(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள் – தொடர்ச்சி)

தமிழர் வீரம்
ஓரியின் புகழ்

படைத்திறமும் கொடைத்திறமும் வாய்ந்த வல்வில் ஓரியைப் பாராட்டிப் பாடினார், வன்பரணர். அவரது பாட்டின் சுவையறிந்து மகிழ்ந்தது பழந்தமிழ் உலகம். செஞ்சிக் கோட்டை திண்டிவனத்திற்கு மேற்கே உள்ளது செஞ்சிக் கோட்டை. அஃது இயற்கையான மலைக்கோட்டை. ஒன்றோடு ஒன்று இணைந்த மூன்று குன்றுகளால் அரண் செய்யப்பட்டுள்ள அக்கோட்டையின் சுற்றளவு ஏழு கல் என்பர். அவற்றுள் உயர்ந்தது இராசகிரி யென்னும் கொடுமுடி. செங்குத்தாக அறுநூறடி எழுந்து அண்ணாந்து நிற்பது அக்குன்றம். அங்குள்ள கோட்டைக்கு வாயில் ஒன்றே; மலையடிவாரத்திலிருந்து பெரும் பாறைகளின் இடையே நெளிந்து வளைந்து செல்லும் நடைபாதை அவ்வாயிலுக்கு எதிரேயுள்ள ஒரு பறம்பின் உச்சியிற் கொண்டு சேர்க்கும். அதற்கும் கோட்டை வாயிலுக்கும் இடையே அறுபதடி ஆழமும், இருபத்தைந்தடி அகலமும் உள்ள விடர் ஒன்று உள்ளது. அவ் விடரைக் கடந்து கோட்டை வாயிலை அடைவதற்கு மரப்பாலம் ஒன்றுண்டு. பகைவர் வரும்பொழுது பாலம் எடுக்கப்படும்; வாயில் அடைக்கப்படும்.


செஞ்சியில் நெல்லும் நீரும்
அருங் கோடையிலும் வற்றாத ஊற்று நீர் உடையது செஞ்சிமலைக் கோட்டை. உணவுப் பொருள்களை நிறைத்து வைத்தற்குக் களஞ்சியங்களும், வழிபாடு செய்வதற்குத் திருக்கோயிலும் அங்கே உண்டு. எனவே, பகைவர் பன்னாள் முற்றுகையிட்டாலும் கோட்டையிலுள்ளார்க்கு வாட்டமும் கோட்டமும் இல்லை. நெல்லும் நீரும் உடைய கோட்டையை வெல்லும் வகையின்றிச் செல்வர், படை யெடுத்த பகைவர்.


மராட்டியரும் மகமதியரும்
இத்தகைய மலைக்கோட்டைகுச் செஞ்சியென்று பெயரிட்டவர் தமிழர். பழமையான செஞ்சியைப் பதுக்கி அரண் அமைத்தனர் விசயநகரப் பெருவேந்தர். பிற்காலத்தில் அக்கோட்டை மராட்டிய மன்னர்க்குத் தஞ்சம் அளித்தது. அதனைக் கைப்பற்றுதற்கு மகமதியப் பெரும்படை எட்டாண்டுகளாக முற்றுகையிட்டு முயன்றதென்று இந்திய வரலாறு கூறும். செஞ்சியில் அரசாண்ட வீரதேசிங்கின் கதை வீட்டுக் கதையாக இன்றும் தமிழ் நாட்டில் வழங்குகின்றது.


நீர் அரண்
நீரும் ஒரு சிறந்த அரணாகும். ஆழமான ஆறும் கடலும் சில கோட்டைகளின் இயற்கை அரணாக இன்றும் விளங்குகின்றன. தமிழ் நாட்டுக்குத் தென்பால் அமைந்த இலங்கை, கடல் சூழ்ந்த நாடு. பாரத நாட்டின்மேற் படை யெடுத்த பகையரசர் பலர் இலங்கையின்மேற் செல்லா தொழிந்ததற்குக் கடலரனும் ஒரு காரணமாகும்.

அகழி
இயற்கையான நீரரண் இல்லாத இடங்களில் செயற்கையான நீர் நிலைகளை அமைத்துக் கொள்ளுதல் வழக்கம். அவை அகழி எனப்படும். அகழியில்லாத நிலக் கோட்டை தமிழகத்திலே இல்லை. சில கோட்டைகளைச் சுற்றி அடுக்கடுக்காகப் பல அகழிகள் அமைத்தலும் உண்டு. ஆறு அகழிகளால் அரண் செய்யப்பட்ட கோட்டை யொன்று ஆறகழூர் என்று பெயர் பெற்றது. அக் கோட்டையை வாண குலத்தரசர் ஆண்டு வந்தார்.

கிடங்கு
கிடங்கு என்ற சொல்லும் அகழியைக் குறிக்கும். கிடங்கு சூழ்ந்த கோட்டையொன்று முன்னாளில் ஆர்க்காட்டு வட்டத்தில் இருந்தது. அது கிடங்கில் என்றே வழங்கிற்று. ஓவியர் குலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் நெடுங்காலம் அக் கோட்டையில் இருந்து அரசாண்டார்கள். அன்னார் ஆட்சியில் அமைந்த நாடு ஓய்மான் நாடு என்று பெயர் பெற்றது. இப்பொழுது தென் ஆர்க்காட்டு வட்டத்திலுள்ள திண்டிவனம் முதலிய ஊர்கள் அக்காலத்தில் ஓய்மானாட்டைச் சேர்ந்திருந்தன.


கிடங்கிற் கோமான்
ஓய்மான் குலத்தைச் சேர்ந்த தலைவர்களில் உயர்ந்த புகழ் வாய்ந்தவன் நல்லியக் கோடன். அவனுடைய படைத்திறமும் கொடைத்திறமும் சிறுபாணாற்றுப்படை என்னும் பழந்தமிழ்ப் பாட்டில் அமையும் பேறு பெற்றன. அப் பாட்டில் நல்லியக்கோடான் ‘கிடங்கிற் கோமான்’ என்று குறிக்கப்படுதலால் கிடங்கு சூழ்ந்த கோட்டை அவற்குரிய கடிநகராய் விளங்கிற்றென்று கொள்ளலாகும். திண்டிவனத்துக்கு அருகே கிடங்கல் என்ற சிற்றூர் உள்ளது. அதுவே பழைய கிடங்கிற் கோட்டையாகும். சிதைந்து அழிந்த அகழிகள் அதன் பழம் பெருமைக்குச் சான்று பகர்கின்றன.


காட்டரண் காவற்காடு
மரமடர்ந்த அடவியும் கோட்டைக்குரிய அரணாகக் கருதப்பட்டது. அகழியின் புறத்தே நின்று காட்டரண் கோட்டையைப் பாதுகாக்கும். அரணாக நிற்கும் காட்டைக் காவற்காடு என்றும், கடிமிளை என்றும் கூறுவர்.


முள்ளூர்க் கோட்டை
மாற்றாரால் எளிதில் அழிக்க முடியாத காடே சிறந்த அரணாகும். முள்ளும் முரணும் உடைய காடு முன்னாளில் மிகச் சிறந்த அரணாகக் கொள்ளப்பட்டது. முள்மரக் காடு சூழ்ந்த மலையொன்று பழங்காலத்தில் ஒரு கோட்டையாக விளங்கிற்று. மழைவளமுடைய அம்மலையை “மையணி நெடுவரை” என்று பாடினார் ஒரு கவிஞர்.(7) முள்ளூர்மலை என வழங்கிய அக் குன்றில் மலையமான் கோட்டை கட்டி அரசாண்டான். முடிமன்னனாகிய பெருநற்கிள்ளியும் நாடிழந்த நிலையில் முள்ளூர்க் கோட்டையை நாடியடைந்தான் என்றால் அதன் பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமா?


வேலங்காடு
முள்மரங்களில் வன்மை சான்றது கருவேல். வட ஆர்க்காட்டில் கருவேலங்காட்டை அரணாகக் கொண் டிருந்தது ஒரு கோட்டை. அக் கோட்டையூர் வேலூர் என்று பேர் பெற்றது. அந்நாளில் வேலூரை அரண் செய்த காடு இப்போது அழிந்து நாடாய்விட்டது.


வட்டக்கோட்டை
ஆயினும் கருவேலங்காட்டை அரணாகவுடைய கோட்டை யொன்று இன்றும் கன்னியாகுமரியின் அருகே காணப்படுகிறது. வட்டக்கோட்டை யென்பது அதன் பெயர். குமரிக்கடல் அதன் ஒரு சார் அமைந்த அரண். கருவேலங்காடு மற்றொரு பால் உள்ளது. காட்டரணாகிய கருவேலங்காடு இன்றும் அழிவுறாமல் அங்கு நின்று காட்சி தருகின்றது.

புளியங்காடு
வேலங்காட்டைப் போலவே புளியங்காடும் ஒரு வல்லரணாகப் போற்றப்பட்டது. தென் ஆர்க்காட்டுக் கிடங்கிற் கோட்டையின் அரணாக நின்றது ஒரு புளியங்காடு; அது திண்டிவனம் என்னும் வட மொழிப் பெயர் பெற்றது. காலகதியில் கிடங்கிற் கோட்டை பாழடைந்தது. காவற்காடு நாடாயிற்று. இப்பொழுது திண்டிவனம் தென் ஆர்க்காட்டில் பெரியதோர் ஊராக விளங்குகின்றது.

கோட்டை மதில்
கோட்டைக்குரிய அங்கங்களிற் சிறந்தது மதில். இஞ்சி, எயில், ஆரை, புரிசை, நொச்சி முதலிய பழஞ்சொற்கள் கோட்டையின் மதிலைக் குறிப்பனவாகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, தஞ்சாவூர் சோழ நாட்டின் தலைநகரமாயிற்று. அங்கு இயற்கையான மலையரண் இல்லாமையால் உயர்ந்த மதில்களை உண்டாக்கினர் சோழ மன்னர். அந் நகரை “இஞ்சி சூழ் தஞ்சை” என்று திருவிசைப்பா பாடிற்று.
எயில் என்பது மதிலின் பெயர். ஏழெயில் என்ற கோட்டை யொன்று அக் காலத்தில் இருந்தது. அதன் தலைவன் ஒரு குறுநில மன்னன். நலங்கிள்ளி என்னும் சோழன் அக் கோட்டையை முற்றுகையிட்டுக் கவர்ந்தான். ஏழு மதில்களால் அரண் செய்யப்பட்ட வலிய கோட்டையை எளிதாகப் பிடித்த நலங்கிள்ளியின் வீரத்தை வியந்து பாடினார் கோவூர் கிழார்.8 இக் காலத்தில் ஏழு பொன் கோட்டையென வழங்கும் ஊரே பழைய *ஏழெயில் என்பர்.


பேரெயில்
எயில் என்னும் பெயருடைய ஊர்களும் தமிழகத்தில் சில உண்டு. திருவாரூருக்கு அருகே பேரெயில் என்ற பெயருடைய ஊர் இருந்தது. அது பிற்காலத்தில் பேரெயிலூர் ஆயிற்று; இப்பொழுது பேரையூர் என வழங்குகின்றது. அவ்வூரைச் சார்ந்த பழம் புலவர் ஒருவர் ‘பேரெயில் முருவலார்’ என்று பெயர் பெற்றார்.


கானப் பேரெயில்
பண்டியநாட்டுக் கோட்டைகளில் மிகப் பழமை வாய்ந்தது கானப்பேரெயில். உயர்ந்த மதிலும், ஆழ்ந்த அகழியும், அடர்ந்த காடும் அதற்கு அரணாக அமைந்தன. வேங்கைமார்பன் என்ற வீரப் பெயருடைய குறுநில மன்னன பழங்காலத்தில் அங்கு ஆட்சி புரிந்தான்.

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்

++++++++++++++++++++++++

குறிப்பு

7. பொய்யா நாவிற் கபிலன் பாடிய

மையணி நெடுவரை

  • நப்பசலையார் பாட்டு, புறநானூறு 174

8. புறநானூறு 33