இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் 5
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி)
பழந்தமிழும் தமிழரும் 5
குழந்தையைப் பெற்று வளர்த்தல் தாய்க்கு உரிய பெரும் பொறுப்பாக இருந்துளது. அப் பொறுப்பை அக்காலப் பெண்டிர் நன்கு உணர்ந்திருந்தனர். நாம் என்ன பிள்ளைபெறும் எந்திரமா? என்று வெறுத்து மணவாழ்க்கையை விட்டுவிடவில்லை. அப் பொறுப்பை உணர்ந்த அன்னையொருத்தி மிகப் பெருமையுடன் கூறிக்கொள்ளுவதை நோக்குங்கள்.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நல்நடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அரும் சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்கு கடனே (புறம்312)
இப் பாடலில் அன்னையின் கடன் மட்டும் கூறப்பட்டிலது.
தந்தையின் கடனும், மகனின் கடனும், அரசனின் கடனும், கொல்லனின் கடனும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியுள்ளமையால் அனைவரும் நாட்டு நலத்துக்காக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த கொள்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தையைப் பெறுதலும் நாட்டின் தொண்டுகளுள் ஒன்று என்பது புலப்படுத்தப்படுகின்றது. மகனை உயர்ந்தோனாக்கும் பொறுப்புத் தந்தையைச் சார்ந்துள்ளது. இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே வள்ளுவர் பெருமானும்,
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் (குறள்67)
என்று கூறியுள்ளார். சான்றோன் என்னும் சொல்லுக்குப் பல நற்குணங்களாலும் நிறைந்தோன் என்னும் பொருளோடு வீரன் என்னும் பொருளும் உண்டு. அக்காலத்தில் ஆடவர் அனைவரும் நாட்டுக்காவல் பொருட்டு நற்போர் செய்யவும் வேண்டியவர்களாய் இருந்தனர். இப் பாடல் அதனையும் அறிவித்துள்ளது. களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்று கூறப்பட்டுள்ளது.
உரிமை நாட்டில் வாழும் மக்கள் தம் நாட்டுரிமையை உயிரினும் மேலாக மதித்துப் போற்றுவர். மேல்நாட்டு மக்கள் அவ்வாறு தம் உரிமையைக் காத்துவந்ததனால் இன்று உரிமையோடு சிறந்து வாழ்கின்றார்கள்! தமிழ் மக்கள் காலப்போக்கில் நாட்டுரிமை பற்றிக் கவலை கொள்ளாமல் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று வாளா வாணாளைப் போக்கியதனால் அயலவர்க்கு அடிமையாயினர். அடிமையானது மட்டுமன்றிப் போர்க்குரிய காலங்களில் போர் புரியும் தகுதிக்குரியவராக மதிக்கப்படாத நிலையையும் அடைந்தனர். அன்றுள்ள நிலைமையோ வேறு. தமிழ்நாடு உரிமை நாடாக விளங்கியது. ஆடவர் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றனர். போர் என்றால் புத்துணர்ச்சி பெற்றனர். போர் எனிற் புகழும் புனைகழல் மறவர் என்று பாராட்டப் பெற்றனர்.
அன்றிருந்த அன்னையரும் தம் மக்கள் போருக்குச் செல்வதற்குரிய முறையில் வளர்த்தனர். அவர்கள் போருக்குச் செல்வதைப் பெருமையாகக் கருதினர்.
நாட்டில் போருக்குரிய சூழ்நிலை தோன்றிவிட்டது. ஆடவர்கள் எல்லாரும் போருக்கு வரவேண்டும் என்ற அழைப்பும் வெளிவந்து விட்டது. வெளியில் சென்ற மைந்தன் வீட்டுக்கு வருவான்; வீரனுக்குரிய முறையில் ஒப்பனை செய்து வாழ்த்துக் கூறி விடுப்போம் என்று வாயில் திண்ணையில் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தாள் ஓர் அன்னை. நாழிகை ஓடிக்கொண்டிருந்தது; மகனைக் கண்டிலள். அடுத்தவீட்டு நங்கை அங்கு வந்தாள். உன் மகன் எங்கே? போருக்குச் சென்று விட்டானோ! என்று வினவினாள். அவ் வினாவுக்கு மகன் வரவை நோக்கியிருந்த அன்னை விடை கூறுகின்றாள்.
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோஎன வினவுதி என்மகன்
யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே (புறம்86)
என் மகன் இந்நேரம் எங்குளான்? என்பதை அறியேன். ஆயினும், ஒன்று மட்டும் உறுதி. அவன் எங்கிருந்தாலும் உரிய நேரத்தில் போர்க் களத்தில் தோன்றுவன் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. என் வயிறு அவனைப் பெற்றெடுத்த இவ் வயிறு புலிபடுத்துச் சென்றுவிட்ட முழை (குகை) போன்றது, என்று பெருமிதத்தோடு கூறியுள்ளாள். இத்தகைய அன்னையர் வாழ்ந்த காலம் அது. அக்காலத்தில் நாட்டுப்பற்று என்பது பிறவி இயல்பாகப் பிறங்கிற்று. நாட்டுப் பற்றும் தேசிய உணர்ச்சியும் அயலவரால் கற்றுக் கொடுக்கப்பட்டன என்று கூறியவர்களும் உளர் . . . நாட்டுப் பற்று எனும் நல்லியல்பை அறிவாரோ என்று இகழ்ந்தவர்களும் இருந்தனர். இவ் வீர அன்னையர்கள் வரலாறு அவர் அறியார். அன்னை மட்டுமா? அரசன்தான் என்ன? சோழன் நலங்கிள்ளி என்ற அரசன் முழங்கியுள்ள வீரவுரையை நோக்குங்கள்.
மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின் சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன்னுயி ராயினும் கொடுக்குவென்; இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சுபுலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதோ மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்திணி நீள்முளை போலச் சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின் பொருந்திய
தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல் இரும் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே (புறம்73)
இவ் வீர முழக்கத்திற்கு வித்து நாட்டுப் பற்று அன்றோ? ஈ என இரந்தால் அரச பதவியை எளிதாகப் பெறலாம். என் உயிரையும் கொடுப்பேன்; இந் நாட்டு வீரமிக்க மக்களின் வீர ஆற்றலை மதியாது படையெடுத்துவரின், அவன் அறியாதவனே! உறங்கு புலியின் மீது இடறி விழுந்த குருடன் நிலையைத்தான் அடைவான். பிழைத்துப்போக மாட்டான். தப்பி ஓடினாலும் விடேன். அவன் நாட்டிற்கே சென்று அவனை ஒழிப்பேன். யானையின் காலில் அகப்பட்ட மூங்கில் முளை நசுக்கப்படுவது போல் நசுக்கப்படுவான். அவ்வாறு செய்யவில்லையேல் பரத்தையரைக் கூடியவன் ஆவேன். இக்கூற்றில் என்ன வீரம்! என்ன நாட்டுப்பற்று! என்ன அறனெறிப் பற்று! எல்லாம் கலந்துள்ளன அன்றோ! இரந்து வந்தால் அரச பதவியை அளிப்பேன் என்றானே யன்றி நாட்டைக் கொடுப்பதாகக் கூறிலன். மக்கள் நாடு; மன்னன் ஆளும் உரிமை உடையவன். நாட்டைக் கொடுக்கும் உரிமை அவனுக்கில்லை யன்றோ? மாவலி இப் பாட்டைப் படித்திருந்தால் பிழைத்திருப்பான். தம் நாட்டு வீரர் என்று சொல்லுங்கால் நாட்டுப் பற்று எவ்வளவு வன்மையாக அவன் உள்ளத்தில் பதிந்துள்ளது. இந்நிலத்து என்று அன்றோ கூறுகின்றான்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply