(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 50 : பழந்தமிழும் தமிழரும் 10  தொடர்ச்சி)

பழந்தமிழ்’

11. தமிழ் மறுமலர்ச்சி

  தமிழ் என்று தோன்றியது என்று காலவரையறை செய்ய முடியாது; அது உலக மொழிகளின் தாய் என்று சொல்லக்கூடியது; இந்திய மொழிகளின் தாய் என்று எளிதே  நிலைநாட்டப்படும் பெருமையை உடையது. இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. மொழி என்ற அளவிலும், அதனின் இனிமைப் பண்பாலும், எளிமை அமைப்பாலும் கற்போர் உள்ளத்தைக் கவரக் கூடியது. தமிழைக் கற்கத் தொடங்கி அதன் சுவையை நுகரத் தொடங்குவரேல் ஏனைய மொழிகள் தமிழோடு ஒப்பிடப்படுமிடத்து இனிமையற்றனவாகவே தோன்றும். தீம்தமிழ் என்றும், இன்பத் தமிழ் என்றும் சொல்லுவதற்கேற்ப அமைந்துள்ளமையை எவரும் அறிவர். அதன் வடிவ அமைப்பே உயிருக்கே இன்பம் அளிக்கக் கூடியதாகும். அதனுடைய சொற்களின் அசையமைப்பும், ஒலி இனிமையும், சொல்வளமும், சொற்பொருள் சிறப்பும் தமிழுக்குரிய  உயர் இயல்புகளுள் முதன்மைபெற்றனவாகும். (“Tamil is a language whose very essence is Gold like. If we have once acquired the taste for it, all other languages seen insipid or harsh after it. It is not a matter of the ideas this language has served to express or of its literature which is an education in wisdom and beauty – “a treasure house of balm for the spirit” as the Egyptians said of their books. Its outward form is in itself a delight to the soul. The harmony of its rythm,the grace of its sounds and the richness of its vocabulary are the most precious of its qualities” – Tamil Language, page 74).

  ஆரியம் இந்நாட்டுக்கு வருவதன் முன்னர்த் தமிழ் பரத கண்டம் முழுவதும் பரவியிருந்தது. ஆரியம் வந்த பின்னர் வழங்கும் பரப்பளவு சுருங்கிக் கொண்டே வந்து தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தென்குமரியாயிடை மட்டும் வழங்கியது. தெற்கே பூமையக் கோட்டளவில் பரந்திருந்த தமிழ் நிலப்பரப்பு,  கடல் வாய்ப்பட்டுக் கடைசியில் இப்பொழுதுள்ள குமரி முனையைத் தென் எல்லையாய்ப் பெற்றுவிட்டது. இப்பொழுது வடக்கேயுள்ள வடவேங்கடத்தையும் இழந்து திருத்தணிகையை வட எல்லையாகப் பெற்றுள்ளது.

  இவ்வாறு சுருங்கிய எல்லைக்குள் எல்லாத் துறையிலும் மக்களுக்குப் பயன்படு கருவியாக அமைந்துள்ள நிலையையும் இழந்துளது. சமயத்துறையில் ஆரியமும், ஆட்சித்துறையில் ஆங்கிலமும், தேசியத் துறையில் இந்தியும், இசைத் துறையில் தெலுங்கும் செல்வாக்குப் பெற்றுத் தமிழ் வீட்டளவில் நின்றது. வீட்டளவிலும் நற்றமிழ் ஆட்சிபெற்றிராது கலப்புத் தமிழாக, உருக்குலைந்த தமிழாக நின்றுவிட்டது.

  ஆயினும் தூய தமிழ்ப்பற்று உண்மைத் தமிழ்ப் புலவர் உள்ளங்களிலிருந்து மறைந்துவிடவில்லை. நற்றமிழர்களும் அதனைப் போற்றினர். ஆங்கிலம் கற்ற தமிழர்களும் தூய தமிழே நற்றமிழாகும் என்ற கருத்தை ஏற்றனர். சாமி. வேதாசலம் எனும் மும்மொழிப் புலவர் தம் பெயரை மறைமலை அடிகள் என மாற்றினார்; சூரிய நாராயண சாத்திரியர் பரிதிமாற் கலைஞர் ஆனார்.

  இழந்த தமிழை மீட்போம் என்று உறுதி பூண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ் நலம் காக்கும் பணியில் தலைப்பட்டது. தமிழ்ப்பொழில் எனும் திங்களிதழை வெளியிட்டது. ஆண்டுதோறும்  ஆண்டுவிழாக்கள் நடாத்திப் புலவர் பெருமக்களைக் கொண்டு தூய தமிழ்ச் சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்தது. செந்தமிழ்ச் செல்வி போன்ற இதழ்களும் வெளிவரத் தொடங்கின. தமிழ்ப் புலமைப் பட்டம் பெற்று வெளிப்போந்த இளைஞர்கள் தூய தமிழ்ப்பற்றை நன்கு வளர்த்தனர். இந்தி எதிர்ப்பு இயக்கம் தோன்றியது. இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்ற முழக்கம் சிற்றூர்களிலும் தோன்றியது. தமிழ்நாடு தமிழர்க்கே என்பது தமிழர் குறிக்கோள் முழக்கமாக உருவெடுத்துவிட்டது.

  கல்விமொழி தமிழ்நாட்டில் தமிழாகவே இருக்க வேண்டுமென்றே விதி ஏற்பட்டது. உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் கல்விமொழி தமிழ்தான் என்ற நிலைக்குரிய சட்டம் பிறப்பித்தார் அன்று கல்வியமைச்சராயிருந்த அவிநாசிலிங்கனார்.

  இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புதுமைப் பாவலர்கள் முழக்கம் செய்தனர். எங்கு நோக்கினும் இன்பத் தமிழ்; செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்; மேடைப் பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில் வண்டமிழ்; நற்றமிழில் பேசுதலே நற்புலமைக்கு அடையாளம் என்ற எண்ணம் உருப்பெற்று விட்டது. நமஸ்காரம் போய் வணக்கம் வந்தது. சந்தோஷம் மறைந்து மகிழ்ச்சி தோன்றியது. விவாஹம் விலகித் திருமணம் இடம்பெற்றது. வருஷம் கழிந்து ஆண்டு நிலைபெற்றது. இவ்வாறு தமிழ் மீண்டும் மலரத் தொடங்கியது.

  மேனாட்டில் பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியது புது மலர்ச்சி (Renaissance). தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றியிருப்பது மறுமலர்ச்சியாகும். தமிழ் எனும் நறுமணப் பெருங்கொடி கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் நாள்தோறும் நன்மலர்களைப் பூத்துக் கொண்டிருந்தது. பின்னர்ப் பல்வேறு சூழ்நிலையால் பூக்கும் தன்மை இழந்து பூவாத கொடியாகக் கருதப்படும் நிலையை எய்தியது. இப்பொழுது மீண்டும் பூக்கத்தொடங்கியுள்ளது. மலர்கள் மணங்கமழத் தொடங்கி யுள்ளன. மறுமலர்ச்சியைப் பெற்றுள்ளது தமிழ் எனும் பழங்கொடி. தமிழ் மறுமலர்ச்சி என்பது முற்றிலும் பொருந்தும்.

   இந்த மறுமலர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பது தமிழ்நாட்டில் எல்லாம் தமிழில்  என்ற கொள்கையே. இவ்வாறு நினைப்பது எவர்க்கும் தவறன்று. இஃது ஓர் புதுமையும் அன்று.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்