ஒற்றைப்பத்தி

இலக்குவனார்  

 

தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரை ஆரவாரமாக இருக்காது – ஆற்றொழுக்காக – அமைதி யாக – அதேநேரத்தில் ஆழமாக இருக்கும். அதில் தமிழ் மானமும், இனமானமும் போட்டிப் போட்டுக்கொண்டு துள்ளும்.

இரண்டாண்டு, மூன்றாண்டுக்குமேல் ஒரே இடத்தில் அவர் பணியாற்றியது கிடையாது – அதற்குக் காரணம் அவரது மொழி, இன, திராவிட இயக்கக் கொள்கைச் சித்தாந்தமும், அவற்றின் வெளிப்பாடுமே!

மரம் சும்மா இருந்தாலும், காற்று அதைச் சும்மா இருக்க விடாது அல்லவா! அதேபோல, நாட்டு நடப்புகளும், போக்குகளும் அந்தத் தமிழ் மறவரின் உணர்வைச் சீண்டி சவால் விட்டுக்கொண்டே இருக்கும்.

தான் உண்டு, தன்  குடும்பம் உண்டு என்ற சிறைச் சாலைக்குள் வாழ்வதில் இன்பம் காணும் ஒரு சமூகத்தில், தன் குடும்பம்பற்றி எண்ணாது சதா நாட்டு நலனைப்பற்றியே எண்ணிய எழுஞாயிறு அவர். சொல்லியபடியே சாதி மறுப்புத் திருமணமும் செய்து கொண்டவர்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிய போது, ‘தமிழ்க்காப்புக் கழகம்’ ஒன்றைத் தொடங்கினார். (6.8.1962). ஒரு பொங்கல் பொழுதில் (15.1.1964) குறள்நெறி’ இதழையும் தொடங்கினார். வள்ளுவர்நெறியில் வாழ்க’ என்பதுதுன் அதன் குறிக் கோள்.

‘தமிழ்க் காப்புக் கழகத்தின்’’ கேடயமாக அது விளங்கியது. தமிழ்க் காப்புக் கழகத்தின் தலைவராக இலக்குவனாரும், பொதுச்செயலாளராக இளங்குமரனாரும் பொறுப்பேற்றுப் பணியாற்றினர்.

1965 இந்தி எதிர்ப்பின்போது கைதுசெய்யப்பட்டார் (முதலமைச்சர் பக்தவச்சலம்). இலக்குவனார் மீது குற்றச்சாட்டு என்ன தெரியுமா?

‘அமைச்சர்களைக் கொல்லுவதற்கு முயற்சி’ என்பது உள்ளிட்ட பதினான்கு குற்றங்கள் ஆகும்.

வழக்கின்போது வழக்குரைஞர் வைத்த குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்கது. “இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந்தவர். இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால், அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது” என்றார் அரசு தரப்பு வழக்குரைஞர் என்றால், இலக்குவனார் வன் முறையாளர் அல்லர் என்றாலும், அவரைப்பற்றிக் கூறிய குற்றச்சாட்டில், இலக்குவனாரின் வீரமும், விவேகமும், கொள்கைப் பாங்கும், வளமும் எத்த கையது என்பதை அறிந்து கொள்ள உதவும் அல்லவா!

அவரின் இயற்பெயர் இலட்சுமணன் எனும் வட மொழிப் பெயர். அவரின் ஆசிரியரான சாமி சிதம்பரனார் அதனை இலக்குவன்என்று மாற்றியமைத்தார். இலக்குவனாரின் இல்லப் பெயர் ‘கருமுத்தகம்’ என்பதாகும். அவரின் நினைவு நாள் இந்நாள் (3.9.2018).

வாழ்க இலக்குவனார்!

– மயிலாடன்

விடுதலை 03.09.2018

http://www.viduthalai.in/page1/167778.html