இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 6 – மறைமலை இலக்குவனார்
“திராவிடமொழியின் தொன்மையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்” என்னும் அறிஞர் கால்டுவெல் (திரா. ஒப். – ப. 106) கூற்றினையும் தம் கருத்துக்கு அரண்சேர்க்கும் வகையில் மேற்கோள் காட்டுகிறார். திராவிடமொழிகள் பன்னிரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு குழுவைச்சார்ந்தனவே எனத் திட்டவட்டமாக ஆய்ந்து நிறுவிய அறிஞர் கால்டுவெல் “பழந்தமிழ்தான் இவையனைத்துக்கும் தாயாகும் உரிமையும் சிறப்பும் உடையது என்பதை வெளிப்படையாகக் கூறினாரிலர்” (பழந்தமிழ் – ப. 67) என வருந்தும் பேராசிரியர், “அவர் அவ்வாறு கூறாது போயினும், அவருடைய ஆராய்ச்சி ஏனைய திராவிட மொழிகள் தமிழின் புதல்விகளே என்பதை ஐயமுற நிலைநாட்டுகிறது” (மே.ப.) எனப் புதியநோக்கில் ஒப்பிலக்கண நூலைக் காணும் வழிவகுக்கிறார். கால்டுவெல் வழங்கிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ‘தமிழ்க்குடும்ப. மொழிகள் பழந்தமிழிலிருந்து கிளைத்தெழுந்தன’ என்னும் தமது கருதுகோளை நிறுவுகிறார்.
“எம்மொழியிலிருந்தும் கடன்பெறாச் செம்மொழி தமிழ்” என்று நிறுவும் இலக்குவனாரின் முயற்சி செம்மொழி ஆய்வுநெறியின் தலையாய அணுகுமுறையாக விளங்குகிறது. “எம்மொழியிலும் விரைவில் மாற்றங்கொள்ளாதன இடப்பெயர்கள், வேற்றுமையுருபுகள், வினைவிகுதிகள், எண்கள் முதலியனவாம். இவை அமைந்துள்ள இயல்பினை நோக்கினால் தமிழே திராவிடமொழிகளின் தாய் எனத் தெள்ளிதின் அறியலாகும்” (மே.ப. ப.68) எனத் தமது ஆய்வுமுறையைக் கூறி அவ்வழிநின்றே தமது கருதுகோளைச் செவ்விதின் நிறுவுகிறார்.
தொல்காப்பியர் காலத்தமிழுக்கும் திருவள்ளுவர்காலத் தமிழுக்கும் இடையே நிலவிய சில வேற்றுமைகளைப் பட்டியலிடுகிறார் (மே.ப. ப.139-140). “அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிலது. விகுதிகள், உருபுகள், இடைநிலைகள், சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளன. பழையன புதிய பொருள்கள் பெற்றுள்ளன” என்று இவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துரைத்து, இவ்விருவர் கால இடைவேளை ஆறு நூற்றாண்டுகள் என்பதையும் சுட்டி “ஆறு நூற்றாண்டுகட்குள் மேலைநாட்டு மொழிகளில் பல அடைந்துள்ள மாற்றங்களோடு தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்மொழி மாற்றமே அடையவில்லை என்று கூறிவிடலாம்” (மே.ப. ப.139-140) என அறுதியிட்டுரைக்கிறார். இக்கருத்தை வரலாற்றுப்பின்புலத்துடன் ஆய்வோர், மாற்றார் படையெடுப்பும் வேற்றவர் குடிப்பெயர்வும் காணப்படாச் சமூகவரலாற்றுப் பின்புலம் இந்த ஆறு நூற்றாண்டுகளில் (கி.மு. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி. மு. முதல் நூற்றாண்டு வரை) நிலவுவதைக் காண்பர். ஒரு மொழி மாற்றம் அடைவதற்குரிய சூழல் நிலவாதவேளையில், பேராசிரியர் முடிபு மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளமையையும் தெளிவர்.
செம்மொழித் தகுதிப்பேறு வழங்குதற்குத் தேவையான கூறுகளில் முதன்மை வாய்ந்த ஒன்றாக இந்திய அரசு வலியுறுத்திய “மிகப்பழமையான நூல்களை, அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற வரலாறு” பற்றிக் கூறுதற்குச் சங்க இலக்கிய வரலாறும் சங்கஇலக்கியச் சால்பும் அமைந்துள்ளன எனினும், “ஆரியச் செல்வாக்குக்குட்படாத பழைய இலக்கியம் எதனையும் நாம் தமிழ்மொழியில் பெற்றிலோம்” எனும் நீலகண்ட சாத்திரியாரின் பொருந்தாக்கூற்றை வன்மையாக மறுக்கிறார் பேராசிரியர். சங்கப்புலவர்கள் 473 பேரில் 276 பேர் ஆரியர் வருகைக்கு முற்பட்ட புலவர்கள் என்பது பேராசிரியர்தம் துணிபு. இவருள் இயற்பெயர் அறியப்பட்ட 268 பேரின் பட்டியலை வழங்கி இவர்களனைவரும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட தமிழ்ப்புலவர்கள் என அறுதியிட்டுரைக்கிறார் (மே.ப. ப.109). இவர்களுள், முதுவெங்கண்ணனார், வெண்பூதியார், வெறிபாடிய காமக்கண்ணியார் ஆகிய மூன்று புலவர்களும் தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவராயிருத்தல் கூடும் என்னும் தமது கருத்தையும் தெரிவிக்கிறார் (மே.ப. ப.109). இங்ஙனம் வரையறை செய்தற்குப் பேராசிரியர்க்குத் துணைபயந்தவை அகச் சான்றுகளேயாம். சொற்றொடரமைப்பு, இலக்கணப்போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கும் இக்கருதுகோள்கள் வரலாற்றாய்வாளர்தம் தொடர்ந்த ஆய்வால் நிலைநிறுத்தப்பெறுமாயின், தமிழ்நாட்டுவரலாறு மேலும் தெளிவடையும். தாய்மொழிப்பற்று மேலோங்கியநிலையில் பேராசிரியர் இத்தகைய கருதுகோள்களை முன்வைத்ததாகக் கருதிவிடமுடியாது.
வரலாற்றுச் சான்றுகள் இல்லாத நிலையில், இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கருதுகோள்களை முன்வைக்கும் ஆய்வுநெறியை வடமொழியிலும் காண்கிறோம். திருஞான சம்பந்தரைத் ‘திராவிட சிசு’ எனப் பாடிய சங்கரரின் காலம் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு எனச் சமற்கிருத ஆய்வாளர் கூறுவதனை அட்டியின்றி ஏற்கும் ஆய்வுலகு, இலக்கியச் சான்றுகளையும் இலக்கண அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு தமிழறிஞர்கள் கூறும் கருத்துகளை – அவை கருதுகோள் நிலையில் முன்மொழியப்பட்டாலும் – ஏற்பதில்லை என்பது கசப்பான உண்மை. இலக்கியங்கள் தமதுகாலச் சமூகச்சூழலை நேரடியாகவோ, மறை- முகமாகவோ, சிலவேளை எதி9ர்முகமாகவோ காட்டுவன என்பதால் இலக்கியங்களிலிருந்து சமூகஞ்சார்ந்த தரவுகளைப் பெறமுடியும் என்பதும், ஒரு நாட்டின் இலக்கியங்களைப் புறக்கணித்து விட்டு அந்நாட்டின் சமூகச்சூழலை அறிந்துவிடமுடியாது என்பதும் இன்றைய திறனாய்வு வளர்ச்சிப்போக்கு நமக்குக் கற்பிக்கும் பாடம் எனலாம். வளர்ச்சியடைந்துவரும் மொழிப்போக்கில் எத்தகைய மொழிப்போக்கு அல்லது மொழியியலமைப்பை ஒரு நூல் பெற்றுள்ளது என்பதனைக் கொண்டு, இலக்கிய வரலாற்றில் ஓர் இலக்கியத்தின் இடத்தை மதிப்பிடமுடியும்ஆயின், இத்தகைய மொழியியல் ஆய்வு முழுமையான பார்வையுடையதாக இருத்தல் வேண்டும். மறைமலையடிகள், நாவலர் பாரதியார் ஆகியோரின் பாடல்களின் மொழியமைப்பைக் கொண்டு அவை சங்ககாலத்தன என மயங்கும் நிலையும் ஏற்படலாம். எனினும் அப்பாடல்களில் பயின்றுவரும் சொற்கள், அப்பாடல்கள் உரைக்கும் சமூகச்சூழல் ஆகியவை அவற்றின் காலச்சூழலைக் கணித்தறியத் துணைநிற்கும். எனவே சமூகவியல், மொழியியல் ஆகிய இரு அறிதுறைகளையும் ஒருசேரத் துணைக்கொண்டு ஆய்வுநிகழ்த்துவோர் புதிய தரவுகளைப் பெறவியலும் என்னும் அவர்தம் ஆய்வுமுறையியல் பழைய ஐயங்களைப் போக்கிப் புதிய கருதுகோள்களை நிறுவ வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய அறிவியற்பாங்கான ஆய்வுமுறையியலையே பேராசிரியர் பின்பற்றி வருகிறார் என்பதனை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன.
(தொடரும்)
– பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்
Leave a Reply