இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 20
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி
தமிழிலிருந்து தோன்றியது மலையாளம் என்ற உண்மை கிழக்குத் திசையை உணர்த்த அது (மலையாளம்) ஆளும் சொல்லினாலேயே (படி ஞாயிறு) விளக்கப்பெறும். 1
தமிழிலிருந்து பிறந்த மலையாளம் வேறுபட்டதற்குரிய காரணங்கள் : 2
1. சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியுடன் மிகுதியான தொடர்பு கொள்ளாதிருந்தமை.
2. 12ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை.
3. வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ உயர்வு கற்பிக்கப்பட்டமையால் வரம்பிறந்து வட சொற்களைக் கலந்து கொண்டமை.
4. மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை.
5. மலையாளியர் தம் முன்னோரின் தமிழ்நூல்களைக் கல்லாமை.
6. மலையாளியர் தம் சோம்பலால் சிதைந்த வழக்கு களைச் செப்பமுடைய வழக்குகளாகக் கொண்டமை.
கன்னடம் : மலையாளத்தை அடுத்துத் தமிழோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பது கன்னடம். கன்னடம் என்ற சொல் கருநாடகம் என்ற சொல்லின் சிதைவாகும். கருநாடகம் என்பது நாட்டைக் குறிக்கும் சொல்லாகும். அதிலிருந்து தோன்றிய கன்னடம் மொழியைக் குறிப்பதாகும்
++
1 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பக்கங்கள் 27, 28.
2 திராவிடத் தாய் பக்கம் 40
++
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கருதப்படும் குமாரிலபட்டர் தென்னிந்திய மொழிகளைக் குறிக்குங்கால் ஆந்திர திராவிட பாஷா என்று குறிப்பிட்டுள்ளார். ஆந்திரம் தெலுங்கையும் திராவிடம் தமிழையும் குறிப்பதாகும். ஆதலின் கன்னடம் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் தனிமொழியாக உருப்பெறவில்லை.
பம்பாய் மாகாணமும் ஐதராபாத்துச் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு, கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னால் வடசொற் கலப்பு மிகுதியாலும் ஒலி வேற்றுமைச் சிதைவாலும் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்துவிட்டது.
கன்னடம் திரிந்துள்ள முறைகள்:
1. ப ஹ வாக மாறியுள்ளது.
பள்ளி ஹள்ளி; பாடு ஹாடு.
2. உயிரீற்றுப் பேறு.
எதிர் எதிரு; இருந்தேன் இருந்தேனெ.
3. தொகுத்தல் திரிபு.
இருவர் இப்பரு; இருந்தேன் இத்தேன.
4. வல்லொற்று மிகாமை.
ஓலைக்காரன் ஓலகார; நினக்கு நினகெ.
5. சொற்றிரிபு.
மற்றொன்று மத்தொந்து
முதலாயின மொதலானய.
6. போலி.
வேடர் பேடரு ; செலவு கெலவு.
7. எதிர்மறை இடைநிலைக் குறுக்கம்
இராதே இரதெ.
8. பெயரீற்றுப் பால் விகுதிக் கேடு.
குருடன் குருட; மகன் மக;
அப்பன் அப்ப.
9. வேற்றுமை உருபின் திரிபு.
நின்னால் நின்னிந்த
நின்கண் நிந்நொள் நிந்நல்லி
10.விகுதி மாற்றம்
அன் அம் ஆதல்;
செய்கிறேன் செய்தபெம்.
கன்னடச் சொற்கள் கிரேக்க மொழியார் நூல்களில் காணப்படுகின்றனவென்றும், அந் நூல்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறிக் கன்னடத்தின் பழமையை நிலைநாட்டுவாருமுளர்.3
கன்னட மொழியின் பழமையான நூல் கவிராசமார்க்கம் என்ற இலக்கண நூல்தான். அதன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். அஃது ஓர் அணியிலக்கண நூலாக இருத்தலினால் அதற்கு முன்பு பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும் என்பாரும் உளர். கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர்க் கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் இலக்கியம் தோன்றவில்லை என்று ஆராய்ச்சியாளர் வரையறுத்துள்ளனர்.4
தெலுங்கு: இதனைத் தமிழின் முதல் மகள் என்று கூடக் கூறலாம். தென்னகத் திராவிட மொழிகளுள் முதன் முதலாகத் தமிழ்த் தாயினின்றும் தொடர்பு நீங்கி வாழத் தொடங்கியது தெலுங்குதான். தொல்காப்பியர் காலமாம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே தமிழ் என்று அழைக்கப்படுதலை இம் மொழி இழந்துவிட்டது. வடவேங்கடத்துக்கு அப்பால் வழங்கிய இதனைத் தமிழர் வடுகு என்று அழைத்தனர். ஆரியர் ஆந்திரம் என்று அழைத்தனர். தெலுங்கு என்பது தெலுங்கு மொழிக்குரியோரே சூட்டிக்கொண்டது என்பர். தெலுங்கு என்னும் சொல் திரிகலிங்கம் என்பதனின்றும் பிறந்தது என்பர். திரிகலிங்கம், திரிலிங்கம், தெலுங்கம், தெலுங்கு என வந்தது என்பர். நாட்டின் பெயரால் வழங்கிய இப் பெயர் பின்னர்
++
3. Literature in Indian Languages, Page. 82
4..Comparative Grammar of the Tamil Language, Page 1.
++
மொழியின் பெயராயிற்று. தெலுங்கு என்னும் பெயர் தெலுங்கதைலிங்கதெலுகு தெனுங்குதெனுகு என்னும் சொற்களாகவும் வழங்கி வருகின்றது. தேன் போன்று இனிமைதரும் மொழியாதலின் தெனுகு எனப்பட்டது என்பர்.
ஆரிய மொழிக் கலப்பு அற்றிருந்த தமிழ், கொடுந்தமிழாகிப் பின்னர் ஆரிய மொழிக் கலப்பால் வேற்று மொழியாகிவிட்டது. தெலுங்கு நாட்டின் ஊர்ப்பெயர்களில் பல இன்றும் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன. தமிழ்ச் சொற்களெல்லாம் தெலுங்கில் உருமாறி வழங்குகின்றன. தமிழுக்கும் தெலுங்குக்கும் தொடர்பு கிடையாது என்று எண்ணும் அளவிற்கு உருமாறியுள்ளன. நுணுகி ஆராயும் மொழி நூற் புலவர்க்கே சொற்களின் உண்மை வடிவங்கள் தமிழுக்குரியன என்று புலப்படும்.
தமிழ்ச் சொற்கள் தெலுங்கில் திரிந்துள்ள முறைமையைப் பின்வரும் காட்டுகளால் அறியலாம்:
1. இ, எ யாகும்.
கோணி > கோனெ; விலை >வெல
திரை > தெர.
2. உ, அ வாகும்.
ஊற்று > ஊட்ட; பாட்டு > பாட்ட;
தட்டு > தட்ட; போக்கு> போக்க
3. உ, ஒ வாகும்.
புகை > பொக; உடல் >ஒடலு;
முனை > மொன;உரை > ஒர
4. ஐ, அ வாகும்
பொம்மை > பொம்ம; உவமை > உவம;
குப்பை > குப்ப
5. ஐ, எ யாகும்
கட்டை > கட்டெ; திண்ணை> தின்னெ
6. ண, ன வாகும்
அண்ணன் > அன்ன; வெண்ணெய் > வென்ன;
எண்ணிக்க > என்னுக்க
7. ந, ம வாகும்
நீர் > மீரு; நாம் >மேமு
8. ய, ச வாகும்
உயிர் >உசுரு; பயறு>பெசறு
9. ழ, ட வாகும்
நிழல் > நீட; பாழ் > பாடு; கோழி > கோடி;
மேழி > மேடி.
10. ற, ர வாகும்
மீறு > மீரு; வேறு > வேரு.
11. ற்ற, ட்ட வாகும்
ஊற்று > ஊட்ட; புற்று > புட்ட;
மாற்றம் > மாட்ட; சுற்று > சுட்ட
பற்று>பட்டு.5
இவ்வாறு உருமாற்றம் அடைந்த சொற்கள் இருப்பினும், உருமாற்றம் அடையாதனவும் இன்னும் வழக்கில் உள்ளன; ஒலித்துணை காரணமாக உகரம் சேர்ந்தன எளிதில் தமிழ் என்று அறியக் கூடியன.
உருமாற்றம் இல்லாதன: செப்பு, ஈ, கொட்டு, உண்டு, குக்கல், மஞ்சு, கணக்கு, அச்சு, தொட்டி, பொட்டு,வெறி, கூலி, கொண்டி, முடி முதலியன.
உகரம் சேர்ந்தன : தெய்வமு, கோணமு,ஏலமு,பக்கமு, பாகமு, சுங்கமு, மேளமு, மாதமு, சமமு, களங்கமு, கலகமு, கடினமு, குடும்பமு, நாடகமு முதலியன.
தமிழ்ச் சொற்களின் இறுதி மெய்யுடன் உகரம் சேர்த்து ஒலித்தால் தெலுங்காய்விடும்.
தெலுங்கு மொழியில் அனைத்துச் சொற்களும் உயிரிறுதியே கொண்டுள்ளன என்பது அறியத் தக்கது.
++
5.எடுத்துக்காட்டுகள் “திராவிடத்தாய் என்னும் நூலின் துணை கொண்டு எழுதப்பட்டன.
++
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply