இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 5 : மான வீரம்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் – தொடர்ச்சி)
தமிழர் வீரம்
மான வீரம்
மானங் காத்தான்
மானமே உயிரினும் சிறந்ததென்பது தமிழ்நாட்டார் கொள்கை. “மானங் கெடவரின் வாழாமை முன் இனிதே” என்றார் ஒரு தமிழ்ப் புலவர். எனவே, மானங் காத்த வீரனை மனமாரப் போற்றும் வழக்கம் தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் உண்டு. நாட்டின் மானத்தைக் காத்தருளிய வீரன் ஒருவனுக்கு “மானங் காத்தான்” என்ற பட்டம் சூட்டிய நாடு தமிழ் நாடு. அவன் பெயரைத் தாங்கிய ஊர்கள் இன்றும் பாண்டி நாட்டில் நின்று நிலவுகின்றன.1
விழுப்புண் புறப்புண்
போர்க்களத்தில் முகத்திலும் மார்பிலும் புண்பட்ட வீரனை எல்லோரும் போற்றுவர்;2 விழுப் புண் பெற்றான் என்று வியந்து பேசுவர்; வீரக்கல் நாட்டி வணக்கம் செலுத்துவர். ஆனால், புறத்திலே புண்பட்ட வீரனை எல்லாரும் இகழ்வர்; போர்க்களத்தில் புறங்காட்டி ஓடியதற்கு அடையாளமாகிய அப்புண்ணைப் பார்க்குந்தோறும் பழித்தும் இழித்தும் பேசுவர். ஆதலால் மான வீரர் ஒருபோதும் புறப் புண் தாங்கி உயிர் வாழ இசையார்.1
புறப்புண் பட்ட சேரலாதன்
பெருஞ் சேரலாதன் என்னும் சேர மன்னன் வரலாறு இவ்வுண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். வெண்ணிப் போர்க்களத்தில் புறப்புண் பட்டதாக எண்ணினான் சேரன். அப்போதே உயிரை வெறுத்தான்; உண்ணா நோன்பிருந்து உயிர் விடுத்தான்.
சேரனுக்குப் பாராட்டு
அப் போர் நிகழ்ந்த ஊரிலே ஒரு பெண்மணி விளங்கினாள். அவள் குயக் குலத்தில் பிறந்தவள்; கவிபாடும் திறம் பெற்றவள். போர்க்களத்தைக் கண்ணாற் கண்ட அம் மாது இருவகையில் இன்பம் உற்றாள். தன் நாட்டரசன் – திருமாவளவன் – வெற்றி பெற்றான் என்றறிந்த நிலையிற் பிறந்த இன்பம் ஒரு வகை. செருக்களத்தில் தோற்று ஓடிய சேரலாதன் மான வீரனாய் வடக்கிருந்து மாண்டான் என்று கேள்வியுற்றபோது பெற்ற இன்பம் மற்றொரு வகை. வாகை சூடிய வளவனை நோக்கி, “அரசே, வெண்ணிப் போர்க்களத்தில் மாற்றார்மீது சாடினாய்; வெற்றிமாலை சூடினாய்; வல்லவன் நீயே; ஆயினும் மானம் பொறாது உயிர் துறந்த சேரன் நின்னினும் நல்லவன்” என்று பாடினாள்3. எனவே வளவனது வீரத்தை வியந்து பாராட்டிய தமிழ் உலகம் சேரன் மானத்தையும் மதித்துப் புகழ்ந்த தென்பது நன்கு விளங்கும்.
மானங் காத்த சாமந்தர்
இரு வீரர்
ஆபத்து வேளையில் மாநில மன்னர்க்கு நேர்ந்த மானங்காத்து, மாயாப் புகழ் பெற்ற சிற்றரசரும் தமிழ் நாட்டில் உண்டு. காவிரி நாட்டை சோழ மன்னனுக்கு மீட்டுக் கொடுத்தான் ஒரு சிற்றரசன். தொண்டை நாட்டை யாண்ட பல்லவ மன்னனுக்கு நேர்ந்த பழி தீர்த்தான் மற்றொரு சிற்றரசன். இடுக்கண் களைந்த அவ்வீரர், இருவரையும் தமிழ் நாடு போற்றிப் புகழ்ந்தது.
உறந்தைப் போர்
பழங்காலத்தில் உறந்தையில் அரசாண்ட வளவன் ஒருவனைத் தாக்கினார் பகையரசர். பகல் முழுவதும் போர் நடந்தது. அந்தி மாலையில் சோழியப் படைநிலை குலைந்தது. போர்வீரர் புறங்காட்டி ஓடினர். சோழனைச் சிறை பிடிக்க மாற்றரசர் நாற்றிசையும் துருவித் திரிந்தார்கள். மாறு கோலம் புனைந்து, நழுவியோடினான் வளவன். காரிருள் அவனுக்குப் பேரருள் புரிந்தது. பொழுது புலருமுன்னே நடு நாட்டில் உள்ள முள்ளூர் மலையைச் சென்றடைந்தான் அம் மன்னன்.
திருக்கண்ணன் கோட்டை
மலையமான் மரபில் வந்த திருக்கண்ணன் என்ற குறுநில மன்னன் அப்போது முள்ளூர்க் கோட்டையை ஆண்டுவந்தான். அவன் தஞ்சமடைந்தோரைத் தாங்கும் தகைமை வாய்ந்தவன்; வருந்தி வந்தடைந்த வளவனை அவன் வரவேற்றான்; கோட்டையில் வைத்து ஆதரித்தான்.
காவிரி நாட்டின் நிலை
காவலனை இழந்த காவிரி நாடு கலக்கமுற்றது. குடிகள் கண்ணீர் வடித்தார்கள்; மாற்றார் கொடுமைக்கு ஆற்றாது துடித்தார்கள். அந் நிலையை அறிந்தான் திருக்கண்ணன்; மனம் வருந்தினான்; மன்னனுக்கு நேர்ந்த மானத்தையும், மாந்தர் படும் துயரத்தையும் ஒழிக்கத் துணிந்தான்.
திருக்கண்ணன் படையெடுப்பு
பெண்ணையாற்றங்கரையினின்று ஒரு நன்னாளில் புறப்பட்டது கண்ணன் சேனை. ஆங்காங்கு மறைந்திருந்த சோழிய வீரர் அப் படையில் சேர்ந்தார்கள். உறந்தையின் அருகே கண்ணன் சேனைக்கும் மாற்றார் சேனைக்கும் கடும்போர் நிகழ்ந்தது. பகையரசர் மனத்திட்பம் இழந்தனர்; பறித்த பொருளையெல்லாம் போர்க்களத்திற் போட்டு ஓட்டம் பிடித்தனர்.
பாராட்டும் பட்டமும்
வெற்றிபெற்ற கண்ணன், வளவனை உறையூருக்கு அழைத்து வந்தான்; அரியாசனத்தில் அமர்த்தினான். மழை முகங் காணாத பயிர்போல வாடியிருந்த குடிகள் எல்லாம் அரசன் வருகையால் இன்புற்று மகிழ்ந்தார்கள். மானங்காத்தான் மலையமான் திருக்கண்ணன் என்று பாராட்டினர் மாந்தரெல்லாம். ஆபத்துக் காலத்தில் அடைக்கலம் தந்து, அரசையும் மீட்டுக் கொடுத்த கண்ணனை மனமாரப் புகழ்ந்து ஏனாதிப் பட்டம் அளித்தான் வளவன். அன்றுமுதல் “மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்” என்று தமிழ் நாடு அவனைப் புகழ்வதாயிற்று.4
பல்லவர்கோன் – நந்தி
பல்லவகுல மன்னனாகிய நந்திவர்மன் காஞ்சி மாநகரில் அரசு புரிந்தான். அவனுக்குப் பகைவர் பலராயினர். ஆயினும் படைத் திறமும் பண்பாடும் வாய்ந்த உதயசந்திரன் என்ற சாமந்தன் உற்ற துணைவனாக அமைந்தமையால் நந்திவர்மன் கவலையற்றிருந்தான். கும்பகோணத்திற்கு அருகே இப்போது நாதன் கோயில் என வழங்கும் ஊர் அப்போது பல்லவ நகரமாகச் சிறந்து விளங்கிற்று. நந்திபுரம் என்பது அதன் பழம் பெயர். அவ்வூரிலே கோட்டையும் கோவிலும் கட்டினான் நந்திவர்மன்.
தென்னவன் முற்றுகை
அப்பதியிலே தங்கியிருந்த நந்தி மன்னனைப் பாண்டியன் இராசசிம்மன் பெருஞ்சேனை கொண்டு தாக்கினான்; கோட்டையை முற்றுகையிட்டான். நந்தியின் சிறு படை நலிவுற்றது.
உதயசந்திரன் உதவி
தொண்டை நாட்டில் இருந்த உதயசந்திரன் அதனை அறிந்தான்; தன் சேனையோடு விரைந்து போந்தான்; பாண்டியனது படையைத் தாக்கினான். நாற்புறமும் நந்தி புரத்தை வளைத்து நின்ற மறப்படை உலைந்து ஓடத் தொடங்கிற்று. உதயசந்திரன் அதனை விடாமல் தொடர்ந்து ஒறுத்தான்; நிம்பவனம், சூதவனம் முதலிய போர்க் களங்களில் மாற்றாரை முறியடித்தான்; பல்லவ வேந்தனுக்கு நேர்ந்த பழியை மாற்றினான்.5
உதயசந்திரபுரம்
காலத்தில் வந்து மானங்காத்த சாமந்தனை நந்திமன்னன் மனமாரப் போற்றினான்; அவன் வீரப்புகழ் என்றும் நின்று நிலவும் வண்ணம் உதயசந்திரபுரம் என்று ஓர் ஊருக்குப் பேரிட்டான். இப்போது வடவார்க்காட்டில் உதயேந்திரம் என வழங்குவது அதுவே.
அவன் நாடும் பீடும்
இத்தகைய புகழ் அமைந்த வீரன் வேகவதியாற்றின் கரையிலுள்ள வில்லிவலம் என்ற ஊரிலே பிறந்தவன்; பெருமை சான்ற குலத்தைச் சேர்ந்தவன்;[6] அருந்திறலும் ஆன்ற குடிப்பிறப்பும் உடைய அவ்வீரன் பல்லவ மன்னனுக்கு ஆபத்தில் உதவி செய்து அழியாப் புகழ் பெற்றான்.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்
+++++++++++++++++++++++++++++++
குறிப்புகள்
1. இராமநாதபுரம் சில்லா, அருப்புக்கோட்டைத் தாலுகாவில் மானங்காத்தான் என்னும் ஊர் உள்ளது.
2. “விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து” … விழுப்புண் – முகத்திலும் மார்பிலும் பட்ட புண் என்று உரைத்தார், பரிமேலழகர்.
3. ” களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்ததின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே’ – புறநானூறு, 66.
4. “எள்ளறு சிறப்பின் முள்ளுர் மீமிசை
அருவழி யிருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந !” – புறநானூறு, 174.
5. காஞ்சிப் பல்லவர் (ஆர். கோபாலன்), ப. 123.
6. உதயேந்திரச் செப்பேடுகள்: (S.i.i.Vol.ii, part 3. p 372.)
Leave a Reply