(இலக்குவனாரின்பழந்தமிழ்’ – 15தொடர்ச்சி)

பழந்தமிழ்

5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி

வேற்றுமை

  திராவிட மொழிகளில் எல்லாம் வேற்றுமைகள் எட்டெனவே கொள்ளப்பட்டுள்ளன. வேற்றுமைகளை அறிவிக்கும் உருபுகள் பெயர்க்குப் பின்னால் பெயருடன் சேர்ந்து வருகின்றன. இவ் வுருபுகள் தொடக்கத்தில் பின் இணைத் துணைப் பெயர்ச் சொற்களாக இருந்து நாளடைவில் தனித்தியங்கும் இயல்பு கெட்டு இடைச்சொற்கள் நிலையை அடைந்து விட்டன என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றார். இந் நிலை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் அவை வேற்றுமையுணர்த்தும் உருபுகளாகவே கருதப்பட்டு இடைச்சொற்களாகவே எண்ணப்பட்டுள்ளன.

  வேற்றுமை உருபுகளைக் கொள்ளும் முறையில் திராவிட மொழிகள் அனைத்தும் ஒரே வழியைப் பின்பற்றுகின்றன. ஒருமைக்கும் பன்மைக்கும் கொள்ளப்படும் உருபுகளில் வேறுபாடு இன்று. ஒருமை எண்ணைக் குறிக்குங்கால் வேற்றுமை உருபு பெயருடன் சேர்க்கப்படுகின்றது. பன்மை எண்ணைக் குறிக்குங்கால் பன்மை அறிவிக்கும் விகுதிகளுடன் வேற்றுமை உருபு சேர்க்கப்படுகின்றது.

  எடுத்துக்காட்டு: குதிரையை  குதிரைகளை; இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ ஒருமையில் குதிரை என்பதுடன் இணைந்து நிற்கின்றது; பன்மையில் குதிரைகள் என்பதில் கள் என்னும் பன்மை விகுதியுடன் இணைந்து நிற்கின்றது. ஆனால் ஆரியம் முதலாகிய இந்தோஐரோப்பிய மொழிகளில்  பன்மைப் பெயர்களின் வேற்றுமை உருபு ஒருமைப் பெயர்களின் வேற்றுமை உருபினின்றும் வேறுபடுகின்றது. இவ் வின மொழிகள் எல்லாம் ஒருமைப் பெயர்களின் வேற்றுமைகளை அறிவிக்க ஒருவகையான வேற்றுமை உருபுகளையும் பன்மைப் பெயர்களின் வேற்றுமைகளை அறிவிக்க அவற்றின்றும் வேறுபட்ட வேறு வகையான வேற்றுமை உருபுகளையும் கொண்டுள்ளன. இம்முறையால் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளினின்றும் வேறுபடுகின்றன. திராவிட மொழிகளின் தாயாம் தமிழில் இம்முறை தொன்று தொட்டே நிலவி வருவதனால் அதன் புதல்விகளாம் பிற திராவிட மொழிகளிலும் இம்முறையே  ஒருமைக்கும் பன்மைக்கும் ஒரே உருபினைக் கொள்ளும் முறையே  நிலைபெற்றுள்ளது. வேற்றுமை உருபுகளும் உருபுகள் பெயர்களுடன் சேருங்கால் ஒலித்துணை கருதி சேர்க்கப்படும் சாரியைகளும் தமிழில் உள்ளவாறே ஏனைய திராவிட மொழிகளிலும் உள்ளன. ஆயினும் சிலவற்றில் உருபுகள் ஒலித்திரிபு அடைந்துள்ளன. தமிழில்கூடப் பேச்சு வழக்கில் இவ் வொலித்திரிபைக் காணலாம். அவனைக் கண்டேன் என்பதுதான் திருத்தமுற்ற வழக்கு என்றாலும் அவனெக் கண்டேன் என்று சொல்வாரும் உளர். அவனுக்குக் கொடு என்பதுதான் திருத்தமுற்ற வழக்கு என்றாலும்  அவனுக்கிக் கொடு என்று சொல்வாரும் உளர். இவ்வாறு பேச்சு வழக்கில் திரிந்து வழங்கிய வழக்குச் சில திராவிட மொழிகளில் திருத்தமுற்ற வழக்குகளாய் விட்டன. இவ்வாறு நேர்ந்துள்ள ஒலித்திரிபுகளைத் தவிர்த்துப் பிற வேறுபாடுகளைக் காணல் இயலாது. வேற்றுமை உருபுகளின் ஒற்றுமையைத் திருத்தமுற்றுள்ள மொழிகள் எனப்படும் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆயவற்றுடன் ஒப்பிட்டுக் காண்டலே சாலும்.

முதல் வேற்றுமை:

 தமிழ்                       மலையாளம்        கன்னடம்   தெலுங்கு

யான்             ஞான்                        நான்             நேனு

நான்                                     ஆன்              ஏனு

இரண்டாம் வேற்றுமை:

 என்னை     என்னெ                   நன்னம்                   நன்னு

                                                என்னம்

மூன்றாம் வேற்றுமை:

என்னான்   என்னால்    நன்னி                      நாகேதனு

என்னால்    என்னோடு             என்னிம்      நாதோடன்னு என்னோடு

நான்காம் வேற்றுமை:

 எனக்கு       எனிக்கு                   நனகே                     நாகயி

                        எனகே

ஐந்தாம் வேற்றுமை:

என்னின்     என்னில்      நன்னத்                    நாவலன

                                                தனிம்

 என்னில்                             என்னத்

                                                தனிம்

ஆறாம் வேற்றுமை:

 எனது                       என்னுடெ    நனது                        நாது

 என்னுடைய                                 எனது                        நாகு

ஏழாம் வேற்றுமை:

 என்கண்     என்னில்      என்னொள்            நாயண்டு

 என்னிடம் என்னள்ளி

 என்னிடத்தில்

 யான் அல்லது நான் விளிவேற்றுமை (எட்டாம் வேற்றுமை) ஏலாது. தமிழிலும் அதன் குடும்ப மொழிகளிலும் விளிவேற்றுமைக்கெனத் தனி உருபுகள் இல்லை. அதனாலேயே தனி உருபுகள் பெறாத முதல் வேற்றுமையையும் எட்டாம் வேற்றுமையையும் அல்வழியில் சேர்த்தனர் பிற்கால இலக்கண ஆசிரியர். ஆயினும் விளி வேற்றுமை உண்டாகும் முறையைபற்றித்  தொல்காப்பியர் விளிமரபு என்ற தனியியலில் விரிவாகக் கூறுகின்றார். உயிரில் முடிகின்ற சொற்களும் மெய்யில் முடிகின்ற சொற்களும் என்னென்ன மாறுதல்களைப் பெறுகின்றன என்பதைத் தெளிவுறக் கூறியுள்ளார்.

  மகன், மகனே என ஏகாரத்தைச் சேர்ப்பதனாலும், முருகன், முருகா என ஈற்றயல் குறிலை நெடில் ஆக்குவதாலும், அரசன், அரசே என அகரத்தை ஏகாரமாக ஆக்குவதனாலும் எளிதாக விளிவேற்றுமை உண்டாக்குவதைக் காணலாம்.

 கன்னடத்திலும் தெலுங்கிலும் உயர்திணைப் பன்மைப் பெயர்களின் ஈற்றில் இர  அல்லது இரா என்பதும் அர அல்லது அரா என்பதும் முறையே இணைக்கப்பெறும்.

  இனி வினை விகுதிகளை நோக்குவோம்.

            படர்க்கை ஆண்பால் ஒருமை விகுதிகள்

    தமிழ்        மலையாளம்          கன்னடம் தெலுங்கு

 அன், ஆன்,            அன், ஆன் அம்,அனு,    ணு

 ஒன்                                      ஆனு, ஆனே          ம்டு

கன்னடத்திலும் தெலுங்கிலும் ஒலிநயம் காரணமாகச் சொல்வடிவம் வேறுபட்டிருக்கக் காண்கின்றோம்.

            படர்க்கைப் பெண்பால் ஒருமை விகுதிகள்

   தமிழ்         மலையாளம்          கன்னடம் தெலுங்கு

அள், ஆள்    அள், ஆள்    அள், ஆளு

ஒள்                                        அளு, ஆளே

  தெலுங்கில் மகளிரை அஃறிணையோடு சேர்த்து ஒன்றன்பால் விகுதியைப் பயன்படுத்துகின்றனர். மகளிரை இழிவாகக் கருதிய காலத்தில் தாய்த் தமிழின் தொடர்பை அம் மொழி இழந்திருக்க வேண்டும்.

            படக்கைப் பலர்பால் விகுதிகள்

 அர், ஆர்     அர், ஆர்      அர், அரு      ரு, ரி

                                                ஆரு, ஆரே

 கன்னடம் காலப்போக்கில் உ, ஏ யையும் சேர்த்துக் கொண்டுள்ளது. தெலுங்கு முதலுயிராம் அ அல்லது ஆ வை இழந்து உ அல்லது இ யைச் சேர்த்துக் கொண்டுள்ளது.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்