54Ilakkuvanar+11

  “தமிழ் மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்” எனும் உயிர்ப்போடு எழுந்தது தமிழ்க் காப்புக் கழகம். “தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயிலுக!” என்னும் நான்மணிகளைச் செயற்படுத்தும் செம்மாப்புடன் நான்மாடக்கூடல் திருநகரில் ஆடி 22, தி.பி. 1993 / 06.08.1962 இல் எழுந்தது தமிழ்ப்பாதுகாப்புக் கழகம். அதன் தலைவரும் நிறுவனரும் பேராசிரியர் சி. இலக்குவனார்.

. . . .                                                             . . .                                                  . . .

  தமிழ்க்காப்புக் கழகப் பணிகள் சீரியன. இலக்கியம், இலக்கணம், வரலாறு, மொழியியல் இவற்றில் தேர்ச்சியும் பயிற்றுதல் திறமும், தனித்தமிழ் நாட்டமும் உடைய பேராசிரியர்கள் பதினறுவர் எத்தகு கைச் செலவும் எதிர் நோக்காமல் தமிழூதியமே ஊதியமாகத் தம் கைச் செலவு செய்து கொண்டு வந்து தமிழ் வகுப்பு நடத்தினர். ஒவ்வொருநாளும் வகுப்பு; ஒவ்வொரு கிழமையும் பொழிவு; ஒவ்வொரு திங்களும் விழா, அவ்வவ்போது அறிக்கைகள், சுவரொட்டிகள், வேண்டுகோள்கள், ஊர்வலங்கள்.

  தமிழகத்தின் பல்வேறு பெரு நகரங்களிலும் தமிழகங் கடந்து தமிழர் வாழும் பகுதிகளிலும் தமிழ்க் காப்புக் கழகக் கிளைகள் தோன்றி நற்பணியாற்றின. தமிழ்க்காப்புக் கழகம் இந்தியெதிர்ப்புப் பாசறையாக வேண்டிய கட்டாயத்தை 1965இல் அரசுஉண்டாக்கியது. தமிழ்க் காவலராகத் திகழ்ந்த பேராசிரியர் இலக்குவனார் இந்தி எதிப்புப் படைக்குத் தளபதியானார். அவர்தம் முழக்கத்தை வெளியிடும் போர்ப் பறையாகக் கிளர்ந்தது, ‘குறள் நெறி’ இதழ்.

ilankumaranar-01– புலவர்மணி இரா. இளங்குமரன்

தமிழ்க் காப்புக் கழகப் பொதுச் செயலர்

நாடும் மொழியும் நம்மிரு கண்கள் (15.8.97)