(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: தொடர்ச்சி) 

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu18

  தேர்தல் என்றால் தேடி ஓடுவர். அனைவரும் மயங்கும்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று சொல்வர். காலில் விழுந்து வணங்குவர். இரவு பகல் பாராது ஓயாமல் உழைப்பர். உள்ள பொருளை எல்லாம் இழப்பர். உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார். தம்முடைய பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டுவன எல்லாம் செய்வர். வசதியற்றுத் துன்புறும் ஏழை மாணவர்க்கு வேண்டும் உதவியைச் செய்ய விழையார்.

இதனை,

‘           தேர்தல் என்றால் தேடி வருவர்

            அனைவரும் மயங்க அள்ளி வீசுவர்

            இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று

            படிந்தும் பணிந்தும் பகலிரா வின்றி

           ஓயா துழைத்தே உளவெல்லாம் போக்குவர்

            உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார்

            விளம்பரம் பெற்றிட வேண்டுவ செய்வார்

            ஏழை மாணவர் இன்னல் போக்கிடார்’ 34

என்ற அடிகளின் மூலம் தேர்தலில் ஈடுபடும் செல்வர்களின் இயல்பைச் சித்தரிக்கிறார் கவிஞர்.

 பாரியும் ஓரியும் வாழ்ந்த நாட்டில் உற்றுழி உதவும் வள்ளல் பெருமக்கள் இல்லாமல் போகவில்லை. இருக்கின்றார் புதுக்கோட்டையில். மிக அண்மையிலேயே உள்ளது அவ்வூர். எனவே விரைந்து செல்வாய் புதுக்கோட்டை

 அண்ணன் வீடு எங்கே? என்று எவரைக் கேட்பினும் தங்கு தடையின்றி அன்புடன் அங்கு அழைத்துச் செல்வர். அங்கே கலைபயிலும் சிறுவர்கள் களிப்புடன் இருப்பர். செய்தித் தாள்களும் நன்னெறி பயிற்றும் செந்நெறி நூல்களும் பயில்வர். அண்ணனும பக்கம் இருந்து ஐயம் நீக்கி, தக்க அறிவுரை வழங்குவார். அங்கே கட்டுரை திருத்தும் காட்சியும் காணலாம். ஏழை மாணவர் எவர் வந்தாலும் இன்சொல் கூறி வேண்டுவன உதவுவார். தாழ்த்தப்பட்ட குடிமக்களுக்குக் கல்வி புகட்ட காந்திபுரத்தில் இரவுப் பள்ளியும் இலவசமாக நடத்துவார். சிறுவர்க்கு எழும் ஐயம் நீக்குவதற்கு ஆசிரியரை அமர்த்தி வகுப்பில் முதல்வனாக வரவும் செய்வார். பிறவியில் எவரும் பேதையர் அல்லர் என்பதை இன்மன்பதைக்கு உணர்த்தவும் செய்வார். வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெற்றால் எந்நிலையில் உள்ளவரும் பெரிய அறிஞராய் விளங்க முடியும் என்னும் உண்மையை உலக்குக்கு உணர்த்திட பரிசுகள் பல வழங்கிடும் பாங்கினையும் அறியலாம்.

  கடந்த கால்நூற்றாண்டாகக் கல்வித் தொண்டே கடவுட் தொண்டாகக் கருதிப் பணி செய்து வருகிறார். ஒழுக்கத்தாலும் புலமையாலும் உயர்ந்த பண்பாலும் மேம்பட்ட மாணவர்களை ஆண்டுதோறும் வெளிப்படுத்துகிறார். மாணவர் எவரேனும் துன்பம் காராணமாகத் துவண்டிடக் கண்டால், நேரம் அறிந்து குழந்தை க்குப் பாலூட்டும் தாயைவிட மிகவும் இரக்கத்துடன் மற்றவர் அறியாத வகையில் உதவி செய்வார். இக்கருத்தை,

‘           கால்நூற் றாண்டாய்க் கல்வித் தொண்டே

            கடவுள் தொண்டாய்க் கருத்துடன் ஆற்றி

            ஒழுக்கம் புலமை உயல்நலம் பண்பு

            மிக்கோர் தம்மை வெளிவரப் செய்துளர்

           மாணவர் எவரும் வருந்திடக் காணின்

            பால்நினைந் தூட்டும் தாயினும் பரிந்து

            பிறர் அறி யாத பெற்றியில் உதவுவர்’35

என்ற அடிகள் மூலம் புலப்படுத்துகின்றார்.

  இன்னும், தமக்கு என்று உள்ள உணவுப் பொருளையும் எனக்குப் பல நாட்கள் தந்துள்ளார். தேடும் பொருளை எல்லாம் பிறர்க்கு வழங்கி மகிழ்வார். நாளிதழும், நம்மை பயக்கும் நூல்களும் பல பெற்ற பரிவோடு கொடுப்பர். வீட்டு முற்றமும் கூடச்சில நேரங்களில் பள்ளியாகத் திகழும்.

           ‘நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

            வகையென்ப வாய்மைக் குடிக்கு’ 36

என்று வள்ளுவர் கூறும் இலக்கணத்தின் வடிவமாகத் திகழ்வார்.

  அவர் மனநிலை அறிந்த அன்புடன் செயல்படும் தம்பியையும் மக்களையும் சுற்றத்தினரையும் ஒருசேரப் பெற்றவர்.

         ‘ மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

            யான் கண்ட டனையரென் இளைஞரும் வேந்தனும்

            அல்லவை செய்யான் காக்கும்’ 37

என்ற பிசிராந்தையாரின் மொழிக்கேற்ப அவர் இல்லறம் அமைந்துள்ள பாங்கு அறிந்து இன்புறத்தக்க சிறப்புடையது.

தம்பி கோவிந்தசாமி அறநெறி போற்றும் அரிய வணிகராவர்.

தமவும் பிறவு மொப்ப நாடிக்

கொள்வதூஉம் மிகை கொளாது

கொடுப்பதூஉங்   குறைகொடாது

 பல்பண்டம் பகர்ந்து வீசும்’ 38

என்று பட்டினப்பாலை கூறும் வணிகப் பண்பினைப் பெற்று விளங்குகிறார். அண்ணனுக்கேற் அருள்நலத் தம்பியாம் அவர். எப்பொழுதும் புன்னகை தவழும் பொலிவான முகத்தோடு தோற்றமளிப்பார். அவர்கள் உடலால் வேறுபட்டுக் காட்சியளிப்பினும், உள்ளத்தால் ஒன்றிய பண்பாளர்கள். அண்ணன் தம்பியாரின் உறுதியான பிணைப்பால் அவர்களைப் பிரிக்க முயன்றவர்கள் தோல்வியைத்தான் அடைந்தார்கள்.

  ஆதலால், குமணனின் வேறுபட்ட குணக்குன்றாம் அவனை நீ காண்பதற்குச் சிறிதும் அஞ்ச வேண்டாம. வீடாயினும் சரி அன்றி வெளியிடமாயினும் சரி மாணவர் கூட்டம் அவரை அன்புடன் தொடர, அறிவுரை கூறிக் கொண்டிருப்பார். கையிடத்துக் குடையும், காலில் செருப்பும் கொண்டு, உடம்பில் தூய வெண்மைச் சட்டையும் அணிந்து இருப்பர். எளிமையும் இனிமையும் ஏற்றமும் பண்பும் ஓர் உருவெடுத்தது போல் செம்மாந்த நடையுடன் செல்வதைக் காணலாம்.

  தம்பி நீ சென்று காண்பாயாக. வீட்டிலும் வெளியிலும் காண்பதன்றி அவர் விரும்பிச் செல்லும் இடத்தைச் சொல்லுவேன்.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 62-69
  1. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 95-101
  1. திருவள்ளுவர், திருக்குறள், ‘குடிமை’ குறள் 953
  2. பிசிராந்தையார், புறநானூறு செய்யுள் 191, அ-ள் 3-5.
  3. கடியலூர் உருந்திரங்கண்ணார், பட்டினப்பாலை,அ-ள் 209-211

(தொடரும்) 

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19)