(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 இன் தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

25

 

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 

 

 1. வாழ்த்துக் கவிதைகள்

வாழ்த்துக் கவிதைகள் என்ற பொருளில் இருபத்து மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. இக் கவிதையை

 1. திருமண வாழ்த்து
 2. புலவர் வாழ்த்து
 3. பொங்கல் வாழ்த்து
 4. தலைவர் வாழ்த்து
 5. அன்பர் வாழ்த்து
 6. படையல் வாழ்த்து

என்று ஆறு பிரிவாகப் பகுக்கலாம். திருமண வாழ்த்துக் கவிதை வரிசையில் மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. அவை

 1. அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்து
 2. முத்தையா செட்டியார் அறுபதாம் திருமண வாழ்த்து
 3. ச.சு. இளங்கோ திருமண வாழ்த்து

புலவர் வாழ்த்து என்ற பகுதியில் இரண்டு கவிதைகள் இடம் பெறுகின்றன. அவை

வள்ளுவரின் வான்புகழ் என்ற கவிதையும், புலவர் கார்மேகக் கோனார்க்கு பொன்னாடை போர்த்திய விழாவில் வாழ்த்திய கவிதையும் அமைந்துள்ளன.

பொங்கல் வாழ்த்து என்ற பிரிவில் மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன.

1947 ஆம் ஆண்டு பொங்கல் நாளில் வெளியிடப்பட்ட ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’61

1964ஆம் ஆண்டு உழவர் திருநாளில் வெளிவந்த பொங்கல் வாழ்த்து.

1965 ஆம் ஆண்டு பொங்கல் புதுநாளில் வெளிவந்த பொங்கல் வாழ் த்து என மூன்று கவிதைகள் உள்ளன.

தலைவர் வாழ்த்து என்ற பிரிவில் ஆறு கவிதைகள் இடம் பெறுகின்றன. தன்மான இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் மீது பாடப்பெற்ற ‘எல்லாம் இவரின் தொண்டின் விளைவே’ என்ற கவிதையும், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தோற்றுவித்த அறிஞர் அண்ணா மீது பாடப்பெற் ‘தனிப் பெருந்தலைவர் வாழ்க’ என்ற கவிதையும் இந்தித் திணிப்பு எதிர்ப் புப் போரில் பங்கு கொண்டு சிறைக்களம் சென்று மீண்ட நாவலர் நெடுஞ்செழியனை வாழ்த்திய கவிதையும், கலைஞர் கருணாநிதியின் நாற்பத்தெட்டாவது பிறந்த நாளின்போது வாழ்த்திய கவிதையும், தொண்டர் என்ற பெயருக்கு இலக்கணமாய் விளங்கிய கரும வீரர் காமராசர் பிறந்த நாளின்போது வாழ்த்திய கவிதையும் என ஆறு கவிதைகள் அமைந்துள்ளன.

அன்பர் வாழ்த்து என்ற பிரிவில் ஐந்து கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் முத்துவிழாவின்(எண்பதாவது பிறந்தநாள் விழா)போது பாடிய கவிதையும், கருமுத்து தியாகராசச் செட்டியாரை வாழ்த்திப் பாடிய கவிதையும், அறிஞர் கோ.து.நாயுடு அவர்களின் பிறந்தநாளின்போது பாடப்பெற்ற கவிதையும், அ.கி. பரந்தாமனாரின் மணிவிழாவின்போது வாழ்த்திப் பாடிய கவிதையும், ஆதிமூலம் பெருமாளை வாழ்த்திப் பாடிய கவிதையும் என ஐந்து கவிதைகள் உள்ளன.

படையல் வாழ்த்து என்ற பிரிவில் நான்கு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

புதுக்கோட்டை அண்ணல் பு.அ.சுப்பிரமணியனாரின் இளவல் கோவிந்தசாமி அவர்கட்குப் படைக்கப்பட்ட ‘அன்புப் படையல்’ என்னும் கவிதையும், அண்ணல் பு.அ. சுப்பிரமணியனாரின் அன்னை மாணிக்கத்தம்மாளுக்குப் படைக்கப்பட்ட  ‘அன்புப் படையல்’ என்னும் கவிதையும், நாகர்கோவில் ஆறுமுகா தங்க மாளிகைக்குரிய வள்ளல் சுப்பிரமணியர்க்குப் படைக்கப்பட்ட ‘நன்றிப் படையல்’ என்னும் கவிதையும் என படையல் வாழ்த்து நான்காம்.

 இனி வாழ்த்துக் கவிதைகள் நவிலும் பொருளைக் காண்போம்.

குறிப்பு:

 1. சி. இலக்குவனார், சங்க இலக்கியம், ‘பொங்கல் மலர்’ 14.11.1947.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

 

 

பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran