இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்?
ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும் பொழுது அச்சொல்லின் வெளிப்படையான பொருளுக்கு முதன்மை அளிக்காமல் சொல்ல வரும் உண்மைப் பொருளையே நாம் காண வேண்டும்.
இத்தகைய மரபுத்தொடர்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தமிழில் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால், நூற்றுக்கணக்கில்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழ் மரபுத்தொடரைப் பார்க்கும் முன்னர் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.(சிலருக்கு ஆங்கிலத்தில் சொன்னால்தானே புரிகிறது!) Kicked a bucket என்றால் வாளியை உதைத்தான் என்று பொருள் அல்ல. இந்த மரபுத் தொடர் இறந்துவிட்டதைக் குறிக்கிறது. பொருளாக இருந்தால் அப்பொருள் சீர்கெட்டுப் பயனற்றதாகி விட்டது என்பதைக் குறிக்கிறது. இப்படி எல்லா மொழிகளிலும் சூழலுக்கேற்ப வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருளும் உணர்த்தும் பொருளும் வெவ்வேறாக இருப்பதே இயற்கை. இனித் தமிழுக்குச் செல்வோம்.
’வாலைச்சுருட்டிக் கொண்டு போ’ என்றால் கேட்பவனுக்கு வால் இருப்பதாகவும் அதனைச் சுருட்டிக் கொள்ளச் சொல்வதாகவும் பொருளல்ல. ’எதுவும் பேசாமல் போ’ என்றுதான் பொருள்.
‘வாயைக் காட்டாதே’ – அவன் முன்பு போய் வாயைக் காட்டாதே என்பதுதான் நேர் பொருள். மருத்துவர் முன் வாயைக்காட்டுவது இயற்கை. இங்கே. வாயிலிருந்து இனி எதிர்ச்சொல் வரக்கூடாது என்பதைக் குறிக்கும் வகையில் எதிர்த்துப் பேசாதே எனப் பொருள்.
‘பூசி மெழுகுகிறான்’ என்றால் தரையைப் பூசி மெழுகுவதாகப் பொருளல்ல. நிகழ்ந்ததை மறைத்தல் அல்லது குற்றத்தை மறைத்தல் என்றுதான் பொருள்.
‘தேர்வை எப்படி எழுதினாய்’ எனக் கேட்டால் ’வெளுத்து வாங்கி விட்டேன்’ என்றால் துணியை வெளுத்ததாகப் பொருளல்ல. நன்றாக எழுதியுள்ளதாகப் பொருள். நன்றாகச் செய்வதைக் குறிப்பதால் சில இடங்களில் நன்றாக அடித்துவிட்டதாகவும் பொருள் வரும். அடிப்பதை அடி பின்னிவிட்டான் என்றும் சொல்வதுண்டு. இங்கே எதையும் பின்னவில்லை.
‘அரசாங்கம் வாய்ப்பூட்டு போடுகிறது’ என்றால் ஒவ்வொருவர் வாயிலும் பூட்டு போடுவதாகவா பொருள்? பேச்சுரிமையத் தடுக்கும் வகையில் பேசவிடாமல் செய்கிறது என்றுதானே பொருள்!
‘நாக்கு நீளுகிறது’ என்றால் ஏதோ மாய மந்திர வித்தையில் நாக்கு நீண்டுவிட்டதாகவா பொருள். அதிகமாகப் பேசுவதாகப் பொருள். ‘என்னிடமா காது குத்துகிறாய்?’ என்றால் என்ன பொருள்? ‘என்னை ஏமாற்றப் பார்க்காதே’ எனப் பொருள்.
‘இன்றோடு உனக்குத் தலை முழுகி விட்டேன்’ என்றோ ‘கை கழுவி விட்டேன்’ என்றோ சொன்னால் தொடர்பை விட்டு விட்டதாக அல்லது கை விட்டு விட்டதாகப் பொருள்.
‘அவளையே திருமணம் செய்கிறேன் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றான்’ என்றால் விடாப்பிடியாக நிற்கிறான் – உறுதியாக இருக்கிறான் எனப் பொருள். ‘பல்லைக்கடித்துக் கொண்டு சமாளித்தேன்’ என்றால் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டதாகப் பொருள்.
‘ஏனடா மென்னியைத் திருகுகிறாய்’ என்பதற்கு என்றைக்காவது, ’மென்னியை நெரித்தது போதும்’ என்றா சொல்கிறார்கள். மென்னி என்றால் குரல் வளை. குரல் வளையையோ குரல் வளை உள்ள கழுத்துப்பகுதியையோ திருகுவதாகவோ நெரிப்பதாகவோ பொருளல்ல. ‘இன்னல் தந்தது போதும். விட்டு விடு’ என்று பொருள்.
‘நேரம் காலம் பார்க்காமல் வந்து என் கழுத்தை அறுக்காதே’ என்கிறோம்.அப்படியானால் நேரம் பார்த்து வந்து கழுத்தை அறுக்கலாமா? ஓய்வில்லாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யாதே என்பதைத்தான் இப்படிச் சொல்கின்றனர்.
‘என் தலையை உருட்டியது போதும்’ என்றால் இதுவரை தலையை வெட்டி எடுத்து பந்து விளையாடுவதுபோல உருட்டி விளையாடுவதாகவா பொருள்? குறிப்பிட்ட செய்தி அல்லது பொருண்மையில் அவரைப்பற்றிப் பேசியது போதும் என்கிறார்.
‘தலை இருக்க வால் ஆடலாமா?’ என்பது எந்த வால் ஆட்டத்தையும் குறிக்கவில்லை. பணியிலோ அகவையிலோ மூத்தவர் இருக்கும் பொழுது தானாக முந்திக்கொண்டு செயலில் இறங்குவதை அல்லது கருத்து சொல்வதைக் குறிப்பிடுவது.
‘ஈரக்குலையைப் பிடுங்கிடுவேன்’, ‘நெஞ்சில் ஏறி மிதித்து விடுவேன்’, ‘குடலை உருவி மாலையாகப் போடுவேன்’’ என்றெல்லாம் சொல்வதுண்டு. உண்மையிலேயே ஈரக்குலையைப் பிடுங்குவதாகவோ நெஞ்சில் ஏறி மிதிப்பதாகவோ குடலை உருவுவதாகவோ பொருளல்ல. செல்வாக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கி வெற்றி பெறுவேன் எனப் பொருள்.
‘வயிற்றில் அடித்துவிட்டான்’ என்றால் உணவு வரும் வழிக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் வருவாய் வரும் வழியைத் தடுத்து விட்டான் எனப் பொருள்.
‘சாட்டையை எடுத்தால்தான் சரி வருவான்’ என்பார்கள். ‘அம்மா இருந்திருந்தால் இந்நேரம் சாட்டையை எடுத்திருப்பார்கள்’, ‘ஆணையர் சாட்டையைச் சுழற்றுவாரா?’ – இவை செய்திகளில் இடம் பெற்றவை. வன விலங்குகளை அடக்கவா அல்லது அடிமையை மிரட்டவா சாட்டையை எடுக்கப் போகிறார்கள். தவறான நடவடிக்கைகள் அல்லது குற்ற நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்குவதைத்தான் இங்கே குறிக்கிறது.
‘புத்தகத்தைக் கரைத்துக் குடித்து விட்டான்’ என்கிறோம். அப்படிச் செய்தால் வயிற்று வலிதான் வரும். ‘புத்தகத்தை முழுமையாகவும் நன்றாகவும் படித்து முடித்து விட்டான்’ என்றுதான் பொருள்.
‘நெஞ்சு உடைந்து விட்டான்’ என்றால் இதயம் உடைந்ததாகப் பொருளல்ல. மிதமிஞ்சிய வேதனை அடைந்து விட்டான் என்று பொருள். காரணம் கேட்ட பொழுது மனம் உருகி விட்டது என்றால் மனம் பனியல்ல உருகுவதற்கு அல்லது வெண்ணெய் போல் சூட்டில் உருகும் பொருளுமல்ல. கேட்போர் மனம் இரங்கும் வகையைத்தான் குறிக்கிறது.
’தாளம்போடாதே, ஒத்து ஊதாதே’ என்பனவெல்லாம் நடுவுநிலையின்றி தவறு என்று தெரிந்தும் ’ஒருவர் சொன்னதை எல்லாம் சரி என்று சொல்லாதே’ என்பதாகும்.
‘பொடி வைத்துப் பேசாதே ‘ என்றால் ‘உட்பொருளை மறைத்து வைத்துப் பேசாதே’ எனப் பொருள்.
சோலி என்பது மார்பாடையைக் குறிக்கும் அயற்சொல். எனினும் வேலை என்றும் பொருள் உண்டு. ’உனக்கு வேறு சோலியே இல்லையா?’ என்றால் ‘எனக்குப் பேசித் தொந்தரவு கொடுக்கிறாயே உனக்கு வேறு வேலை இல்லையா?’ எனக் கேட்பதாகப் பொருள்.
‘போதும்! போதும்! உன் சோலியை முடி!’ என்றால் ‘சொன்னது போதும். நிறுத்து’ எனப் பொருள்.
‘இந்தத் தேர்தலுடன் அவன் சோலியை முடித்துவிட வேண்டும்’ என்றால் , ‘அவன் மீண்டு எழாதவாறு இத்தேர்தலில் அவனைத் தோற்கடிக்க வேண்டும்’ எனப் பொருள்.
‘அவன் சோலியை முடித்து விடுவோமா’ என்றால் ’செயல்பாட்டை நிறுத்தி விடுவோமா’ எனக் கேட்பதாகப் பொருள். அதே நேரம், அடியாளிடம் ‘அவன் சோலியை முடித்து விடு’ என்றால் செயல்பாட்டிற்கு அடிப்படையான, ‘உயிரை எடுத்து விடு’ என்றுதான் பொருள். ஆனால், ‘அவன் சோலியை முடித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்றால், தனக்கு எதிரானவனை அல்லது நல்லெண்ணத்திற்கு எதிராகவும் அரச வன்முறையைப் பயன்படுத்தியும் துன்புறுத்துபவனை அல்லது மக்களுக்கு எதிரானவனை அரசியலில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பொருள்.
சரி. சரி. நம் சோலியை இத்துடன் முடித்துவிடுவோம்.
இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
Leave a Reply