(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 16 : வீர விருதுகள்-தொடர்ச்சி)

தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்களில் வீரம் விளைத்தவர் எண்ணிறந்தவர். அன்னார் பீடும் பெயரும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் ஆண்மைக்குச் சில ஊர்களே சான்றாக நிற்கின்றன.

பாலாற்று வென்றான்
பாலாற்றங் கரையில் நிகழ்ந்த போர்கள் பலவாகும். அப் போர்களங்களில் பெருகிய செந்நீர் பாலாற்றில் சுரந்த தண்ணீரோடு கலந்து ஓடிற்று. அவ்வாற்றங்கரையில் வெம் போர் புரிந்து வெற்றி பெற்றான் ஒரு வீரன். அவனைப் “பாலாற்று வென்றான்” என்று தமிழ் நாட்டார் பாராட்டினர். அப்படிப்பட்ட பெயர் கொண்ட பல ஊர்கள் இன்றும் ஆர்க்காட்டு வட்டத்தில் உண்டு.[1]

செய்யாற்று வென்றான்
அவ்வாறே செய்யாற்றங்கரையில் நடந்த போரில் மாற்றாரை வென்று மேம்பட்டான் ஒரு தலைவன். அவனைச் “செய்யாற்று வென்றான்” என்று சீராட்டினர் தமிழ் மக்கள். அவ் விருதுப் பெயரும் ஊர்ப்பெயராயிற்று.[2]

+++++

[1]. வட ஆர்க்காட்டு ஆரணி வட்டத்தில் பாலாற்று வென்றான் என்ற ஊர் உள்ளது; வேலூர் வட்டத்தில் அப் பெயருடைய மற்றோர் ஊர் உள்ளது.

[2]. வட ஆர்க்காட்டுச் செய்யாற்று வட்டத்தில் செய்யாற்று வென்றான் என்னும் ஊர் உண்டு; தென் ஆர்க்காட்டு விழுப்புர வட்டத்தில் செய்யாற்று வென்றான் என்ற மற்றோர் ஊர் உள்ளது.

++++

தமிழ்நாட்டார் சீர்குலைந்து சிறுமையுற்றமையால் அவ்வூர்ப் பெயர்களும் சிதைவுற்றன. பாலாற்று வென்றான், செய்யாற்று வென்றான் என்ற பெயர்கள் முறையே பாலாத்து வண்ணான் எனவும், செய்யாத்து வண்ணான் எனவும் இப்பொழுது மருவி வழங்குகின்றன. மாறுபட்ட பகைவரை முடுக்கியடித்த வீரத்தலைவரை, ஆற்றங்கரையில் ஆடையை மடித்துத் துவைக்கும் வண்ணாராகக் காண்கிறது இக்காலத் தமிழகம் !

சரந்தாங்கி
இன்னும் சரமாரி பொழியும் போர்க்களத்தில் சஞ்சலமின்றி நின்று போர் புரிந்தனர் தமிழ் நாட்டு மெய்வீரர். மாற்றார் வில்லினின்று எழுந்து வந்த அம்புகளை மலைபோன்ற தன் மார்பிலே தாங்கி நிலைகுலையாமல் நின்றான் ஒரு வீரன். அவ்வீரத்தைக் கண்டு வியந்தனர் இரு திறத்தாரும்; ‘சரந்தாங்கி’ என்றும் சிறப்புப் பெயர் அளித்துச் சீராட்டினர். அறந்தாங்கிய சீலன் பெயர் தஞ்சை நாட்டிலே ஓர் ஊருக்கு அமைந்தாற் போன்று சரந்தாங்கிய வீரன் பெயர், பாண்டி நாட்டு நிலக்கோட்டை வட்டத்தில் ஓர் ஊரின் பெயராக நின்று நிலவுகின்றது.

கணை முறித்தான்
வில்லாண்மையுடைய மற்றொரு வீரன் மாற்றார் விடுத்த கொடுங்கணைகளைத் தன் நெடுங் கரத்தாற் பற்றினான்; முறித்தெறிந்தான்; அவ் வருஞ்செயலைக் கண்டு வியந்தது வீரர் உலகம். ‘கணை முறித்தான்’ என்பது அவனுக்குரிய சிறப்புப் பெயராயிற்று. அப் பெயர் பெற்ற ஊர் தென்னாட்டு அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ளது.

பயமறியான்
அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே” என்று பாடினார் பாரதியார். அதற்கு எடுத்துக் காட்டாக முன்னாளில் விளங்கினான் ஒரு வீரன். அவனைப் ‘பயமறியான்’ என்று தமிழகம் பாராட்டியது. தஞ்சை நாட்டிலே அறந்தாங்கி வட்டத்தில் உள்ள ‘பயமறியான்’ என்ற ஊர் அவன் பெயர் தாங்கி நிற்கின்றது.

அழியாத நினைவுச் சின்னம்

இன்னும் மறம் அடக்கி, அமர் அடக்கி, எப்போதும் வென்றான் முதலிய பட்டப் பெயர்கள் இப்போதும் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. இத்தகைய வீரம் விளைத்தவர் இன்னார் என்பது விளங்கவில்லை; அவர் ஊரும் பேரும் தெரியவில்லை; குலமும் குடியும் துலங்கவில்லை. ஆயினும், அவர் காட்டிய வீரம் நம்நாட்டு ஊர்ப் பெயர்களில் நின்று ஒளிர்கின்றது. வீரற்கு நாட்டும் நடுகல் ஒருகால் அழியலாம்; உருவச் சிலை ஒடிந்து விழலாம்; ஆனால், ஊர்ப் பெயர்களில் வாழும் இவ் வீரர் புகழுக்கு எந்நாளும் இறுதியில்லை.

(தொடரும்)