(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 9 : ஓரியின் புகழ்-தொடர்ச்சி)

தமிழர் வீரம்

உக்கிர பாண்டியன்

வேங்கை மார்பன் மறப்படை வீரன்; படைச் செருக்கால் பாண்டிய மன்னனையும் மதியாது இறுமாந்திருந்தான். அந்நாளில் மதுரையில் அரசு வீற்றிருந்த பாண்டியன் ஒரு பெரு வீரன். சோழ மன்னனும் சேரமானும் அவனுடைய சிறந்த நண்பர்கள். தமிழறிஞர்கள் அவனைச் சுற்றமெனச் சூழ்ந்திருந்தாரக்ள். இவ்விதம் பல்லாற்றானும் புகழ்பெற்று விளங்கிய பாண்டியன் பகைவர்க்கு மிகக் கொடியவன். அவரைக் கண்ணின்றி ஒறுப்பவன்; ஆதலால் உக்கிரப் பெருவழுதி என்று பெயர் பெற்றான்.

உக்கிரனும் வேங்கையும்

வழுதிக்கும் வேங்கைக்கும் பகை மூண்டது. பாண்டிப் பெரும்படை எழுந்து கானக்கோட்டையை வளைத்தது; காவற்காட்டை அழித்தது; அகழியைத் தூர்த்தது; எயிலைத் தகர்த்தது. வேங்கைமார்பன் அஞ்சாது வீரப்போர் புரிந்தான். அந்திமாலை வந்தது. காரிருள் எங்கும் பரந்தது. கடல் மடை திறந்தாற் போன்று பாண்டியன் படை கானக் கோட்டையினுள்ளே பாய்ந்தது. வேங்கை மார்பன் மாறுகோலம் புனைந்து காட்டிற் புகுந்து மறைந்தான். பொழுது விடிந்ததும் பாண்டியன் கானக்கோட்டையைக் கைப்பற்றினான்; மீனக் கொடியை அதன்மீது நாட்டினான்; பெரும்புகழ் பெற்றான். ‘கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி‘ என்று தமிழுலகம் அவனைப் பாராட்டியது.9

கானப்பேர் – காளையார் கோயில்

கானப்பேர் என்ற மூதூர் இப்பொழுது காளையார் கோயில் என வழங்குகின்றது. ஊரின் பெயர் மாறினாலும் மண்ணின் வாசி மாறவில்லை. உக்கிர பாண்டியனை வேங்கை மார்பன் எதிர்த்தாற்போன்று, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே ஆங்கிலப் படையைக் காளையார் கோயிலில் எதிர்த்தான் மருது பாண்டியன்.

மருது பாண்டியன்

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரனோடு ஆங்கிலப் படை போராடிக்கொண்டிருந்த காலத்தில் காளையார் கோயில் வட்டத்தில் மருதப்பன் என்ற பெயருடைய தலைவர் இருவர் தோன்றினர். அப்பெயர் மருது எனக் குறுகி வழங்கிற்று. தமையன், மருது பாண்டியன்; தம்பி, சின்ன மருது. முன்னவன், வேட்டையில் வல்லவன்; கானக வேட்டையே அவன் கருத்தை முற்றும் கவர்ந்தது. ஆதலால் நாடாளும் உரிமையைச் சின்ன மருது மேற்கொண்டான். காளையார் கோயிலுக்கு அருகேயுள்ள சிறுவயல் என்ற ஊரைத் தன் இருப்பிடமாகக் கொண்டான் மருது. அவ்வூரில் அரண்மனை எழுந்தது; குடிபடை குழுமின. சில ஆண்டுகளில் சிறுவயல் பல்லாற்றானும் சிறந்த ஊராயிற்று. தமிழ்ப் பாவலர் அவ்வூரை நாடிவந்தனர்; மருதப்பனைப் பாடிப் பரிசு பெற்றனர்; அவன் ஆட்சியில் அமைந்த காட்டின் வழியாக நள்ளிரவில் சென்றாலும் கள்ளர் பயம் இல்லை என்ற பேச்சு எங்கும் பரவியிருந்தது. இத்தகைய கட்டும் காவலும் உடைய தலைவனை மருது பாண்டியன் என்று நாட்டார் பாராட்டினார்கள்.

அவன் ஆட்சித் திறன்

மருதுபாண்டியன் மாளிகையில் விருந்தாளியாக இருந்த ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் அங்குக் கண்ட காட்சியை எழுதியுள்ளான். ” சின்ன மருது காட்சிக்கு எளியவன்; கருணை வாய்ந்தவன். இந்நாட்டில் அவன் இட்டது சட்டம். ஆயினும், அவன் மாளிகையில் எவரும் தங்கு தடையின்றிச் செல்லலாம்; அவனைக் காணலாம்; வந்தவர் எல்லாம் அவனை வாயார வாழ்த்தினர்” என்பது அப்படைத் தலைவன் வாய்மொழி. இவ்வாறு மருது பாண்டியனோடு உறவாடிய படைத்தலைவனே பின்பு அவன் பகைவனாயினான்.

பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலப் படையை எதிர்த்த பாளையக்காரனோடு மருது பாண்டியன் உறவு பூண்டிருந்தான். அவ்விருவரும் வீரசுதந்தரம் வேண்டி நின்றார். பிறர் அடிபணிந்து வாழ்வதினும் அடியோடு மடிந்தொழிதல் நன்று என்று கருதிய மானவீரர் அவர்; ஆதலால், ஆங்கிலேயரது சீற்றத்திற்கு ஆளாயினர். ஆயினும் மருது பாண்டியனது வல்லரணாகிய காளையார் கோயிலை மாற்றார் எளிதில் கைப்பற்ற முடியவில்லை.

காளையார் கோட்டை

“நாற்பது கல் சுற்றளவுள்ள நாட்டின் நடுவே அமைந்துள்ளது காளையார் கோட்டை. ஆடு மாடுகளைச் செல்வமாகவுடைய குடிகள் பல்லாயிரவர் அவ்வட்டத்தில் வாழ்கின்றனர். மாற்றார் படையெடுத்தால் அன்னவரிற் பன்னீராயிரவர் வேலும் வாளும், குத்துக்கோலும் துப்பாக்கியும் கொண்டு போர் செய்யப் புறப்படுவர்” என்று ஆங்கிலச் சேனாதிபதி கூறுகின்றான்.

பட்டாளமும் காவற்காடும்

சின்ன மருது வாழ்ந்த சிறுவயல்மீது ஆங்கிலப் பட்டாளம் சாடிற்று. அத் தலைவன் அப்பொழுது அங்கில்லை; மாற்றார் வந்து சேர்வதற்கு முன்னே குடிகள் தம் தம் வீட்டில் நெருப்பை வைத்தனர்; அடுத்திருந்த காட்டிற் புகுந்து மறைந்தனர். அப்பொழுது வீசிய நெடுங்காற்று அவர் இட்ட தீயை எங்கும் பரப்பிற்று. அந்தி மாலையில் அங்கு வந்து சேர்ந்த ஆங்கிலப் படையின் கண்ணெதிரே கரிந்த சுவரும், பொரிந்த கல்லும் காட்சி யளித்தன.

மருது பாண்டியர் முடிவு

அதைக் கடந்து காளையார் கோயிலைக் கைப்பற்றக் கருதியது ஆங்கிலப் படை. வழியிலே தடையாக நின்ற காட்டையழித்துப் படை செல்வதற்கு ஏற்ற பாதையமைக்க முற்பட்டார் பட்டாளத்தார். ஆறு கல் தூரம் காட்டை வெட்டி விட்டால் காளையார் கோட்டையைக் காணலாம். ஆயினும், அக்காடு பட்டாளத்தின் வலிமையைப் பழித்து நின்றது. காட்டுப் போரில் நன்கு பழகிய மருதுபாண்டியன் படை பகைவர்க்கு எல்லையற்ற தொல்லை விளைத்தது. காட்டின் கடுமையும், மாற்றார் கொடுமையும் கண்டு ஆங்கிலப் படைவீரர் ஊக்கமிழந்தனர்; முப்பது நாள் முயன்றும் முன்னேற முடியாத நிலை கண்டு முணுமுணுத்தனர்; அம் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பினர்; பின்பு மறவர் குலத் தலைவன் ஒருவனை அவ் வட்டத்திற்குரியவன் என்று பட்டங் கட்டி அவனுதவியால் மருதுபாண்டியர் இருவரையும் பிடித்துத் தூக்கு மரத்திலிட்டுக் கொன்றனர். ஆகவே, முன்னாளில் ‘கானப்பேர்’ எனப் பெயர் பெற்றிருந்த பாண்டி நாட்டுக் கோட்டை காளையார் கோட்டையாகச் சென்ற நூற்றாண்டு வரை நின்று நிலவிற்றென்பது நன்கு விளங்கும்.10

படை வீடு

படையெடுத்துச் செல்லும் தலைவன் தங்கி யிருக்குமிடம் படைவீடு எனப்படும். அது, கட்டும் காவலும் உடையது. கங்கைக் கரையிலே சேரன் செங்குட்டுவன் தங்கியிருந்த படை வீடு அவன் பெருமைக்கேற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தது என்பது சிலப்பதிகாரத்தால் விளங்குவதாகும்.

மணப் படை வீடு

இத்தகைய படை வீடுகளில் நெடுங்காலம் தலைவர்கள் சேனையோடு தங்கும்படி நேர்ந்தால் அவ்விடத்தில் அங்காடி முதலிய வசதிகள் உண்டாகும். நாளடைவில் அஃது ஓர் ஊராக நிலைபெறுதலும் உண்டு. பாண்டி நாட்டில் பொருனை யாற்றங் கரையில் படைவீடாகத் தோன்றிய இடம் இப்பொழுது மணப் படைவீடு என்ற ஊராயிருக்கின்றது.11

படை வீடு நகரம்

ஆர்க்காட்டு வட்டத்தில் முன்னாளில் ஒரு படை வீடு எழுந்தது. குறும்பர் கோமான் குலத்தாருடையது அவ் வீடு. குறும்பர் கோமான் சிறந்த வீரன். அவன் நிறுவிய படை வீட்டைச் சார்ந்து குடிபடை மிகுந்தது. நாளடைவில் அது விரிந்து பெருகி ஊராயிற்று. குறும்பர்கோன் ஆண்ட நாட்டிற்கு இதுவே தலைநகரமாகவும் அமைந்தது.

அந் நாளில் அந் நகரம் பதினாறு கல் சுற்றள வுடையதாய், மாடகூடங்கள் நிறைந்ததாய்ப் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கிற்று. அவ்விடம் இப்பொழுது பாழடைந்த காடாய்க் கிடக்கின்றது. அழிந்த கோட்டையின் அடிப்படை அதன் பழம் பெருமைக்குச் சான்றாக நிற்கின்றது.

நாசமுற்ற நகரம்

அந் நகரம் அழிவுற்றதைக் குறித்து வழங்கும் கதைகள் பலவாகும். குறும்பர் நாட்டைக் கொடுங்கோல் மன்னன் ஒருவன் அரசாண்டபோது மண்மாரி பெய்து படைவீட்டை அழித்த தென்பர் சிலர். கரிகால் வளவன் குறும்பர் நாட்டின்மேற் படையெடுத்து, படை வீட்டைத் தகர்த்தெறிந்து, குறும்பர் குலத்தை வேரறுத்தான் என்பர் வேறு சிலர். எவ்வாறாயினும் படைவீடு என்ற பெயர் அவ்வூருக்கு இன்றும் வழங்குகின்றது.

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்

++++++++++++++++++++++++

குறிப்பு

9. புறநானூறு, 21.

10. Caldwell’s History of Tinnevelly, pp. 210-221

11. இப்பொழுது அவ்வூர் மணப்படை என வழங்கப்படும்