இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! 

  உத்தமம்  (உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றம் –  International Forum for Information Technology in Tamil – INFITT) என்னும் அமைப்பு தகவல்தொழில்நுட்பம் மூலமாகத் தமிழை வளர்ப்பதற்காகத் தோன்றிய அமைப்பு. 1997இல்  முதல் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியிருந்தாலும் 2000இல்தான் முறையாக  இவ்வமைப்பு வடிவம் பெற்றது. இதுவரை 16  தமிழ் இணைய மாநாடுகளை 5 நாடுகளில் நடத்தி 800க்கு மேற்பட்ட கட்டுரைகள் அரங்கேற்றியுள்ளது. எனினும் இவ்வமைப்பில் கணிநுட்பர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் புறக்கணிக்கப்பட்ட சூழலால் தமிழன்பர்கள் பலருக்கும் கசப்பான பட்டறிவுகளே விளைந்தன. இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் கனடாவில் நடந்த 16ஆவது தமிழ் இணைய மாநாட்டில் பொறுப்பாளர்கள் தவிர பிறரின் கட்டுரைகள் ஏற்கப்பெறாமல் மறுக்கப்பட்டன. இதனால் உலகளாவிய வெறுப்பை இவ்வமைப்பு  ஈட்டியது. இதன் விளைவாகப் புதிய அமைப்பு தோன்றியது. (அதற்கும் முன்னதாக, மலேசியாவில் உள்ள காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் , தகவல்  தொழில்நுட்பப்பிரிவு மூலம்பு இணையத்தமிழ் மாநாட்டினைச் சிறப்பாக நடத்தி முடித்தது.)

  தமிழ் இணைய வளர்ச்சிக்கு எனப் பல்வேறு அமைப்பு இருப்பது  தவறல்ல. வெவேறு நாடுகளில்  வெவ்வேறு அமைப்புகள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு உருவாக்கப்படுவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஒன்றிற்கு ஒன்று எதிரியாகக் கருதாமல் வாய்ப்புள்ள சூழல்களில் ஒருங்கிணையும் போக்கு நிலவ வேண்டும். அதே போல், எத்தனை அமைப்புகள் இருந்தாலும்  பொறுப்பாளர்கள்தாம் மாறியிருப்பார்களே தவிர, பங்கேற்கும் ஆர்வலர்களில் பெருத்த மாற்றம் இருக்காது. எனவே, தமிழுக்கு முதன்மை அளிக்கும் ஓர் அமைப்பு தோன்றியதில் தவறில்லை. ஆனால், வளர்ச்சிக்காக நடத்தாமல் வீம்புக்காக நடத்துவதுபோல் அதே சுருக்கப் பெயரையே உத்தமம் என (INFITT- International Forum for Information Technology) வைத்துக் கொண்டதுதான் தவறு.

  இந்த அமைப்பு, முந்தைய அமைப்பின் தளத்தில் உள்ளவாறே தன் தளத்தையும் அமைத்து,  இரவல் புத்தியைக்காட்டிக்  கொண்டது. தமிழ் என்று மாநாட்டில் பெயர் சேர்க்கப்படுவதால்தான் நன்கொடை கிடைகிறது, வரவேற்பு கிடைக்கிறது என்பனவற்றை மறந்து கணி நுட்பத்தைத் தமிழில் முழுமையாகக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிக்கொண்டாலும் அதற்கு அடிப்படையான தமிழ் ஆர்வலர்களை உத்தமம் புறக்கணித்தது. எனவே,  தமிழுக்கு வலியுறுத்தும் அமைப்பு என்பதால் (எதிர்ப்பை மட்டும்  தெரிவித்துவிட்டுப்) புதிய உத்தமம்  சார்பிலான மாநாட்டில் நானும் பங்கேற்க விழைந்தேன். சொல்லப்போனால் உத்தமத்தால் துரத்தப்பட்டடவர்கள், தகவல் தொழில் நுட்பத்தில்  தமிழ் வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட புதிய உத்தமத்தால் அன்புடன் வரவேற்கப்பட்டதால் அனைவரும் இம்மாநாட்டில்  ஆர்வம் காட்டினர்.

 ஆனால், மாநாட்டு அமைப்பினருக்கு ஆர்வம் இருந்த அளவில் செயல்திறம் இல்லை என்பது பலவற்றில் தெரிந்தது. உத்தமம், மாநாடு நடத்தப்படுவதற்குப் பல்கலைக்கழக இடம் மறுக்கப்படுவதற்கு முனைந்தது போன்ற சில செயல்களால் தட்டுத்தடுமாறி  புதிய உத்தமம்  நடை போட்டது.  இருப்பினும்  நம் நாட்டிலிருந்து ஒருவர் தவிரப், பிறருக்கு  மாநாட்டில் பங்கேற்க நுழைமம்(விசா) கிடைக்கவில்லை. (பயண முகவர், அழைப்பு மடல் சரியாக இல்லை என்றும், சுற்றுலாப்பயணிபோல் விண்ணப்பத்திருந்தால் அனைவருக்கும் நுழைமம் கிடைத்திருக்கும் எனத் தெரிவிக்கின்றார்.)

   நான் ஊடகப்பிரிவிலும் கட்டுரையாளர் என்ற முறையிலும் பங்கேற்பதாகப் பதிந்திருந்தேன். {எனவே, பதிவுக்கட்டணம் கனடா தாலர் 100 செலுத்த வேண்டா என இங்குள்ள துணைத்தலைவர்  அன்புடன் இசைந்தார்.) நுழைமம் கிடைத்தபின்னர் பயணச்சீட்டு எடுக்கலாம் எனப் பலரும் காத்திருந்தோம். ஆனால், கனடா அமைப்பினர், “இப்பொழுதே கட்டணமாக ஒருவருக்கு 65,000  உரூபாய் அனுப்புங்கள்.  பிறகு எடுப்பதாக இருந்தால் கட்டணம் உயர்ந்துவிடும். அதே நேரம், பணம் செலுத்தியவர்கள், 15.10.2017 ஆம் நாளுக்குள் நீக்குமாறு தெரிவித்தால் எவ்வகைப் பிடித்தமும் இன்றிப் பணம் திருப்பித் தரப்படும் . அதற்குப்பின்னர் தெரிவித்தால் உரூபாய் ஐயாயிரம் மட்டும்  பிடித்தம் செய்யப்படும்” என்று தெரிவித்தனர். நான் இதற்கு உடன்படா நிலையில் துணைத்தலைவராக உள்ள அன்பு நண்பர், “ நீங்கள் எப்படியும் கலந்து கொள்ள வேண்டும். எனவே, அதற்குரிய  ஏற்பாட்டினை நாங்கள் செய்து விட்டோம்.  நுழைமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள்  பெயர், தேடல் எண் விவரங்களைத் தெரிவிப்பின் கனடாவிலிருந்து தலைவர்,  அங்குள்ள தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து  அனைவருக்கும் நுழைமம் கிடைக்கச் செய்துவிடுவார்” என்றார்.

  நான், என்னிடம் கடன் அட்டை இன்மையால் அட்டோபர் 3,2017 அன்று அவர்கள் குறிப்பிட்ட நண்பர் வழி உரிய கட்டணமான உரூபாய் 65,000 செலுத்திவிட்டேன். அன்றைக்கே அவர்களுக்குக் கிடைத்ததாக ஒப்புதலும் வந்துவிட்டது.   (நேரில் பணத்தைச்செலுத்த இயலாத ஒருவர் சார்பில் மற்றொரு 65,000 உரூபாயையும் நான் செலுத்தியுள்ளேன்.) அன்று மாலையே வானூர்திச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் என்று சொல்லியும் 3 நாள் ஆன பின்னரும் வராமையால் பயணச்சீட்டை அனுப்பி வைக்குமாறு வேண்டினேன். இரு நாளில் அனுப்புவதாகத் தெரிவித்தனர். அப்படியும் வராமையால் மீண்டும்கேட்டேன். நுழைமம்(விசா)வந்ததும் வானூர்திச்சீட்டை வாங்கி அனுப்புவார்கள் என்றும் அதுவரை பொறுத்திருக்கமாறும் தெரிவித்தனர். பயணச்சீட்டு  நீக்கும் சிக்கல் இருக்காது என்பதால் பிறர் போல் நானும் இதற்கு உடன்பட்டேன்.

  ஆனால், முதலில் விண்ணப்பித்திருந்த எனக்கு(ம் பிறர் அனைவருக்கும் ) நுழைமம் மறுக்கப்பட்ட தகவல் வந்தது. அட்டோபர் 09 இல் இதனைத் தெரிவித்தேன்.

  மறுக்கப்பட்டவர்கள் நுழைமம் பெற நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். “எங்களை  விட்டுவிட்டு இனி நுழைமத்திற்காகக் காத்திருப்பவர்கள் அனைவருக்கும் நுழைமம் கிடைக்க ஆவன செய்யுங்கள்” என்றேன். பயன்படுத்தப்பெறாக் கட்டணப் பணத்தைத்திருப்பி அனுப்புவதாகக்  கூறியவர்கள்,  திருப்பி அனுப்பாததால்நான் செலுத்திய தொகையைத் திரும்ப எனக்கு அனுப்புமாறு கேட்டேன். முதலில் அனுப்பி வைப்பதாகக் கூறியவர்கள், பின்னர், மாநாட்டுக்கணக்கு வழக்கு பார்த்த  பின்னர், அஃதாவது மாநாடு முடிந்த பின்னர் வானூர்திக் கட்டணப்பணத்தை அனுப்புவதாகக்  கூறினார்கள். “வானூர்திச்சீட்டே வாங்காதபொழுது கணக்கு வழக்கு எங்கே வந்தது” என்று கேட்டேன்.” மாநாட்டு வேலைகளில் மூழ்கியுள்ளனர். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றனர்.

  காலம் கடக்கக்கடக்க நான் பொறுமையிழந்து, “பணத்தைத் திரும்பத்தராவிட்டால், காவல்துறையில் முறையிடுவேன்; இதழ்களில் அல்லது  என் மின்னிதழில் நிதி மோசடி எனச் செய்தி வெளியிடுவேன்” என்றேன்.

  அதற்குத் தமிழ்நாட்டிலுள்ள துணைத்தலைவராகிய அன்பு நண்பர், “ என்னை நம்பித்தானே பணம் கொடுத்தீர்கள். நான் பணத்திற்குப் பொறுப்பு . காலத்தாழ்ச்சியானால், உங்களுக்கு நான் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னர்  மாநாட்டுக்குழுவிடம் வாங்கிக்கொள்வேன்”. என்றார்.  சொன்ன நாள் கடந்ததால் கருத்தரங்கக்குழுத் தலைவரிடம் பேசினேன். “யாருக்கும் பணம் தராவிட்டாலும் உங்களுக்குச் சொந்தப்பணத்தைக் கொடுக்குமாறு துணைத்தலைவரிடம் கூறியுள்ளேன். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார். பின்னர் நவம். 1இல் பணம் அனுப்புவதாகக்  கூறி அன்று கேட்ட பொழுது “பணம் அனுப்பிவட்டார்கள், 8 நாளில் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டேன். இணைய வழியில் உடனே பணம் கணக்கில் சேர வாய்ப்பு உள்ளதே என்றதற்கு மிகுதியானவர்களுக்குத் திரும்பத் தருவதால் காலத்தாழ்ச்சி ஆகும் என்று புதுக்கதை கூறினர்.

  இதுவரை  வானூர்திக் கட்டணத்திற்காக நான் செலுத்திய பணம் வராததால்,  பின்வரும் வினாக்களுக்கு விடை தெரிய விரும்புகினறேன்.

 1. வானூர்திக்கட்டணத்திற்காகப் பெறப்பட்ட பணத்தை உடனடி வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தி, அவற்றை மீளப் பெற இயலவில்லையா?
 2. வானூர்திக் கட்டணத்திற்கு எனச் செலுத்திய பணத்தை – மாநாட்டுப்பணிக்காகவே இருந்தாலும் – வேறு வகையில் செலவழிக்கலாமா?
 3. அவ்வாறு பணத்தைத் தவறாகக் கையாளவில்லை என்றால் உடனே உரிய தொகையைத் திரும்ப அனுப்புவதில் என்ன சிக்கல்?
 4. வானூர்திப்பயணச்சீட்டு எண் எனச் சொல்லிப் பதிவு எண் மற்றொருவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏமாற்றுவதன் காரணம் என்ன?
 5. அறை வாடகை செலுத்தாமல் அறைகளை ஒதுக்கி வைக்குமாறுதான் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அதற்கான பதிவுக்கட்டணத்தைப் பேராளர்கள் செலுத்திய பின்னர், வாடகை செலுத்தாமையின் காரணம் என்ன?
 6. பயணச்சீட்டுக் கட்டணத்தை மாநாட்டுப் பிற வரவு-செலவுடன் சேர்த்துக் கணக்கு பார்க்க வேண்டிய தேவை என்ன? அவ்வாறு பார்க்கவில்லை எனில், அவ்வாறு சொன்னதன் காரணம் என்ன?
 7. மாநாடுமுடிந்து இரு வாரம் ஆகியும் கணக்கு வழக்கை முடிக்கவில்லையா? ஏன்?
 8. சொன்னவாறு நவ.1அன்று பணம் அனுப்பப்பட்டடதா? அனுப்பியிருந்தால் வங்கிக்கணக்கில் வந்துசேருவதில் என்ன சிக்கல்? இல்லையெனில், அவ்வாறு  சொன்னதன் காரணம் என்ன?
 9. இது வரை பணம் அனுப்பாமல் இருப்பதால் மனச்சான்று குத்தவில்லையா?
 10. யாருக்குமே பணம் திரும்பத் தரவில்லையெனில் பல நூறாயிரம் உரூபாய்மோசடி செய்ததாகுமே! இது குறித்துக் கவலைப்படவில்லையா?
 11. நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்படும் அமைப்பு, தொடக்கத்திலேயே தடுமாறினால்- நம்பிக்கை யிழந்தால் – எங்ஙனம் அமைப்பு வளரும்?
 12. என் மூலமாகப் பணத்தைக் கொடுத்தவரிடம் என்னிடமே பணத்தைக் கேட்குமாறு கூறியது முறைதானா?
 13. ஒரு முறையாவது மாநாட்டுக் குழுவினர், தாமே முன்வந்து, பணம் திரும்ப அனுப்புவது குறித்துச் சொல்லாதது ஏன்? கேட்டால் மட்டும் சொல்வதால் சமாளிப்பு என்றுதானே கருத வேண்டியுள்ளது. அவ்வாறு மதித்துச் சொல்லியிருந்தால், இவ்வாறு எழுத வேண்டிய தேவை வந்திருக்காதே!
 14. உங்களிடம் பெற்ற கசப்பான பட்டறிவு இனி, அயலக மாநாடு என்றாலே அஞ்சி ஓடச்செய்து விடுமே! கனடாவாழ் தமிழர்களுக்கு அவப்பெயர் வருகிறதே! இவற்றைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லையா?
 15. எழுதுவற்கு இன்னும் செய்திகள் உள்ளன. இருந்தும் இனியேனும் நல்ல வழிகாட்டிகளைக்கொண்டு நன்முறையில் செயல்பட்டு அமைப்பை வளர்க்க வேண்டுகின்றேன்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 448)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை : 

அகரமுதல 212, ஐப்பசி 26 – 25, கார்த்திகை 02,  2048 /  நவம்பர் 12  – நவம்பர் 18,  2017