(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 33 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’  34

8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்- தொடர்ச்சி

  இச் சொல் பயின்றுள்ள குறுந்தொகைப் பாட்டு, கொல்லன் அழிசி என்பவரால் பாடப்பட்டதாகும். இவர் ரியர் வருகைக்கு முற்பட்டுள்ள காலத்தைச் சேர்ந்தவராவார். இவர் பாடல்கள் நான்கு. நான்கும் குறுந்தொகை யினுள் உள்ளன. தோகை பயின்றுள்ள பாடலாவது:-

        அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை

        மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை

        பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்

        தகாஅன் போலத் தான்தீது மொழியினும்

        தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே

        தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்

        வரையாடு வன்பறழ்த் தந்தைக்

        கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.’’

         (குறுந்தொகை – 26)

  இப் பாடலில் கிளைமீதிருந்த மயில் பூக்கொய்யும் பெண்ணைப்போல் தோன்றுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. பெண்ணிற்கு உவமையாக மயிலைக் கூறுவதுண்டு. இங்கு மயிலுக்கு உவமையாகப் பெண் கூறப்பட்டுள்ளது ஒரு சிறப்பு.1

 ஆரியர் வருகைக்கு முன்னர் வாழ்ந்த புலவரால் இயற்றப்பட்ட இப் பாடலுள் தோகை என்னும் சொல் மயில் என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளது, அறிஞர் கால்டுவல் அவர்களின் கூற்றை அரண் செய்வதாகும். தமிழின் தொன்மையை ஐயத்திற்கிடமின்றி நிலைநாட்டுவதாகும்.

  பின்னர் தோகை என்னும் சொல் மயிலுக்கே உரிய பெயராகி இறகுகளைக் குறிப்பதற்குப் பீலி என்னும்  சொல் வழக்காற்றில் வந்துவிட்டது. பாகலார் கைப் பறைக் கண் பீலித் தோகை $ என்று  மாமூலனார் கூறியுள்ளமை காண்க. திருவள்ளுவர், பீலி பெய் சாகாடும் அச்சிறும்#  என்று மயிலிறகைக் குறிக்கப் பீலி என்னும் சொல்லைப்பயன் படுத்தியுள்ளமையும் காண்க.

 இன்னும் தமிழ்ச்சொற்களாகிய கவி, இபம், அகில், அரிசி, கருவப்பட்டை, பாண்டியன், கேரலர் (சேரலர்), சோழர், தமிழ், தொண்டி, கடத்தநாடு, சங்காடம் (மலையாளச் சொல் – படகு என்னும் பொருளினது), கோட்டாறு, குமரி, பெருங்கரை, பொதிகை, கொற்கை, கோடி, கள்ளிமேடு, மலை, ஊர்  முதலிய சொற்கள் கிரேக்கம் முதலிய மேலை நாட்டு மொழிகளுள் இடம்பெற்றுள்ளமையை அறிஞர் கால்டுவல் அவர்கள் ஆராய்ந்து எடுத்துக் காட்டியுள்ளார். வையாபுரி(ப்பிள்ளையவர்கள்) அரிசி, அகில் முதலிய சொல் பற்றிய அறிஞர் கால்டுவல் ஆராய்ச்சியை, ஆராய்ச்சி முறைக்கு ஒவ்வாத முறையில் மறுத்துரைக்கின்றார். அரிசி எனும் தூய தமிழ்ச்சொல் விரீகி எனும் ஆரிய மொழியிலிருந்து தோன்றியதென^ அவர் கூறுவதிலிருந்து அவருடைய ஆராய்ச்சியின் போக்கு எத்தகையது எனத் தெள்ளிதில் புலப்படும். அவர் ஆராய்ச்சியைப் புறத்தே தள்ளுதலே ஆராய்ச்சியாளர் கடனாகும். கபி என்னும் சொல் கவி என்னும் சொல்லின் திரிபாகும். கவி என்பது குரங்கைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லேயாகும். மனிதனைப் போன்று வடிவம் பெற்றுள்ள குரங்கு கவிழ்ந்து நடக்கின்ற காரணத்தால் கவி என்று தமிழர் அமைத்துள்ளனர். கவிதல் என்னும் சொல்லினது முதனிலைத் தொழிற்பெயரே கவி என்பதாகும்.

++

1  பொருளே உவமம் செய்தனர் மொழியினும்

   மருளது சிறப்பின் அஃது உவமமாகும்  (தெல், உவமம். 9)

$ அகநானூறு 15 # திருக்குறள் 475

^ History of Tamil Language of History and Literature : Page 10

++

  இபம் என்னும் யானையைக் குறிப்பிடும் சொல்லும் தமிழே! ஏனைய தழிழ்ச்சொற்களே என்பது வெளிப்படை.

 வெளிநாட்டு மொழிகளில் பயின்றுள்ள தமிழ்ச்சொற்களால் தமிழின் தொன்மை அறிஞர் காலுடுவல் அவர்களால் நிலைநாட்டப்பட்டது. அதனைப் பொறாத வையாபுரி(ப்பிள்ளை) அவர்கள் மறுப்பதொன்றே குறிக்கோளாகக் கொண்டு தக்க சான்றுகளின்றி மறுத்தனர். அம் மறுப்போடு அமையாது தொன்மை நூலெனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் பயின்றுள்ள சொற்களையும், சொற்றொடர்களையும் வடமொழி மூலங்களிலிருந்து தோன்றின என்று நிலைநாட்டப் புகுந்து தம் மொழிநூற் புலமையை வெளிப்படுத்த முயன்றுள்ளார்.

 தொல்காப்பியத்தில் பிற்காலத்தோரால் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் ஆங்காங்குள்ளன. தொல்காப்பியத்தைக் கற்போர் அவ் விடைச்செருகல்களை எளிதில் அறிந்துகொள்வர். அவ் விடைச்செருகல்கள் வடமொழித் தொடர்புடையோரால் சேர்க்கப்பட்டன. ஆதலின் வடமொழிச் சார்புடையனவாக இருத்தலில் வியப்பில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் பயின்றுள்ள தூய தமிழ்ச் சொற்களை வடமொழிச் சொற்களின் மொழிபெயர்ப்பு என்று அவர் கூறுவதுதான் நகைப்புக்கிடமாய் உள்ளது. தாமரை, வேற்றுமை, அவையல்கிளவி, நூல் முதலியன வடமொழிச் சொற்களின் மொழிபெயர்ப்பு என அவர் கூறியுள்ளமையை என்னென்பது! தாமரைக்குத் தமிழ் நாட்டில் எல்லோரும் அறிந்த வேறுபெயர் யாது உளது? ஒன்றுமில்லையே. தாமரை தமிழ்நாட்டில் என்றும் உள்ளதுதானே? வடமொழித் தொடர் ஏற்படுவதற்கு முன்னர்த் தாமரையை என்ன பெயர் கூறித் தமிழர் அழைத்தனர்? கமலம் என்பதாவது எம்மொழிக்குரிய சொல் என்பதில் கருத்து வேறுபாடுகொள்ள இடம் உண்டு. தனித்தமிழ்த் தாமரைச் சொல்லை வடமொழியின் மொழி பெயர்ப்பு என்பார் அறிவை என்னென்றழைப்பது?

  அவை என்பதும் தூய தமிழ்ச்சொல். அதன் வடமொழி வடிவமே சபா என்பது.

  வேற்றுமை என்னும் சொல் தொல்காப்பியர்  காலத்துக்கு முன்பே வழக்கிலிருந்த சொல்லாகும்.

  “வேற்றுமை தானே ஏழென மொழிப” என்று தொல்காப்பியர் கூறுவதனால் வேற்றுமை என்று பெயரிட்டது அவர் அல்லர் என்று நன்கு தெளியலாகும். நூல் என்பது வேறு; சூத்திரம் என்பது வேறு. நூற்பா என்பதுதான் சூத்திரத்திற்கு நேர் பொருளாகும். நூல் என்றும் நூலின் பாக்களை நூற்பா என்றும் தமிழர் அழைத்தனர். வடமொழியாளர் நூற்பாவையும் சூத்திரம் என்று கூறிக் கொண்டாலும் சூத்திரம் என்னும் வடசொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. ஆனால் நூற்பா என்னும் சொல்லுக்கு வேறு பொருளே கிடையாது. சூத்திரம் என்னும் சொல்லுக்கு நூல்-திரிக்கப்பட்ட நூல்-என்னும் பொருள் இருக்கலாம். ஆனால் புத்தகம் என்ற பொருளில் வழங்கும் நூல் என்னும் பொருள் பொருந்தாது; கிடையாது என்பதை வையாபுரியார் அறியார் போலும்.

 ஆதலின், தொல்காப்பியப் பிறப்பியலின் முதல் நூற்பா பாணினியிலிருந்தும், மெய்ப்பாட்டியலின் மூன்றாம் நூற்பா பரதநாட்டிய சாத்திரத்திலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டன என்று கூறும் அவர் கூற்று எட்டுணையும் உண்மையன்று; இருமொழி நூல்களையும் தெளிவாகக் கற்றிலர் போலும் என்பது நன்கு புலப்படுகின்றது.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்