இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்!
கட்சி முறையில் இன்றித் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இராகுலிடம் தற்சார்புச் சிந்தனையும் மனத்தில் சரி என்று பட்டதை ஆற்றும் துணிவும் உள்ளமை புரிகிறது. கலைஞர் கருணாநிதியிடம் ஒத்துப்போகாத அவர், தாலினுடன் இணைந்து செயலாற்றுவதும் அவரது தற்சார்பின் விளைவே ஆகும்.
பேராயக்(காங்.)கட்சியும் அடிப்படையில் பா.ச.க.போன்றதே. எனவேதான் இராகுல் தன்னை வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிட்டும் மதத்தைக் குறிப்பிட்டும் அடையாளம் காட்டிக் கொள்கிறார்.
பசுக்கள் காப்பகம் குறித்த அவர் கருத்தும் அத்தகையதே. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்கிறவர் உயர் கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கட்டும் என்கிறார். (நீட்) பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இருக்காது என்கிறவர் விரும்புகின்ற மாநிலங்களில் இருக்கட்டும் என்கிறார். அப்படியாயின் அந்த மாநிலப் படிப்புகளில் சேர பிற மாநில மாணாக்கர்களுக்கும் பொதுத் தேர்விற்கான ஆயத்தம் தேவைப்படும் குழப்ப நிலைதானே இருக்கும். பா.ச.க.வைக் கண்டு அஞ்சிப் பலவற்றில் அவர் அதன் நிழல் போல் பேசுகிறார். எனினும் உரியவாறு அறிவுறுத்தினால் கேட்டுக்கொள்ளும் பக்குவம் அவரிடம் உள்ளது.
இராகுலின் நாடாளுமன்றச் செயல்பாடுகளும் தேர்தல் பரப்புரைகளும் அவரது ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. அண்மையில், நாக்பூரிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய இராகுல், “தமிழகத்தின் தலையெழுத்தைத் தலைமை யமைச்சர் அலுவலகம்தான் உருவாக்க வேண்டுமென்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று நம்புகிறோம். இந்தியாவை வலிமை மிக்க நாடாக்குவதில் தமிழர்களின் குரல் முதன்மைப் பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் மொழியை, தமிழ்ப் பண்பாட்டை நாங்கள் மதிக்கிறோம்.” என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று அவர் சொல்வதன் பொருள் மாநிலங்களில் மாநிலக்கட்சிகளின் ஆளுமைக்கு எதிராக மத்தியஅரசின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதுதான். எனவே, அடுத்து ஆட்சி அமைத்தால் இச்சிந்தனைக்கிணங்கச் செயல்படுவார் எனலாம். அதனால், ஒரே ஆட்சி, ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே கல்வி என்றெல்லாம் நாட்டைச் சிதைக்கும் கட்சிக்கு மாறாக நாட்டின் பன்முகப் பண்பாட்டையும் பன்முகத் தேசிய இனங்களின் சிறப்பையும் உணர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.
நரேந்திர(மோடி)க்கு இராகுல் பெரியார் நூலை அளிப்பதாகக் கூறியுள்ளார். பெரியார் நூலை அளிக்கும் வகையில் இராகுலுக்குப் பெரியார் கருத்துகளில் ஈடுபாடு உள்ளதை இது காட்டுகிறது.
எனவே, இராகுல் தமிழகம் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார் எனலாம். இவற்றைப் போல் அவர் தமிழர் தொன்மை, தமிழர் வரலாறு இலங்கை-ஈழ வரலாறு முதலியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர் படுகொலைகளுக்கான மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். எனினும் அவர் அவ்வாறு கேட்கத் தயங்கினால், இனித் தமிழ் ஈழ அறிந்தேற்பிற்காகப் பாடுபட வேண்டும். இப்பொழுதே தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் மத்தியில் ஆட்சி அமைத்ததும் தமிழ் ஈழ ஏற்பை அரசு சார்பில் அறிவிப்பதாகவும் தெரிவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கான தண்டனைகளைக், காலம் வழங்கட்டும். நாம் இன்றைய சூழலில் நிகழ்காலம் குறித்துமட்டும் கருத்து செலுத்துவோம். நமக்கு உடனடித் தேவை தமிழ் ஈழத்திற்கான அறிந்தேற்பே! எனவே, அதற்கான உறுதியை இராகுல் வழங்கட்டும்.
அவ்வாறு சொல்லாத வரையில் நாம் பேராயக்(காங்.)கட்சியை மன்னிக்க முடியாது. பேராயக்(காங்.)கட்சி மாநிலக்கட்சி என்ற முறையில் உ.பி.யில் வெற்றி பெற்று மாநிலக் கட்சிகள் அமைக்கும் கூட்டாட்சியில் இடம் பெறட்டும். பிற மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தமிழ் நாட்டில் பேராயக்(காங்.)கட்சி தோற்றால்தான் தமிழக மக்களின் ஆறா மனவலியை அக்கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள்.
தமிழகப் பேராயக்கட்சித் தலைவர்கள் உண்மை நிலையை மத்தியத் தலைமக்கு உணர்த்தத் தவறிவிட்டார்கள். அத்துடன் அவர்களின் தவறான கருத்துகளுக்கேற்பத் தாளம் போட்டு அவர்களைத் தூண்டி விட்டார்கள். எழுவரை விடுதலை செய்வது குறித்த இராகுல் கருத்திற்கு மாறாக முந்தைய தலைவரான திருநாவுக்கரசர் எழுவரை விடுதலை செய்யக் கூடாது என்று தெரிவித்தார். எப்பொழுதும் தமிழினப் பகைவனாக விளங்கும் (இளங்)கோவன் எழுவரை விடுதலை செய்வதாக அறிவித்தால் சிறைக்கே சென்று அவர்களை அழிப்பதாக அறிவித்தவன்தான். முந்தைய தேர்தல் முன்பு வரை தி.மு.க.விற்கு எதிராகவே செயல்பட்ட அவன், பின்னர்தான் தி.மு.க.விற்கும் துதிபாடினான். கலைஞர் கருணாநிதி அவன் நடிக்கிறான் என்று தெரிந்தும் அவன் பக்கம் இருந்தார். (பெருந்தலைவர் காமராசர் வழியில் அர் விகுதியைப் பயன்படுத்தவில்லை.) இவர்கள் இருவரும் மண்ணைக் கெளவும் வகையில் தோற்கடிக்கப்படுவதுதான் நாட்டிற்கு நல்லது. தமிழ் ஈழ மக்கள் படுகொலைகாரர்களையும் சட்டத்தின்படி விடுதலை செய்ப்படவேண்டிய அப்பாவிகள் எழுவர் விடுதலைக்கு எதிராக முழங்குபவர்களையும் தோற்கடிப்பதே தமிழ் மக்களின் இலக்காக இருக்க வேண்டும்.
தாலினைக் கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப்பேசுவது தவறு. ‘தாயைப்போல பிள்ளை’, ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’, ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ ‘வாத்தியார் பிள்ளை மக்கு ‘ என்பனவெல்லாம் பெற்றோர்- -பிள்ளைகள் திறமை எப்படியும் அமையாலம் என்பதற்குச் சான்று. சிலவற்றில் தாலின் தந்தையைப்போலும் வேறு சிலவற்றில் அவரைவிடக் குறைவான திறத்துடனும் மற்றும் சிலவற்றில் கூடுதல் திறமையுடனும் செயல்படுவதே இயற்கை. எனவே, அவரது வழியிலேயே இவர் செல்ல வேண்டும் எனப் பொருள் அல்ல. ஆதலால், அறிந்தும் அறியாமலும் ஏறத்தாழ இரு நூறாயிரம் தமிழ் ஈழ மக்கள் படுகொலைகளுக்கும் நிலப்பறிப்புகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் காரணமாகத் தி.மு.க.அரசும் இருந்தமைக்காக அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழீழ ஏற்பை அறிவித்து மத்திய அரசும் அறிவிக்க ஆவன செய்ய வேண்டும்.
மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா மாறத் தாலின் இராகுலுடன் இணைந்து செயல்பட்டு வலிவும் பொலிவும் மிக்க நாடாக நம் நாட்டை மாற்ற வேண்டும்.
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல
Leave a Reply