(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2 தொடர்ச்சி)

1. மொழியின் சிறப்பு  தொடர்ச்சி

ஆங்கிலேயர்களின் முன்னோர்களான ஆங்கில சாக்சானியர்கள் உரூனிக்கு  (Runic)  என்று அழைக்கப்பட்ட ஒரு எழுத்து முறையைக் கொண்டிருந்தனர்.  இவ்வெழுத்துகளுக்கு மந்திர ஆற்றல் உண்டு என்று கருதித் தம் போர்க் கருவிமீதும் பிற கருவிகள் மீதும் இவ்வெழுத்துகளைப் பொறித்து வந்தனர். சிகாந்தினேவியர்களும் (Scandinavians) இவ்வெழுத்து முறையையே கொண்டிருந்தனர். ஆங்கில  சாக்குசானியர்களும்  சிகாந்தினேவியர்களும் கிருத்துவ சமயத்தைத்  தழுவிய  ஞான்று  உரூனிக்கு முறையைக்   கைவிட்டு  உரோமானிய  முறையைக்  கொண்டனர்.

  தமிழர்கள் எழுத்துமுறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியம்   தமிழ் எழுத்துமுறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது.  இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. எழுத்து என்னும் சொல் ஒலிவடிவத்தை (Sound)யும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சுமொழி தோன்றியவுடனே எழுத்துமுறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலிவடிவ எழுத்தையே சுட்டுகின்றது; கருத்தினையோ (Idea), பொருளையோ (object) சுட்டுவதின்று.

  உலகில் எழுத்துமுறையை முதன் முதல் அமைத்துக்கொண்டவர் தமிழரே என்றும்,  தமிழரிடமிருந்து சுமேரியர் கற்றுப் பிற இனத்தவர்க்கு அறிவித்தனர் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். தமிழர்கள் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே செப்பமுள்ள எழுத்து முறையைக் கொண்டிருந்தனர் ஆதலின், எழுத்து முறை தமிழர்களிடமிருந்தே பிற மொழியாளர்க்குச் சென்றுளது என்னும் கூற்றுப் பொருத்தமும் உண்மையும் உடையதாகவே தோன்றுகின்றது.

  இன்று இருவித எழுத்துமுறைகள் உள. ஒன்று ஒலியைக் குறிப்பிடும் முறையாகும்; மற்றொன்று கருத்தினை அறிவிக்கும் முறையாகும்.

  கருத்தை விளக்கும் ஓவிய எழுத்துமுறையைச் சீனர்களும் சப்பானியர்களும் இன்றும் கொண்டுள்ளனர். இவர்கள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் ஆவர். நான்கில் மூன்று பகுதியினராம் ஏனைய மக்கள் ஒலியைக் குறிக்கும் எழுத்துமுறையையே மேற்கொண்டுள்ளனர். ஒலியெழுத்து முறையினர் ஓவிய (கருத்து) எழுத்துமுறையை அறவே விட்டுவிட்டனர் என்று கூறுதல் முடியாது. மருத்துவம், கணிதம், சோதிடம், வானவியல் போன்ற துறைகளில் கருத்து எழுத்துமுறை பயன்படுத்தப்படுகின்றது. முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால் புள்ளி, வியப்புக்குறி போன்றனவெல்லாம் கருத்து எழுத்து முறையேயாகும்.

  ஒலி எழுத்துமுறைகளில் தமிழ் எழுத்துமுறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரிவடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரிவடிவங்கள் இருபத்தாறு என்றாலும் ஒரே வரிவடிவம் வெவ்வேறு ஒலிகளைத்  தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துக்கள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துகளினாலும் ஒலிப்பு  முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்துமுறையை யுடையது தமிழேயாகும்.

  மொழிகளில் எழுத்துமுறை தோன்றிய பின்னர் நூல் வழக்கு உலக வழக்கு என இருவகை வழக்குகள் தோன்றிவிட்டன. தமிழில் செய்யுளாறு என்றும் வழக்காறு என்றும் தொல்காப்பியரால் அழைக்கப்பட்டுள்ளன. இருவகை வழக்குகளும் எல்லா மொழிகளிலும் உண்டு. உலக வழக்கு என்பது சிதைந்த வழக்கு அன்று. அஃதும் இலக்கண நெறியை ஒட்டித்தான் செல்லுதல் வேண்டும். உலக வழக்கு, நூல் வழக்கால் செப்பம் அடைதல் வேண்டும். நூல் வழக்கு, உலக வழக்கால் உயிர்த் துடிப்பும் ஓட்டமும் பெறுதல் வேண்டும்.

  எழுத்துமுறை பெறாத மொழிகள் ஆண்டுகள் தோறும்  மாறிக்கொண்டே சென்று பின்னர் மாய்ந்துவிடும். நூல்வழக்கை ஒட்டிச் செல்லாது,  உலக வழக்கைப் போற்றிவரும்  மொழிகள்  நூற்றாண்டு தோறும் விரைந்த மாற்றத்தைப் பெற்று வாழும் இயல்பினவாகிவிடும். ஆங்கில மொழி நூற்றாண்டுதோறும் வேறுபாடடைந்துள்ளமை இதனாலேயே. தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் ஆங்கிலம்போல் மாற்றத்திற்கு ஆளாகாமல் இருப்பது, உலக வழக்கு நூல்வழக்கைத் தழுவியே செல்லுதல் வேண்டுமென்ற மரபினை அது  பெற்றிருப்பதனால் தான்.

  ஒரு மொழி வழங்கும் நாட்டில்  இன்னொரு மொழியாளர் குடியேறுவதனாலும், ஆட்சி செலுத்துவதனாலும் மொழி மாற்றம் நிகழ்வதுண்டு. வேற்றுமொழிக் கலப்பால் ஒரு மொழி சிதைந்து பல்வேறு  மொழிகளாக உருப்பெறுதலும் இயல்பே.

  மொழி என்பது மக்கள் முயன்று கற்கும் ஒன்றேயன்றிக் கருவிலேயே அமைந்து வருவதன்று. தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தையை ஆங்கிலேயரிடையே வளரவிட்டால்.  அக்குழந்தை ஆங்கிலேயரைப் போல ஆங்கில மொழியைப் பேசுமேயன்றித் தமிழ் மொழியைப் பேச அறியாது; பின்னர்த் தமிழ்மொழியைக் கற்றாலும் தமிழரைப்போல் பேசும் ஆற்றலைப் பெறாது. ஆதலின் இனத்துடன் (Race) மொழியை இணைத்தல் கூடாது என்பர். மக்கள், சூழ்நிலைக்கேற்ப மொழியைக் கற்று வாழத் தலைப்படுவதால் பயன்தரு மொழியே மக்களால் விரும்பிக் கற்கப்படும். மக்களால் விரும்பிக் கற்கப்பட்டுப் பயிலப்படாத மொழி விரைவில் மறைந்து ஒழியும். ஒரு நாட்டில் வழங்கும் மொழி, அந்நாட்டு அரசு மொழியாகவும், கல்வி பயிற்றும் கருவி மொழியாகவும்,  கலை பல நிறைந்துள்ள உயர் மொழியாகவும், மக்களுக்கு வேண்டியன யாவும் அளிக்கவல்ல அறிவு மொழியாகவும் இருந்தால் அன்றி அம்மொழி, காலத்தை வென்று நிலைத்து நிற்க இயலாது. நாட்டு மக்கள் அனைவரும் கற்றவர்களாய் வழுவின்றி எழுதவும் உரையாடவும் வல்லவர்களாக இருத்தல் வேண்டும். புதியன புனையும்  அறிவியற் பேரறிஞர்களும், இலக்கியம் படைக்கும் நுண்மாண் நுழை புலப் புலவர்களும், அருட்பா அளிக்கும் அருட் புலவர்களும், அரசியல் அறிஞர்களும், மெய்யுணர்வாளர்களும் நாட்டில் ஆண்டு தோறும் தோன்றிக்கொண்டே இருக்க வேண்டும். அந்நாட்டில்தான் மொழியும் வளம்பெற்று எவ்வகைக் கருத்தையும் இனிதே எளிதே விளக்கும் ஆற்றல் பெற்று எவரும் போற்றிக் கற்குமாறு சிறந்து விளங்கும்.

  மொழியானது ஒலியியல், சொல்லியல், தொடரியல் என முத்திறப்படும். கருத்தை அறிவிக்குங்கால்  சில சொற்கள் சேர்ந்த தொடர் உருவாகின்றது. ஒன்றைப்பற்றி எண்ணுங்காலும் தொடர் தொடராகவே சொற்கள் அமைகின்றன.

  தொடர், சொற்களால் ஆகின்றது. சொல், ஒலிகளால் அமைகின்றது. தொடர்அமைப்பு, சொல்அமைப்பு ஆயவற்றைக் கொண்டே மொழிகளைக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.

  அவை தனிநிலை மொழிகள் என்றும், ஒட்டுநிலை மொழிகள் என்றும், ஒட்டறியா நிலை மொழிகள் அல்லது திரிபுநிலை மொழிகள் என்றும் பெயர் பெறும். ஒரே மொழியிலேயே இம் மூன்று நிலைகளும்  தோன்றும் என்று கூறுவாறுமுளர்.

  மக்களின் அடிப்படையில் மொழிகளைக் குடும்பங்களாகப் பிரித்தலும் உண்டு. அவ்வாறு பிரிக்கப்படும் மொழிகளிடையே, தொடர் அமைப்பிலும், சொல்லமைப்பிலும், வேற்றுமையுருபுகள் ஏற்கும் வகையிலும், காலம் தெரிவிக்கும் முறையிலும் வேற்றுமையும் காணப்படும்; ஒற்றுமையும் காணப்படும். ஒற்றுமை இயல்புகள் பல மொழிகளை ஒரு குடும்பத்திற்கு உரியனவாக்கும்.

  ஒரு மொழியே பலவகைக் காரணங்களால் பலமொழிகளாகக் கிளைத்து ஒரு குடும்ப நிலையை அடைதலும் உண்டு. தமிழே தக்க எடுத்துக்காட்டாகும்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்