(இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/ 3 தாெடர்ச்சி

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3

எழுத்து நெறி :

  மொழியின் வாழ்வு எழுத்தில்தான் உள்ளது. எழுத்தைச் சிதைக்கும் பொழுது அம்மொழியும் அம்மொழி இலக்கியங்களும் சிதைந்து அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது என்பதை ஓயாமல் உணர்த்தியவர் பேராசிரியர் இலக்குவனார். “ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்தியமொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்படவேண்டும் என விதிக்கும் நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும் தடுக்கவேண்டும்” என எழுதியும் பேசியும் வந்தார். இன்றைக்கு  அயல்மொழி எழுத்துக் கலப்பும்  அதை விரைவு படுத்தும் கிரந்தத்திணிப்பும  மிகுதியாக நடைபெறுகின்றன. எனவே, நாம் நம் எழுத்தைக் காத்து, மொழியைக்காத்து, இனத்தைக் காப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

பயன்பாட்டு நெறி :

 கல்வி மொழியாகவும் கலை மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இறை மொழியாகவும் அனைத்துநிலை மொழியாகவும் தமிழ்  பயன்படுமொழியாக அமைந்தால்தான் இவ்விலக்கை நாம் அடைய முடியும் என்பதையும் பேராசிரியர் இலக்குவனார் வலியுறுத்தத் தவறவில்லை. இவற்றை நிறைவேற்றவே தமிழ்  உரிமைப் பெருநடைப் பயணத்தை அமைத்து அதனால் பாதுகாப்புச் சட்டப்படிச் சிறை சென்றது மூலம் தம் சொல்லும் செயலம் தமிழ்நலம் சார்ந்தனவே  என்பதை மெய்ப்பித்தவர் பேராசிரியர் இலக்குவனார். ஊடக மொழியாகவும் பிற பயன்பாட்டு மொழியாகவும் தமிழே இருக்க  வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனார் காட்டும் பயன்பாட்டு நெறியாகும்.

உரிமை நெறி :

  தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமையும் முதன்மையும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் மத்திய ஆட்சியிலும் சமநிலை உரிமை பெற்ற மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனாரின் பெருவிழைவு. ஆட்சிமொழி, பணித்தேர்வு மொழி, நாடாளுமன்ற மொழி, உச்ச நீதிமன்ற மொழி, அறிவியல் துறைகளின் மொழி என இந்தியும் ஆங்கிலமும் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் தமிழும் முழு உரிமையுடன் வீற்றிருக்க வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனாரது முழக்கம்.

நூல் நெறி :

 வாழ்வியல் நூலாம் தொல்காப்பியத்தையும், வாழ்க்கைநெறி நூலாம் திருக்குறளையும் கண்களாகக் கொண்டு போற்றி முழுமையாய்ப் படித்துப் பின்பற்றி வாழவேண்டும்; சங்கஇலக்கியக் காலம் நம்பொற்காலம். சங்கஇலக்கியங்களை மக்களிடையே பரப்பவேண்டும் என்பனவும் பேராசிரியரின் பேரவா. தமிழக வரலாறு எழுதுவோர் தமிழர் கருவூலமாக அமைந்துள்ள தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும் என்பதைப் பேராசிரியர் இலக்குவனார் நமக்கு இட்ட கட்டளையாகக் கொண்டு வரலாற்றுப் பாடத்திட்டங்களில் தொல்காப்பியத்தையும் பிற சங்கஇலக்கிய வரலாற்றுச் செய்திகளையும்   சேர்க்க வேண்டும்.

 புதுக்கவிதை என்ற பெயரிலும் குறும்பாக்கள் (ஐக்கூ) என்ற முறையிலும் உண்மைச் சிறப்பை உணர்த்தாத, தவறான தகவல்கள் நிறைந்த  மரபு மீறிய தமிழ் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பாடல்கள் பெருகுகின்றன. பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது.  நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும் என்னும் பேராசிரியர் இலக்குவனார் கூறும் நூல் நெறியைப் பின்பற்றினால் பண்பாட்டைச் சிதைக்காக அறிவு வளம் நிறைந்த இலக்கியங்கள் பெருகும்.

போராட்ட நெறி :

  இன்றைக்கு அரச வன்முறை என்பதே எல்லா  நாடுகளிலும் பெருகி வருகின்றது. வன்முறையை  ஒடுக்குவதாகக் கூறி, மக்களின் உரிமைகளுக்குக்  குரல் கொடுப்போரை  அழிப்பதற்கு அரசுகளே கொடுங்கோல் முறையில் ஈடுபடுகின்றன. மக்களாட்சியில் கிளர்ச்சி என்பது நோய்க்கு மருந்து போன்றதாகும். ஆட்சியாளரின் பொறுப்பை உணர்வதற்குக் கிளர்ச்சிகள்தாம் கை கண்ட மருந்தாய் உலகம் முழுவதும் காணப்பெறுகின்றன. எனவே, கிளர்ச்சிகளுக்கு எதிராக அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தக்கூடாது. கிளர்ச்சிகளுக்குக் காரணமானவற்றை நீக்கவேண்டும். அவ்வாறு நீக்க முன்வந்தால் கிளர்ச்சியாளர்கள் அரசின் உறுதிமொழிகளை  ஏற்றுப் போராட்டங்களைக் கைவிடவேண்டும் என்ற பேராசிரியரின் அறிவுரையை அரசுகள் பின்பற்றினால், ஆட்சியில் குறைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடக்குமுறையின்றி நீக்கும் நல்லரசுகள் அல்லவா எங்கும் கோலோச்சும்.

கல்வி நெறி:

  தமிழ்நாட்டில் தமிழ்மட்டுமே எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்திப் போராடியவர் பேராசிரியர் இலக்குவனார்.  பாடவழிக்குத் தெரிவே இல்லாமல் தமிழ் மட்டுமே பாடமொழியாக இருக்க வேண்டும் என வழி கூறியவர் பேராசிரியர் இலக்குவனார். ”தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், – இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் -தோன்றும் நிலை ஏற்படவில்லை.  தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.  ஆதலின் ஆங்கிலம் அகன்றால்  அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும்.  பிற நாடுகளைப் போன்றே நம் நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும்.  அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும் என்பதை நாம் உணர்ந்து தமிழையே என்றும் எங்கும் பயன்படுத்தினால்தான் நாம் உலக அளவில் முன்னணியில் இருப்போம்” என்னும் பேராசிரியர் இலக்குவனாரின் கல்வி நெறியைப் பின்பற்றினால் நாம் உலகின் முன்னரங்கில் இருப்போம் அல்லவா?

காப்பு நெறி :

  பிற மொழித்திணிப்புகளில் இருந்து தமிழைக்காக்கத்  தம் வாழ்வையே போர்க்களமாக ஆக்கியவர்  பேராசிரியர் இலக்குவனார். இந்தியைத் திணிக்கவில்லை எனக்  கூறிக்கொண்டே இந்தியையும் அதன் வழி சமசுகிருதத்தையும் மத்திய அரசு திணித்துக் கொண்டுள்ளது.  இந்தித் திணிப்பிற்கு எதிரான போர்த்தளபதியாக விளங்கிய  பேராசிரியர் இலக்குவனார், ”எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்; மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்”  என நம் கடமையை உணர்த்திச் சென்றுள்ளார். இந்தித் திணிப்பு மட்டுமல்ல! தனித்து வாழக்கூடிய நாம் பல வகைகளில பிற மொழிகளின் அடிமையாக விளங்குகிறோம். அவற்றிற்கு எதிராகவும் பேராசிரியர் இலக்குவனார் தொடர்ந்து போராடி உள்ளார். ”தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி ஆங்கிலமாம், சமயமொழி ஆரியமாம், பாட்டுமொழி தெலுங்காம், வட்டாரமொழி தமிழாம். என்னே விந்தை! தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும். தமிழர்க்குத் தேசிய மொழியும், கல்வி மொழியும், தொடர்பு மொழியும், பாட்டு மொழியும் தமிழாகவே இருத்தல் வேண்டும்” எனப் பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும்  காக்கப் பேராசிரியர் இலக்குவனார் நமக்குக் காட்டிய காப்பு நெறியைப்  பின்பற்றினால் தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின்  முப்பத்தொன்பதாம் நினைவு நாளில்  வெளியானது. நட்பு :  03/09/2012 )