ilakkuvanar+12

இலக்குவனாரின் விழைவுகள் நிகழ்வுகளாகட்டும் !

தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு குறைந்து வருவதன் காரணம் என்ன? செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே கவலைப்பட்ட  சூழல்கள்  இன்றும் மாறாமல் இருப்பதுதான். பிறர் இந்தியா என்றும் திராவிட நாடு என்றும் சொல்லிய பொழுதே தமிழ்த்தேசியம் என்றும் மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசு என்றும் தொலைநோக்கில் சிந்தித்தவர் அவர். அவரது சிந்தனைகளில் சிலவற்றை அவரது நூற்றாண்டின் நிறைவில் நினைத்துப் பார்ப்போம்.

“தொல்காப்பியமும் திருக்குறளும் நமதிரு கண்கள். தமிழ் மக்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவற்றைப் படித்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் பேராசிரியர் இலக்குவனார். தொல்காப்பியம் இன்று பொது மக்கள் உலகிற்குத் தெரியத் தொடங்கிவிட்டது. தொல்காப்பியர் பெயரில் விருதுகள் வழங்கப்படுவதுடன், தொல்காப்பியர் பெயரில் உலகப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது.  அதே நேரம் மக்கள்  தொல்காப்பியர் காத்த அன்பின் ஐந்திணையைப் போற்றி வாழ்கின்றார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் கூடா ஒழுக்கமும் மண முறிவுகளும் பெருகி வருகின்றன. ஆரவாரத்திற்கு ஆட்பட்டு மனையறத்தை மீறுவோரே கதைப்பாத்திரங்களாகி மக்கள் மனத்தில் வழிகாட்டிபோல் வாழ்கிறார்கள். மக்கள் அனைவரும் அன்பிலே ஊறிப் பண்பிலே திளைக்கும் நிலை வரவேண்டும்.

  திருக்குறள் நெறியில் மக்கள் எல்லாரும் செம்மையுடன் வாழ வேண்டும்; அவ்வாறு வாழ வைப்பதையே ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் எனக் குறள்நெறியைப் பின்பற்றியும் பரப்பியும் வாழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார். பிறன்மனை விழையாமையை வலியுறுத்தினார் தெய்வப்புலவர். ஆனால், அத் தகையோருக்குத்தானே பாராட்டும் பரிசும் கிடைக்கும் நிலை இருக்கின்றது. கட்குடியை வெறுத்தொதுக்கச் சொன்னார் தெய்வப்புலவர். நம் நாட்டு வருவாயில் முதலிடம் வகிக்கும் அளவில் கள்வணிகம் கொடிகட்டிப் பறக்கின்றதே! எண்ணும் எழுத்துமாகிய மொழியே நம் விழி என்றார் தெய்வப்புலவர். ஆனால் நாம் கண்ணிருந்தும் குருடாய் அயல்மொழிக் காமத்தில் சிக்குண்டு   அழிகிறோமே! இன நலம் ஏமாப்பு தரும் என்றும் எல்லாப் புகழும் தரும் என்றும் இனநலத்தை வலியுறுத்தினார் தெய்வப்புலவர். ஆனால், இன்றைக்கு இனநலம் மறந்து இனம் அழிந்தாலும் வெகுண்டெழாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் அல்லவா தமிழ் மக்கள் வாழ்கிறோம். பலமுறை தாவிச் சென்றால் சென்றடையும் தொலைவில் உள்ள  ஈழத்தில் தமிழினம் அழிய நாட்டவரே துணையாய் இருந்தும் தடுக்கும் உணர்வின்றிப் பகைவர்களையே போற்றிப் பாடும் இழிநிலையில் அல்லவா பைந்தமிழர்கள் இருக்கின்றார்கள்.

திருக்குறள் நெறியில் மக்கள் ஒழுகுவரேல், மாநிலத்தில், போரும் பூசலும் அற்று, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனும் கோட்பாடு நிலைத்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு சிறந்து அன்பும் அறனும் அரசோச்சும்; அச்சமும் அவலமும் கனவிலும் உளவாகா. மொழிவழி நாடுகள் அமைந்து, ஆள்வோரும், ஆளப்படுவோரும் இன்றி, படையெடுப்பும் முற்றுகையும் நீங்கி, மக்கள் நன்மைக்காக மக்களால் ஆளப்படும் மக்களாட்சி மாண்புற்று விளங்கும்” என்னும் பேராசிரியர் இலக்குவனார் வரிகளை நாம் உள்ளத்தில் பதிய வைத்துக் குறள்நெறி வழி வாழ்வோமாக!

சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியமாக மக்களிடையே அறிமுகப்படுத்திப் பரப்பியவர் பேராசிரியர் இலக்குவனார். சங்கத் தமிழ்ப் புகழ் பாடித் தங்கத் தமிழ் வளர்ப்போம் என்றார் பேராசிரியர். இன்றைக்கு ஓரளவு பாமரனும் அறியும் வண்ணம் சங்க இலக்கியங்கள் பரவியுள்ளன. சங்கத்தமிழ்க் கருத்தரங்கங்கள் இளைய தலைமுறையினரிடம் அவற்றை எடுத்துச் செல்கின்றன. ஆனால், என்னே கொடுமை! சங்கத்தமிழ்ப் புகழைப் பரப்ப வேண்டியவர்கள் – அதன்நெறியைப் போற்றிப் பின்பற்ற வழிகாட்ட வேண்டியவர்கள் – அதன் சிறப்பையும் காலத்தையும் பின்னுக்குத் தள்ளிச் சங்கத்தமிழ் மேடையைத் தங்களின் திரிபு வாதங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். சங்கத் தமிழ் நெறியை மட்டும் ஆய்ந்து பரப்பும் அறிஞர்கள் பெருக வேண்டும்.

தமிழ்ப்பகைவர்கள்தாம் செல்வாக்கு பெற்று விளங்குகின்றனர் எனக் கவலைப்பட்டார் பேராசிரியர். தொல்காப்பியப் பூங்கா, குறளோவியம், சங்கத்தமிழ் படைத்துப் பாமரனிடம் இவற்றைக் கொண்டு சென்ற முத்தமிழறிஞர் ஆட்சியிலும்கூடத்  தமிழ்ப்பகைவர்கள்தாம் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர்.  தமிழ் அமைப்புகளில் முதன்மைப் பொறுப்பில் அமர்ந்து தமிழ் வளர்ச்சிக்கான தேக்கத்தை உண்டாக்குகின்றனர். அத்தகைய செல்வாக்கால் நடைபெறும் ஒன்றுதான் தமிழ் வரிவ மாற்ற முயற்சி. மொழியாகிய உயிர் நிலைக்க எழுத்தாகிய உடல் பேணப்பட வேண்டும் என்று கூறி வரிவடிவச்சிதைவு முயற்சிகளுக்கு எதிர்க்குரல் கொடுத்தார் பேராசிரியர். ஆனால் அரசின்  தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் – தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் – இணையப் பக்கங்களிலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்த ஒலி-ஒளிக்காட்சி இடம் பெற்று உலகோரைத் தவறான பாதைக்குத் திருப்பிக் கொண்டுள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கும் மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழே; தமிழ் மட்டுமே உயர்தனிச் செம்மொழியாய்த் திகழ்கிறது” என்றார் பேராசிரியர் இலக்குவனார். கலைஞரின் அரும்பெரும் முயற்சியாலும் அனைத்துத் தரப்பாரின் போராட்டத்தாலும் தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியேற்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்நாட்டிற்கு அயல் மொழியாம் சமற்கிருதம் முதலான மொழிகளுக்குச் செம்மொழித் தகுதியேற்புவழங்கப்படும் முன்னரே வழங்கிய நிதியுதவி போல்  வழங்கப்படாமல் உள்ளது.  தமிழ் ஆய்விற்கு உதவி வரும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் உலகெங்கும் தமிழைப் பரப்பும் வகையில் பணியாற்றப் போதுமான நிதிஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

தமிழ்மொழி வளம்படுத்துதல், தமிழ்ப்பண்பை உருவாக்குதல், தமிழ் வரலாற்றை உலகறிய உருவாக்குதல் முதலியன, பல்கலைக் கழகத்தின் முதன்மைக் குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார் பேராசிரியர் இலக்குவனார். ஆனால், இக்குறிக்கோள் இன்றுவரை எட்டாக் கனியாகத்தான் உள்ளது. அந்நிலை மாற வேண்டும்.

தமிழை வளப்படுத்துதற்கு முதற்படியாகப் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும் என்று போராடினார் பேராசிரியர் இலக்குவனார். “ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்ற நிலையை வைத்துக் கொண்டு அதன் வழியாகப் படித்து வருவோர்க்கே மதிப்பும் தந்து கொண்டிருந்தால் தாழ்த்தப்படும் தமிழ்வழியாகப் படிக்க எவர் முன்வருவர்?” என்னும் வினா எழுப்பித் தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட பிறகு தமிழ்வழியாகப் படித்துப் பட்டம் பெற்றோர்க்கே ஆட்சித்துறையில் இடம் அளித்தல் வேண்டும் என வற்புறுத்தினார் பேராசிரியர். இதற்கான போராட்டத்தின் பரிசாகச் சிறைவாழ்க்கையைப் பெற்றார். முதல்வரின் முயற்சியால்,  தமிழ்வழிக்கல்வி பெற்றவர்கள் ஓரளவேனும் மகிழும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நம்பிக்கை ஒளிக் கீற்றை நமக்குக் காட்டுகின்றது. எனினும், முழுமையும் தமிழ்க்கல்வியே இலங்க இது உதவாது. எனவே, 20 % இட ஒதுக்கீடு என்று ஒதுக்கி வைக்காமல் பேராசிரியர் இலக்குவனார் கூறுவதுபோல் தமிழ்வழியாகப் பயின்றவர்க்கே வேலை என்னும் நிலை வரவேண்டும். இவ்வாறு நாம் நம் தமிழ்நாட்டில்தான் கோருகிறோமே தவிர வேறு மொழி வழங்கும் நாட்டில் கேட்கவில்லை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே பயிற்சி மொழியாக இருக்கவும் எவ்வகை வேறுபாடின்றி அனைவருக்கும் இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரும்பியவர்கள் பிறமொழிகளைப் பயில வசதி செய்து தர வேண்டும்;  அதே நேரம் பிற மொழி வாயிலான கல்வி தடை செய்யப்பட வேண்டும்.

சாதிக்கட்சிகள் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் என்றார் பேராசிரியர். ஆனால், இன்றைக்குச்சாதிக்கட்சிகளே பெருகிக் கொண்டுள்ளன. இந்தி முதன்மை தமிழ்மொழிக்கும் தமிழர்க்கும் கேடு விளைவிக்கும் என்று எச்சரித்தார் அவர். ஆனால் இந்தித் திணிப்பு கொடுங்கரங்களால் நம்மை வளைத்துக் கொண்டு நெருக்கிக் கொண்டுள்ளது. “தமிழர்க்குத் தமிழே தேசிய மொழி.  தமிழ்நாட்டில் எல்லாரும் தமிழறிந்தவர்களாய் எல்லாமும் தமிழாய் இருத்தல் வேண்டும்” என்றார். ஆனால், தமிழறியாதவர் பெருகுவதுடன் அவர்களின் மேலாண்மைதான் ஓங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் சம உரிமை வேண்டும் என்றார்.  ஆனால் மத்திய அமைச்சர்கூடத் தன்தாய்மொழியாம் தமிழில் பேச உரிமை மறுக்கப்படும் அவல நிலைதான் தொடருகிறது.

நற்றமிழ்நாடு பெயரிழந்து உரிமையிழந்து ஒற்றுமையின் பெயரால் மொழியையும் இழக்கப் போகின்றது. அந்தோ தமிழ்நாடே! உண்பதும் உடுப்பதும் பதவிகளைப் பெறுவதும்தான் வாழ்வா? விழியினும் இனிய மொழியை இழந்து வாழ்வது எற்றுக்கு? தமிழ்மொழி அழிந்தபின்னர் தமிழர் என்ற பெயர் நமக்கு ஏது?” என்று வேதனையுடன் பொங்கி எழுந்தார் புரட்சிப் போராளி பேராசிரியர். ஆனால், இன்றைக்குப் பதவி ஆசையும் பண ஆசையும்  மொழியாம் விழியைக் கட்டிப் போட்டு விட்ட அவலநிலைதான் உள்ளது.

இன்று உலகெங்கும் குழு வன்முறைகளும் அரசவன்முறைகளும் இன அழிப்புக் கொடுமைகளும் பதவி நலன் கருதிய பிறநாட்டுப் படையெடுப்பும் உரிமைக்குரல்கள் ஒடுக்கமும் வறுமையும் அவலமும் காணப்படுகின்றன. அனைத்து நாடுகளும் இணைந்த உலகக்கூட்டரசு ஏற்பட்டால்தான் உலக மக்கள் போரும் பூசலும் மறந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் நிலையில் ஒற்றுமையாகவும் சிறப்பாகவும் வாழ்வர்  என்று வலியுறுத்தினார்  தமிழ்க்காப்புத் தளபதி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்.  அத்தகைய நிலைக்கு முன்னர்ப் பரதக் கண்டம் தேசிய இனங்களின் கூட்டரசு நாடாக-இந்திய ஐக்கிய நாடுகளாகத் திகழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  பாதுகாப்பு முதலான  சில துறைகள் தவிர பிற அனைத்துத் துறைகளும் கூட்டரசு உறுப்பு நாடுகளிடம் (மாநிலங்களிடம்) இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது கனவு நனவானால் இனங்களை ஒடுக்கும் போக்கும் காணப்படாது; எனவே, பிரிவினைக் கோரிக்கைளும் எழாது.

தேசிய ஒருமைப்பாடு எனும்  காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர்” என அன்றே பேராசிரியர் சுட்டிக்காட்டிய சூழல்  இன்னும் நீங்காமல்தான் உள்ளது. “இந்தியக் கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப் பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எள்ளத்தனையும் செய்திலது. வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுத்தப்படுகின்றது  என்றும்  இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக் கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை, மறக்கச் செய்து மறைக்கத்தான் வழிகோலுவார்கள் போல உள்ளது” என்றும் கவலைப்பட்டார் பேராசிரியர். இந்தியா உண்மையிலேயே கூட்டரசாகத் திகழ்ந்தால்தான்  இக்கவலை நீங்கும்.  திராவிடநாடு கோரிக்கைக்கான காரணங்கள் இன்னும் அப்படியேதான் உள்ளன என முத்தமிழறிஞர் அவ்வப்பொழுது கூறுகிறார் அல்லவா?  பேராசிரியர் வலியுறுத்தும் கூட்டரசு அமைந்தால் அக்காரணங்கள் தாமாகவே மறைந்து விடும்.

“வசதியற்றவர்களாய் ஈழத்திலும் காழகத்திலும் சிங்கப்பூரிலும் இன்னும் பிறநாடுகளிலும் கூலிகளாய்த் துன்பம் சுமந்து வாழும் தமிழர் அங்கெல்லாம் வெறிவேங்கைகளால் தாக்கப்படும்போது ஏன்? என்று கேட்க எவருமில்லை. நாடற்றவர்களாக விரட்டப்படுகின்றனர். நடுக்கடலில் தத்தளிக்கின்றனர் சிலர்.  தாய்நாட்டில் நுழைந்துவிட்ட காரணத்தால் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டு விட்டனர் பலர்”  என்ற  பேராசிரியரின் அன்றைய உள்ளக்குமுறல் இன்றைக்கும் எதிரொலிக்கும் வகையில்தான் உலக நாடுகளில் தமிழர்களின் நிலை உள்ளது.

இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப் பலி கொடுத்து விடுவார்களோ என்று அஞ்ச வேண்டியுள்ளது” எனத் தொலைநோக்குடன் மனம் குமைந்தார் பேராசிரியர். ஆனால் அச்சத்தைப் போக்க வேண்டிய அரசுகள் ஈழத்தமிழர்களின் உயிர்களையும் எஞ்சியோரின் இருப்பிடங்களையும் உடைமைகளையும்தான் போக்கின. இனியேனும் உரிமை பெற்றுத் தமிழர்கள் வாழ நம் நாடு தமிழ்த்தேசியக் கூட்டரசு நாடுகளாக மாற வேண்டும்.

“தேசியமொழி இந்தியாம்! ஆட்சிமொழி ஆங்கிலமாம்! சமயமொழி ஆரியமாம்! பாட்டுமொழி தெலுங்காம்! வட்டாரமொழி தமிழாம். என்னே விந்தை! தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும். முழு உரிமை பெற்ற நாளாகும்”  என்றார் பேராசிரியர். அத்தகைய முழு உரிமை பெற்ற நாள் வர பேராசிரியர் விழையுமாறு தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும்  இருக்கும் தமிழ்ச்சூழல் நம் நாட்டில் என்றும் இருத்தல் வேண்டும்.

தனியொரு தமிழியக்கமாக விளங்கித் தமிழுக்காக வாழ்ந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் தமிழ்நலம் குறித்த கனவுகள் நனவாக வேண்டும்! அவரது விழைவுகள் நிகழ்வுகளாக வேண்டும்!  அவை வரலாறாக மாற வேண்டும்! தமிழன் தரணியில் எங்கு வாழ்ந்தாலும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் தலை நிமிர்ந்து வாழ இன்றைய தேவை இலக்குவனார் நெறியே என்பதை உணர்ந்து பேராசிரியரின் எண்ணங்களை வழிகாட்டியாகக் கொள்வோம்! வாழ்வாங்கு வாழ்வோம்!

இலக்குவனார் புகழ்பாடி இனிய தமிழ் வளர்ப்போம் !

– இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி – மீண்டும் கவிக்கொண்டல்

meendum kavikkondal_thalaippu