(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’

 5. பழந்தமிழ்ப் புதல்விகள்

பல்லுயிரும் பலவுலகும் படைத் தளித்துத் துடைக்கினுமோர்

  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும்

  உன் உதரத்து  உதித்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாவுன்

  சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

எனும் தமிழ்த்தாய் வாழ்த்தில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்மொழி பல மொழிகட்குத் தாயாயுள்ள செய்தியை இனிமையுற எடுத்து மொழிந்துள்ளார்கள்.

  இன்று திராவிட மொழிகள் என்பனவெல்லாம் பழந்தமிழிலிருந்தே தோன்றியனவாம். இத் திராவிட மொழிகள் பழந்தமிழின் புதல்விகளே. தாய் என்றும் மகள் என்றும் உறவு கற்பித்து உருவகப்படுத்திக் கூறுவதைச் சிலர்  விரும்பிலர். ஏனைய திராவிட மொழியாளரில் சிலர் தத்தம் மொழியே தாயெனத் தகும் என்றும் சாற்றுவர். ஆதலின் தாய் மகள் எனக் கற்பித்துக் கூறும் உறவு முறையைக் கருதாது உண்மை நிலையை ஆராயின் பழந்தமிழே பல மொழிகளாக உருவெடுத்துள்ளது என்று தெளியலாம். ஒன்று பலவாகியுள்ள உண்மை நிலையை மறைத்தல் இயலாது.

 பழந்தமிழ்க் கூறுகள் திராவிட மொழிகள் அனைத்தினும் காணப்படுகின்றன. பழந்தமிழின் பண்டைய நிலையை அறிவதற்குத் திராவிட மொழிகள் அனைத்தும் துணைபுரியும். அங்ஙனமாயின் தமிழை மட்டும் தாயெனல் எவ்வாறு பொருந்தும் என்று சிலர் கருதலாம். திராவிட மொழிகள் அனைத்தினும் தமிழே இம்மொழிகளின் பண்டைய நிலையை அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றது.

   திராவிட இனத்தைச் சேர்ந்த மொழிகளில் அவற்றின் தொன்மை நிலையைத் தெளிவுற உணர்த்தும் மொழி எது? எனும் வினாவிற்கு அறிஞர் காலுடுவல் அவர்கள் கூறுவதாவது:

  ““செந்தமிழ் என்று பெயரிட்டு அழைக்கப்பெறும் தமிழ்மொழியின்  இலக்கியத்தமிழ், திராவிடப் பழங்குடியினர் வழங்கிய தொன்மொழியின் நிலையினைத் தெளிவுற உணர்த்துகிறது என்று சிலர் கருதுகின்றனர். செந்தமிழின் பெருமதிப்பைக் குறைத்துக் கூறாமலே திராவிட மொழியின் தொன்மை நிலையைத் தெளிவுறக் காட்டும் கண்ணாடியாம் தனித்தகுதி எம்மொழிக்கும் இல்லை என்றே நான் கருதுகின்றேன். இன்று வழக்கிலிருக்கும் அனைத்து மொழிகளின் ஒப்பீட்டு ஆராய்ச்சியே அம் மொழிகள் தோன்றத் துணைபுரிந்த திராவிடத் தொன்மொழி வழக்கின் நிலையை உணர்த்தவல்ல நனிமிகச் சிறந்த வழித்துணையாகும். செந்தமிழே அல்லாமல் திருந்தா மொழிகள் உட்பட இன்று ஆட்சியிலிருக்கும் அவ்வின ஒவ்வொரு மொழியும் இம்முயற்சியில் தத்தம் துணையினை அளிப்பது முக்காலும் உண்மை. பழங்கன்னட மொழியின் துணையில்லாமல் தமிழ்மொழியின் தன்மை முன்னிலை இடப்பெயர்களின் இயல்பினை உணர்ந்து கொள்வது இயலாது. தன் மொழியின் இலக்கண விதிமுறைகளை ஒருசில ஆண்டிற்கு முன்னரே எழுத்துருவில் வகுத்துக்கொண்ட குறையுடையதும் திருந்தா மொழிகளுள் ஒன்றும் ஆகிய கூ மொழியே திராவிட மொழியின் படர்க்கை இடப்பெயரின் ஆண்பால் பெண்பால் பற்றிய விளக்கத்தை அறியத் துணைபுரிகிறது. என்றாலும், திராவிட மொழியின் தொன்மை நிலையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். திராவிட மொழிகள் அனைத்தினும்,நிலைபெற்று விட்டதன் விளைவாகும் இது. அறிஞர் கால்டுவல் அவர்களின் இக்கூற்றாலும் தமிழே திராவிட மொழிகளின் தாய் என்பது வலியுறுத்தப் படுகின்றதன்றோ? அன்றியும் அவரின் ஒப்புயர்வற்ற ஆராய்ச்சி நூலாம். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பதனால் நிலைநாட்டப்படுவது, திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு குடும்ப மொழிகளே என்பதாகும்.*

  திராவிடக் குடும்ப மொழிகள் திருத்த முற்றன ஆறு, திருத்தமுறாதன ஆறு எனப் பகுத்துள்ளனர். திருத்த முற்றன ஆறு: 1. தமிழ், 2. மலையாளம், 3. தெலுங்கு,4. கன்னடம், 5. துளு, 6. குடகு. திருத்தமுறாதன ஆறு: 1. துதம், 2. கோதம், 3. கோண்டு, 4. கூ, 5. ஒரியன்,6. இராச்மகால். அறிஞர் கால்டுவல் இவை பன்னிரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு குழுவைச் சார்ந்தனவே எனத் திட்டவட்டமாக நிறுவியுள்ளனர். இப் பன்னிரண்டு மொழிகளிலும் தொன்மை யுடையது, வளமுடையது, செம்மையுடையது தமிழ் என்றே ஆங்காங்குக் குறிப்பிட்டாலும் பழந்தமிழ்தான் இவை யனைத்துக்கும் தாயாகும் உரிமையும் சிறப்பும் உடையது என்பதை வெளிப்படையாகக் கூறினாரிலர். அவர் அவ்வாறு கூறாது போயினும் அவருடைய ஆராய்ச்சி ஏனைய திராவிட மொழிகள் தமிழின் புதல்விகளே என்பதை ஐயமற நிலை நாட்டுகின்றது.  அவர் மேற்கொண்டுள்ள ஒப்பீட்டு ஆராய்ச்சி, மொழிகட்குரிய ஒலிகள், வேர்ச்சொற்கள், திணை, பால், எண், இடம், வேற்றுமை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவைபற்றிய ஆராய்ச்சிகளைக் கூர்ந்து கற்போர், தமிழே காலப்போக்கில் பல மெழிகளாகத் திரிந்துள்ளது என்று அறிவார் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.

  எம்மொழியினும் விரைவில் மாற்றங்கொள்ளாதன இடப்பெயர்கள், வேற்றுமையுருபுகள், வினைவிகுதிகள், எண்கள் முதலியனவாம். இவை அமைந்துள்ள இயல்பினை நோக்கினால்

 தமிழே திராவிட மொழிகளின் தாய் என்பதைத் தெள்ளிதில் அறியலாகும். முதலில் இடப் பெயர்களை நோக்குவோம்.

 தன்மை

             ஒருமை                   பன்மை

தமிழ்: யான், நான்                  யாம், நாம், யாங்கள், நாங்கள்

மலையாளம்:  ஞான்                நாம், நோம், நம்மள், நும்மள்                                                                        ஞங்கள்

தெலுங்கு:  ஏனு,நேனு, நே        ஏமு, மனமு, மேமு

கன்னடம்:  யான்,ஆன்,              ஆம், ஆவு, நாவு

                 நானு, நா          

துளு:  யான்                                    யென்குளு, நம

கோண்ட்: அன்னா                      அம்மாட்

கூர்க்கு:   நன்                           நன்க, என்க

கூ: ஆனு                                ஆமு, ஆஜூ

துதம்:  ஆன்                                    ஆம், ஒம்,ஏம்

கோதம்:  ஆனெ                ஆமெ, நாமே, ஏமே

இராச்மகால் : என்                       நம், எம், ஓம்.

ஒரியன்:  என்                                 எம், நாம்.

 முன்னிலை

            ஒருமை                               பன்மை

தமிழ்:  நீ                               நீர், நீயிர், நீவிர், நீங்கள்

மலையாளம்:  நீ               நிங்கள், நீங்கள்

தெலுங்கு:  நீவு, நீ, ஈவு                மீரு, ஈரு

கன்னடம்:  நீன், நீ, நீனு             நீம், நீவு

துளு: ஈ                                  நீடுளு,ஈர்

கூர்க்கு:  நின்                         நின்க

கோண்ட்டு:  இம்மா             இம்மாத்

கூ: ஈனு                                 ஈரு

துதம்:  நீ                               நீம

கோதம்:  நீ                          நீமெ, நீவெ

இராச்மகால்:  நின, நின்         நிம, நின

ஒரியன்:  நின, நீயென்              நிம், ஆசு

பிராகி:  நீ                             நும்

  தன்மை இடப்பெயர்களும், முன்னிலை இடப்பெயர்களும் தமிழில் உள்ளவாறே ஏனைய மொழிகளிலும் அமைந்துள்ளன. தமிழின் தொடர்பைப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னமே இழந்த மொழிகளுள் ஒலிச்சிதைவால் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேற்றுமை உருபு ஏற்கும் நிலைக்குரிய வடிவங்களையே எழுவாய் நிலையும் பெற்றுள்ளன. மெய் எழுத்தை இழந்து உயிரளவில் நிற்கின்றன. ஆயினும் தமிழின் புதல்விகள்தாம் ஏனைய திராவிட மொழிகள் என்னும் உண்மையை அவை பறைசாற்றாமல் இல்லை.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்