(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu8

  பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிய கவிஞர்கள் அனைவரும் தமிழ் மொழியின் சிறப்பையும் மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத்தத்தையுமே தம்முடைய கவிதைக்குக் கருப்பொருளாகக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக புலவர் குழந்தை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, சாமி. சிதம்பரனார், வாணிதாசன், ச. பாலசுந்தரம் ஆகியோர் எழுதிய கவிதைகளைக் குறிப்பிடலாம். புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம்’ என்ற மிகப் பெரிய செய்யுள் நூலை எழுதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இராவண காவியம் கம்பன் கவிக்கு நிகரானது. புலவர்குழந்தை ஒரு தலை சிறந்த கவிஞர். அதே போல இ.மு. சுப்பிரமணியப்பிள்ளை அவர்களும் ‘வால்மீகியின் புரட்டு’ என்னும் தலைப்பில் குடியரசு இதழில் கவிதைகள் எழுதியுள்ளார்கள்.

  பார்ப்பன ஆதிக்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலை விரித்தாடியது. 1924இல் திருச்செங்கோட்டில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டியில் பிராமணர்களுக்கு ஓரிடத்திலும் பிராமணர் அல்லாதவர்க்கு வேறொரிடத்திலும் உணவு பரிமாறப்பட்டது. இதனால் மனம் புண்பட்டு வெறுப்புற்ற பெரியார் ஈ.வே. இரா. அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினார். காங்கிரசுக்கு எதிர்ப்பாக வருணாச்சரமப்பாகுபாட்டிற்கு எதிராகச் சுய மரியாதை இயக்கத்தை உருவாக்கினார். சுயமரியாதை இயக்கம் பின்னாளில் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.

  தன் மதிப்பு இயக்கத்திலும் பெரியாருடைய செயலாண்மையிலும் பற்றுக் கொண்டு பாரதிதாசனைத் தொடர்ந்து ஒரு பரம்பரையே உருவாயிற்று. பாரதிதாசன் கவிதைப் பரம்பரை என்றும் அழைக்கப்பட்டது. கவிஞர் முடியரசன், கவிஞர் சுரதா, கவிஞர் கண்ணதாசன் அப்பரம்பரையில் இடம் பெற்றுள்ளனர். பாரதிதாசனைப் போலவே இக்கவிஞர்களும் சாதிக் கொடுமைகளைச் சாடினார்கள். பகுத்தறிவுக் கொள்கையைத் தமிழ்நாடெங்கும் தம் கவிதை மூலம் பாராட்டித் தாங்களும் பாராட்டுப் பெற்றார்கள். இவர்களுள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் திரைப்படத்துறையில் தன்னிகரற்ற கவிஞராக விளங்கினார்.

‘              கனக விசயனின் முடித்தலை நெறித்து

                கல்லினை வைத்தான் சேரன் மகன்

                இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி

                இசைபட வாழ்ந்தான் பாண்டியனே’

என்று பாடினார் கண்ணதாசன். மன்னாதி மன்னன் படத்தில் புரட்சி நடிகர் எம்ஞ்சி.இராமச்சந்திரன் அவர்கள் பாடுவதாகக் காட்சி அமைந்து காண்போர் உள்ளத்தைக் கவர்ந்தது.

கவிஞர் சுரதா மறுமலர்ச்சிச் சிந்தனை பற்றிப் பாடியுள்ளார்.

‘               சம்பந்தர், அபிராமி பட்ட ரெல்லாம்

                தாய்மொழியாம் தமிழில்தான் வழிபட் டார்கள்

                எம்பெருமான், தமிழில்வழி படாதீர் என்றே

                எவரிடத்தும் இதுவரையில் சொன்ன துண்டோ’ 8

மூடக்கொள்கைகளைக் களையும் விதத்தில் மறுமலர்ச்சிக் கவிதை பாடினார் கவிஞர் முடியரசன்.

  தன்மதிப்பு இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பேராசிரியர் இலக்குவனாரும் தேவநேயப் பாவாணர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பற்றுக் கொண்டு விளங்கினார்கள். பாரதிதாசனைப் போல தன்மதிப்பு இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றவில்லை. ஆனால், பாரதிதாசன் அவர்களைப் போலவே கொள்கையில் உறுதி படைத்தவராகவும், மறுமலர்ச்சி எண்ணம் உடையவராகவும் இலக்குவனார் விளங்கினார்.

 இலக்குவனார், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கவிதை பாடும் ஆற்றல் பெற்று விளங்கினார். தாய்மொழியாம் தமிழில் புலமை பெற்றிருந்தது போல ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றிருந்தார். பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்திலும் தமிழிலும் சொற்போர் நிகழ்த்தியுள்ளார்.

‘கல்விக்கூட ஆண்டு மலரில் ஓர் ஆங்கிலக் கவிதையைத் தழுவி,

‘உலகம் நமதே உயர்ந்தோர் நாமே’ 9

என்று தொடங்கி அகவற்பா ஒன்று பாடியுள்ளார். இதனைக் கவிஞர் அவர்கள் தம் வரலாற்று நூலில் (என் வாழ்க்கைப்போர்) கூறியுள்ளார். இலக்குவனார் பிறமொழிச் சொற்கள் கலவாமல் செஞ்சொற்களைப் பெய்து கவிதைகள் இயற்றியுள்ளார். மாணவர் கழகம் நடத்திய சொற்பொழிவுக் கூட்டஙகளிலும் சொற்போர் அரங்குகளிலும் பங்கு கொண்டுள்ளார்.

  தலைமையாசிரியர் முதலியவர்களை வரவேற்கவும், மாற்றலாகிச் செல்லும் மற்றைய ஆசிரியர்கட்குப் பிரிவுரை கூறவும் நடந்த கூட்டங்களில் பாடல்கள் இயற்றிப் பொழிந்துள்ளார். 10

  இலக்குவனார் பாடல்களைக் கேட்ட ஆசிரியர் சாமி. வேலாயுதம் பிள்ளை மறுநாள் வகுப்புக்கு வந்தவுடன் இலக்குவனாரைப் பாராட்டிநீவிர் பெரும் புலவராகப் புகழ் பெறுவீர்’ என்று தம் கையிலிருந்த எழுது கோலால் தலையில் தட்டி இலக்குவனாரை வாழ்த்தியுள்ளார்.

  சங்கப் புலவர்களைப் போன்று அகவற்பாக்களையே இலக்குவனார் மிகுதியும் பாடியுள்ளார். ஆற்றொழுக்குப் போல கருத்துக்களைத் தங்கு தடையின்றி ஒழுங்குபடச் சொல்வதற்கு ஏற்ற பாவகை ஆசிரியப்பா. 11

 சங்கச் செய்யுட்களுக்கு என்று ஒரு தனிச் சிறப்புண்டு. சங்கப் புலவர்கள் பொருளுக்கே முதல் இடம் கொடுத்து செய்யுள் செய்தனர். சங்கப் புலவர்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பாடினார். பொருளே வாழ்க்கை, பொருள் படைத்ததே வாழ்வு என எண்ணினார்.

 எதுகை மோனைகளுக்கும், உவமை உருவகங்களுக்கும் இரண்டாம் இடமே அளித்தனர் சங்கப் புலவர்கள். சங்கக் காலத்தில் அகவற்பாக்களே மிகுதியும் பாடப் பெற்றுள்ளன. அகவற் பாக்களுக்கு இன்னொரு பெயர் ஆசிரியப்பா. அகவல் எனினும் ஆசிரியம் எனினும் ஒன்றே.

‘அகவல் என்ப ஆசிரியப் பெயரே’ 12

 இலக்குவனார், தம் முதல் மனைவி பட்டம்மாள் அவர்கள் இறந்த பொழுது மிகவும் துன்பமடைந்தார். ஆற்றொணா அளவினது. உள்ளத் துன்பத்தை வெளிப்படுத்து முகத்தான் அகவல் ஒன்று பாடியுள்ளார். ‘அறிந்துளோர் சொன்மினோ’ என்பது அப்பாடலின் தொடக்கமாகும். கையறுநிலையில் பாடப்பெற்றது. ‘படிப்போரை கண்ணீர் உகுக்கச் செய்யும் திறம் வாய்ந்தது. அக் கவிதையைப் படித்து பல முறை கண்ணீர் வடித்திருக்கிறேன்.’13 என்று திருமதி சிவகாமி அவர்கள் ஆய்வாளர்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்புகள்

  1. சுரதா, துறைமுகம், ‘தமிழில் அர்ச்சனை’, பாடல் எண்.7
  2. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், குறள் நெறி வெளியீடு, மதுரை 1971, பக்.56-57.
  3. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், குறள் நெறி வெளியிடு, மதுரை, 1971, ப.52.
  4. முனைவர் ச.சு. இளங்கோ, பாரதிதாசனின் கதைப் பாடல்கள் தமிழ்மணி, புத்தகப் பண்ணை, சென்னை, 1978, ப.286.
  5. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருள்-‘செய்யுளியல்’ நூற்பா-81.
  6. திருமதி சிவகாமி சிதம்பரம், `நேர்காணல்-1’ நாள்; 14.5.87.