுக் காலம் வெள்ளையர் ஆட்சியில் கிட்டிய மாநில உரிமைகள் கூட விடுதலை பெற்ற இந்தியாவில் மாநிலங்களுக்கு இல்லை.

60 ஆண்டு காலம் மகாத்மா என்றழைக்கப்படும் காந்தியாரை வெள்ளைக்காரன் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஆனால் விடுதலைக்குப் பின் அவரை 6 மாதம் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை யென்றால் வருணாசிரம சனாதனக் கோட்பாடு எவ்வாறு இந்தியாவை ஆளுகின்றது என்பதை நம்மால் அறிய முடியும்.

தந்தை பெரியார் மட்டுமே இந்திய விடுதலை என்பது வெள்ளைக் காரனிடமிருந்து சில கொள்ளைக்காரர்களிடம் அதிகாரம் சென்று சேர்வதைத் தவிர வேறொன்றும் இல்லை. சமுக விடுதலையின்றி அரசியல் விடுதலை என்பது விடுதலை அல்ல, இது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று அறிவித்தார்.

நமது நாட்டின் இறைமை என்பது மக்களிடம் உள்ளதேயொழிய தேர்வு பெற்ற பதவிகளிடம் இல்லை என்பதைக் குடியரசுத் தலைவரும், தலைமை அமைச்சரும் உணர்வதில்லை.

மாநிலங்கள்தான் மக்களை உடைய அரசு, மக்களோடு தொடர்புடைய அரசு. அவர்கள் கல்வி, வேளாண்மை, சமுக நிலை ஆகியவற்றில் நேரடிப் பங்கு கொள்கின்றவர்கள். ஆனால் இவை மத்தியில் ஓர் அதிகாரக் குவியலிடம் இன்று இருக்கிறது.

மண்ணைக் காப்பது மட்டுமே மத்திய அரசின் பணி, மக்களைக் காப்பது மாநில அரசின் பணி. அதுதான் கூட்டாட்சியின் அடிப்படை.

இன்று உலக அளவில் கூட்டாட்சி முறையில் இயங்கும் நாடுகள் அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா, சுவிட்சர்மாந்து போன்ற நாடுகளாகும். இவை அனைத்தும் நம்மை விடப் பெருமளவில் முன்னேறிய நாடுகளாகும். இதன் கரணியம் அங்கு மக்களின் இறைமையும் தன்னாட்சிக் கோட்பாடும் பாதுகாக்கப் பட்டிருப்பதால் ஆகும்.

உலக அளவில் பயன்படுத்தப்படும் நேசனல், இண்டர் நேசனல் என்ற சொற்களும் தவறானவை என்பதே என் கருத்து.

பன்னாட்டு அமைப்பு (United Nations Organizations) என்பது (United states organizations) என்றுதான் அமைந்திருக்க வேண்டும். States என்பது நாடு, மாநிலம் என்று இரு பொருள் படும். ஆனால் ஏற்கெனவே  USA என்ற நாடு உருவாக்கப் பட்டதால் அவர்கள் UNO என்று அழைக்கின்றனர்

அம்பேத்துகர் உரை:-

26-1-1950 ஆண்டு இந்தியா ஒரு மக்கள்நாயக நாடாக மலரவிருக்கிறது. அதாவது மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்வு செய்யும் ஓர் அரசாங்கம் அன்றிலிருந்து நடைமுறைக்கு வரும். ஆனால் இந்த மக்கள்நாயக அரசமைப்பு என்னவாகும் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. இதை இந்திய நாடு தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் ஒருமுறை இழந்துவிடுமா? என்ற இரண்டாவது கேள்வியும் என்னுள் எழுகிறது. காரணம் இந்திய நாட்டுக்கு இந்த மக்கள்நாயகக் கோட்பாடு என்பது புதிதல்ல. ஒரு காலத்தில் மன்னராட்சி முறைமைகளில் கூட மக்களாட்சிக் கோட்பாடுகள் தெரிந்தன. நாடாளுமன்றம் அல்லது நாடாளுமன்ற விதிமுறைகள் என்பதை இந்தியா அறியாமலில்லை. ஆனால் இன்று ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குகின்றோம்.

நாம் மக்கள்நாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், ஓர் எழுத்து வடிவமாக இதை வைத்திருக்காமல், மனத்தில் தாங்கிச் செயல் படவேண்டும்.

அம்பேத்துகரின் மூன்று எச்சரிக்கைகள். (25-11-1949)

  1. நயனின்மை (அராசகம்) இலக்கணம் நீக்கப் படுதல்
  2. தனிமனித வழிபாடு தவிர்த்தல்
  3. அரசியல் மக்கள்நாயகம் தாண்டி சமுக மக்கள்நாயகத்தை நோக்கிப் பயணித்தல்.
  • முதலாவதாக, நம்முடைய சமுக, பொருளாதார இலக்குகளை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு எய்துவோம் என்ற உணர்வைப் பெறவேண்டும். மாறாக, புரட்சி, வன்முறை, நயனின்மை வழிகளைக் கைவிட வேண்டும்
  • இரண்டாவதாக, நாம் பெற்றிருக்கும் இந்த மக்கள் நாயக உரிமையை/ விடுதலையை இன்னொருவன் காலடியில் வைப்பது. அதாவது தலைமை வழிபாட்டை முற்றாகத் தவிர்க்க வேண்டும்
  • மூன்றாவது, நாம் பெற்றிருக்கின்ற இந்த அரசியல் மக்கள் நாயக முறைமையில் மகிழ்ந்துவிடாமல், இந்த மக்கள் நாயகக் கோட்பாட்டைச் சமுக மக்கள் நாயகமாக மாற்ற வேண்டும். சமுக மக்கள்நாயகம் என்ற அடித்தளமின்றி ஓர் அரசியல் மக்கள் நாயகம் நிலைபெற இயலாது என்பது என் கருத்தாகும்.

(தொடரும்)

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில்இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’  என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]