இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: தொடர்ச்சி)
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41
தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் கவிதை பொருண்மொழீக் காஞ்சி என்னும் துறையில் பாடப் பெற்ற கவிதையாகும். முனிவர் முதலியோர் தெளிந்த பொருளைச் சொல்லுதல் பொண்மொழிக் காஞ்சித் துறையாம்.
இக்கவிதை யாம் முதுமொழிக் காஞ்சி என்று உரைப்பினும் அமையும். அறிவுடைய புலவர் அறம் பொருள் இன்பங்களில் இயல்பினை உணர்த்தியது. முதுமொழிக்காஞ்சி என்னும் துறையாம்.
‘எரிந்தி லங்கு சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருள்மொழிந் தன்று’ 126
‘பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடி புணரக் கூறின்று’ 127
என்று ஐயனாரிதனாரும்.
‘கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்’ 128
என்று தொல்காப்பியரும் கூறுவர்.
‘பல்சான்றீரே பல்சான்றீரே’129 என்னும் புறநானூற்றுப் பாடலும் ‘முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ’130 என்ற புறநானூற்றுப் பாடலும், ‘குழவி இறப்பினும் உளன்றடி பிறப்பினும்’131 என்ற புறநானூற்றுப் பாடலும் இத்துறைக்குச் (பொருள் மொழிக் காஞ்சி) சான்றாக அமைந்துள்ளன.
‘கருமவீரர் காமராசர்’ என்னும் கவிதை பதினேழு அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து.
‘தமிழ்நாடு வளரவும், தமிழ் மொழி சிறக்கவும், சாதி முறைகளை ஒழியவும், சமத்துவம் நிலைபெறவும், பசியும் பிணியும் பகையும் உலகினின்று ஒழியவும் தொண்டுகள் செய்யுங்கள். அறத்தின் வழியே சென்று வாய்மை போற்றுங்கள். இன்சொல் பேசுங்கள். உழைப்பே உயர்வைத் தரும். ஒழுக்கமே உயர்ந்த குடிப்பெருமையாகும். இன்ப வாழ்வு எவர்க்கும் உரியதாகும்.
அன்பே கடவுள்; அறமே ஒருவனுக்கு நல்ல துணை; தகுதி படைத்த சான்றோரைத் தாழ்வடைய விடாதீர். தக்கோரை உயர்பதவியில் அமர்த்தி பயன்மிகு அடைவீர். கடமையினின்றும் தவறி பேதமை நிலை பெறாதீர். இன்னாச் சொற்களை வெறுத்தொதுக்குங்கள். தெய்வத்தைப் போற்றுங்கள். பிறர்கென வாழும் பெருமைக்குணமுடையவராகத் திகழுங்கள்.
‘உழைப்பே உயர்வு, ஒழுக்கமே குடிமை
இன்ப வாழ்வு எவர்க்கும் உரித்தாம்
அன்பே கடவுள்; அறமே நற்றுணை
…………………………………
…………………………………
…………………………………
…………………………………
பிறர்க்கொன வாழும் பெற்றியில் விளங்கி
வாழியர் நெடிது; வளர்க இன்பமே’132
அழகப்ப(ச் செட்டியா)ர்
பசும்பொன் மாவட்டம்* காரைக்குடி வட்டத்திலுள்ள கோட்டையூரில் நகரத்தார் மரபில் தோன்றியவர். தாம் ஈட்டிய பொருள் அனைத்தையும் கல்விப் பணிக்கே செலவிட்டவர். கல்லூரி பல தோற்றுவித்தவர். அவர் பெயரால் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே கல்விப்பணிக்கென கோடி கோடியாய் பணம் வழங்கிய வள்ளல். தான் குடியிருந்த வீட்டையும் கொடுத்தவர். இத்தகு சிறப்புடைய அழகப்பரை கவிஞர் பாடியுள்ளர். இக்கவிதை அழகப்பா மணி (நினைவு) மலரில் இடம் பெற்றுள்ளது. நான்கு அடிகளையுடையது நேரிசை வெண்பாவாகும் இக்கவிதை.
கலைகள் பல பெருகவும், கற்றவர் எண்ணிக்கை மிகவும் தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வியாம் முதுகலை வரை கல்வி நிறுவனங்களை அமைத்துள்ளார். நாள் தோறும் அயராது பணியாற்றினர். நிலையான கல்விப் பணிகள் புரிந்த வள்ளல் அழகப்பாவைப் போற்றிப் புகழ்வோம் என்று கவிஞர் கூறியுள்ளார்.
‘கலைகள் பெருகவும் கற்றோர் மிகவும்
நிலையான தொண்டுகள் நித்தம் – உலையாமல்
ஆற்றிய வள்ளல் அழகப்பர் சீர்பரவிப்
போற்றிப் புகழ்வோம் புரிந்து’ 133
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மீதும் திருவள்ளுவர் வகுத்த நெறியில் மீதும் மிக்க விருப்புடையவர் இலக்குவனார்.
‘குலமும் குடியும் ஒன்றே
வழிபடு கடவுளும் ஒன்றே
யாதும் ஊரே யாவருங்கேளீர்
குறள் நெறி யோங்கினால் குடியர சோங்கும்’ 134
என்ற கொள்கைளே எம் வாழ்வை இயக்குவன என்று கூறுகிறார் கவிஞர். கல்விக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் யாவர்க்கும் பொதுமையாம் திருக்குறளை நன்கு பயிலுவதற்குரிய வாய்ப்பினை அளிக்கக் கல்வித் திட்டத்தில் இடமிருக்கச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் இலக்குவனார். வள்ளுவர் மீது அளவற்ற காதல் கொண்ட இலக்குவனார் குறள் வெண்பா ஒன்று பாடியுள்ளார்.
‘வள்ளுவனா ரேற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிரு ணீக்கும் விளக்கு’ 136
மக்கள் மனத்தின் கண் அமைந்துள்ள இருளைப் போக்கும் விளக்கு திருக்குறள். அவ்விளக்கை ஒவ்வொருவரும் தம் நெஞ்சத்தில் ஏற்ற வேண்டும். வள்ளுவர் ஒளியைத் தம் உள்ளத்தில் ஏற்றியவரே வாழ்த்துவராவர்.
குறிப்புகள்:
- ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை கொளு: 271
- ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை கொளு: 269
- தொல்காப்பியர், தொல்காப்பியம், நூற்பா: 1025.
- நரிவெருஉத்தலையார், புறநானூறு செ.எ. 195.
- குடபுலவயனார், புறநானூறு, செ.எ. 18
- சேரமான்கணைக்கால் இரும்பொறை, புறநானூறு செ.எ. 74.
- சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர், ப.80. அ-ள் 9-17.
- சி. இலக்குவனார், அழகப்பர் மணி மலர், ‘அழகப்பர் பாமாலை’ காரைக்குடி 1970, ப-18, அ-ள் 1-4.
- சி. இலக்குவனார், கருமவீரர் காமராசர், நாஞ்சில் புத்தக மனை நாகர் கோவில் 1956, ப-4.
- சி. இலக்குவனார், குறள்நெறி, மதுரை 1-6-1966, ப-1.
* இப்போதைய சிவகங்கை மாவட்டம்
Leave a Reply