இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி)
பழந்தமிழ்’ – 39
பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி
வினைச்சொல் தன்மையை அடையுங்கால் காலம் காட்டும் உருபைப் பெறவேண்டியுள்ளன. பகுதியுடன் கால எழுத்தும் சேருங்கால் அவை இரண்டையும் பொருந்தச் செய்ய வேறொரு எழுத்தும் வேண்டப்படுகின்றது. நினை இறந்த காலத்தை அறிவிக்குங்கால் நினைந்து என்று உருப்பெறுகின்றது. த் இறந்த காலம் காட்டுவது. அதனைப் பகுதியுடன் இணைக்க ந் வேண்டியுள்ளது. ஆனால் எதிர்கால எழுத்தை இணைக்குங்கால் அதுவே இரட்டித்து விடுகின்றது. நினை+ப்+ப=நினைப்ப. முற்றுச் சொல்லாகுங்கால் அச்சொல் திணை, பால், எண்,இடம் ஆகியவற்றை அறிவிக்கும் கடப்பாட்டைப் பெற்றுவிடுகின்றது.
மேலைநாட்டு மொழிகளில் பலவற்றுள் திணை, பால், எண் இடங்களை வினைச்சொல் அறிவிப்பதில்லை. அறிவிக்கும் இயல்பைப் பெற்றிருந்தனவும் நாளடைவில் அவ்வியல்பை இழந்துவிட்டன. தமிழ்க் குழு மொழிகளுள் ஒன்றாகிய மலையாளமும் வினையால் திணை, பால், எண் அறிவிப்பதை விட்டுவிட்டது. இம்முறையே மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவது என்று கருதுகின்ற மொழி நூலறிஞர்களும் உளர்.
பெயரால் மட்டும் திணை பால் முதலியவற்றை அறியலாகும் நிலை ஏற்படுங்கால் தெளிவு பிறவாது. மாணிக்கம் எனும் சொல் ஆண், பெண், அஃறிணை ஒருமை ஆகிய பால்களில் பயன்படும் ஒரு சொல்லாகும்.
மாணிக்கம் வந்தது என்றால் ஆணா, பெண்ணா, அப் பெயருள்ள நாயா என்று அறிய இயலாது.
தமிழ் முறைப்படி மாணிக்கம் வந்தான் என்றால் ஆணையும், வந்தாள் என்றால் பெண்ணையும், வந்தது என்றால் நாய் என்று ஒன்றன்பாலையும் தெளிவாக அறியலாம். எனவே வேர்ச்சொற்கள் வினைச் சொல்லாகுங்கால் கால எழுத்து விகுதி இரண்டையும் பெறுவதோடு அவற்றை இணைக்கும் சாரியைகளையும் பெறுகின்றன. வடிவம் நீண்டுவிடுகின்றது.
நினைப்பான், நினைத்தான் எனுங்கால் ஐந்து எழுத்துகளைப் பெறவேண்டிவிடுகின்றது.
எதிர்மறையை அறிவிக்கக் கருதின் வினைச்சொல் வாயிலாகத்தான் அறிவித்தல் வேண்டும். தமிழில் பலவகையில் எதிர்மறை அறிவிக்கப்படும். பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தால்:
மொழியலன்,
அஞ்சாது,
இரங்கேன்,
குன்றல் இலர்,
வேட்டனை அல்லை,
என்பன போன்ற எதிர்மறை வினைகள் தோன்றுகின்றன. மொழியலன் என்னும் சொல்லில் பகுதியை அடுத்து அல் வந்து எதிர்மறையை அறிவிக்கின்றது. இரங்கேன் என்னும் சொல்லில் இரங்கு என்னும் பகுதியை அடுத்து ஏன் விகுதி சேர்ந்ததனாலேயே எதிர்மறை வெளிப்படுகின்றது. அஞ்சாது என்னும் சொல்லில் அஞ்சு என்ற பகுதியை அடுத்து ஆ என்ற எழுத்துப் பொருந்தி எதிர்மறையைத் தருகின்றது. குன்றல் இலர், வேட்டனை அல்லை எனும் இரண்டிலும் சொல்லுக்குப் புறம்பே இலர், அல்லை என்ற இரண்டு எதிர்மறைச் சொற்கள் தனித்து நின்று பொருந்துதலால் எதிர்மறைப் பொருளை விளக்குகின்றன. பின்னிரண்டும் சொற்களுக்கு வெளியே நிற்பன ஆதலின் சொல் வடிவத்தை நீளச்செய்யா.
சொல்லினுள் சேர்க்கப்படும் அல், ஆ இரண்டினால் சொல் வடிவம் நீட்டப்படுகின்றதா எனில் இல்லை என்றே கூறல் வேண்டும். எதிர்மறை வினைகளில் கால இடைநிலை நிற்பதில்லை. ஆகவே ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுகின்ற தன்மையைக் காணுகின்றோம். உடன்பாட்டு வினையும் எதிர்மறை வினையும் எழுத்துப் பெருக்கத்தில் ஒரு தன்மையனவே. தமிழ்ச் சொற்களின் பேரெல்லை எழுத்துகள் ஐந்து அல்லது ஆறு என்று கூறிவிடலாம்.
திராவிடச் சொற்கள் எவ்வளவு நீளமுடையனவாகக் காணப்படினும், அச் சொற்களில் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து நிற்கும் சொல்லுருபுகளை நீக்கிவிட்டால் கடைசியில் அச் சொற்கள் ஓரசையால் ஆன வேர்ச்சொல்லிலிருந்தே தோன்றின என்பது புலப்படும். x x x x x x இவ்வாறு அடுத்து அடுத்து வந்த ஓட்டுநிலைகளால் ஆறு அசை (எழுத்து)களால் ஆன ஒரு சொல் ஓர் அசையிலிருந்தே பிறந்துள்ளது என்பது காணப்பட்டது. இத்தகைய இணைப்புகளால் அச் சொல் பெறும் ஒவ்வொரு வடிவிலும் அச் சொல்லின் மூலப்பகுதி மட்டும் சிறிதும் மாற்றம் பெறுவதில்லை. செமிடிக்கு, இந்தோ ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொற்கள் பின்னர்ப் பிரித்துணர முடியாதபடி பெருமளவில் மாற்றப்பட்டிருக்க, திராவிடமொழிச் சொற்களின் மூலப்பகுதி பெற்றிருக்கும் இத் தெளிவும், தனிப்பண்பும், துருக்கி அங்கேரி போலும் சித்திய இன மொழிகளிலும் குறிப்பிடத்தக்க சிறப்புகளாக அமைந்துள்ளன.1 இவ்வாறு அறிஞர் காலுடுவல் அவர்கள் தமிழ்ச்சொல்லின் ஆக்கம்பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். ஓர் எழுத்தோ ஓர் அசையோ வேராக நின்று படிப்படியாக வேண்டுமளவுக்குச் சொல் வளர்ந்து உருவாகும் எளிமை இயல்பு தமிழின் சிறப்பு இயல்புகளில் ஒன்றாகும். தமிழில் சொல்வளம் பெருகுவதற்கும் கருத்துகளைப் பிறர் உணருமாறு நன்கு அறிவிப்பதற்கும் இவ் வியல்பு பெருந்துணை செய்வதாகும். அடிமரம் ஒன்றாக இருந்து கிளைகள் பலவாகப் பெருகுதல் போன்று அடிச்சொல் ஒன்றேயாக அதனின்று பல சொற்கள் தோன்றிப் பெருகிவிடுகின்றன.
தகு எனும் ஓர் அடியிலிருந்து தகுதி, தகை, தகைமை, தக்க, தக்கார், தக்கவன், தக்கன் போன்ற சொற்கள் உருவாகின்றன.
வேர் அல்லது அடிப்பகுதியோடு, ஓர் எழுத்தோ ஓர்அசையோ சேர்ந்து சொல்வடிவம் உருவாகின்றது. இவ்வாறு சேர்வனவற்றைச் சொல்லாக்க உருபுகள் என்பர். திரு என்பது அடிச்சொல் என்றால் அதனுடன் து சேர்ந்து திருந்து, திருத்து என்ற சொற்கள் தோன்றுகின்றன. சேருங்கால் மெல்லெழுத்து உடன் சேரின் தன்வினையாகவும், வல்லெழுத்து உடன் சேரின் பிறவினை யாகவும் ஆகிவிடுகின்றன. இம்முறையும் தமிழுக்குள்ள சிறப்புகளில் ஒன்றாகும். பிறமொழிகளில் பிறவினைப் பொருளைத் தருவதற்கு இரண்டு மூன்று சொற்களால் கூற வேண்டியிருக்க, தமிழில் மெல்லினம் வல்லினமாக மாறுவதால் தன்வினை பிறவினையாகிவிடுகின்றது. அடங்குஅடக்கு; நீங்கு நீக்கு; நிரம்பு: நிரப்பு; மயங்கு மயக்கு.
+++
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் : பக்கம் 222
++
வேர்ச்சொல்லின் இறுதிமெய் இரட்டிப்பதனாலும் சொல்லின் வடிவமும் பொருளும் வேறுபடும். கு, சு, டு, து, பு, று என்பனவற்றை இறுதியில் உடைய அடிச் சொற்கள்தாம் இரட்டிக்கும். அடிச்சொற்கள் தம் இறுதி மெய்யை இரட்டிப்ப தனால், பெயர் அடையாக மாறும்; பகுதி இறந்த காலம் காட்டும்; தன்வினை பிறவினையாக மாறும்; பெயர்கள் உருவாகும்.
சேறு : சேற்று நிலை (அகம்.46)1
இங்குப் பெயர் அடையாக மாறியுள்ளது.
அடு : அட்ட (குறுந்தொகை, 167)2
இங்கு இறந்த காலம் காட்டுகின்றது.
சூடு : சூட்டி (புறம். 332)3
தன்வினை, பிறவினையாக மாறியுள்ளது.
எழுது : எழுத்து (ஐங்குறுநூறு 352)4
வினை, பெயராக மாறியுள்ளது.
++
1 சேற்று நிலை முளைஇய செங்கட்காரான் 2 தாள் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் 3 மங்கல மகளிரொடு மாலை சூட்டி 4 எழுத்துடை நடுகல்
(இவை ஆரியர் வருகைக்கு முன் தோன்றிய பழந்தமிழ் இலக்கியப் பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டன.)
++
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply