இலை அறிவியல் (science of leaf )-இலக்குவனார் திருவள்ளுவன்
இலை அறிவியல் (science of leaf )
காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில் எஞ்சியுள்ள உயிர்வளி நுண்துளைகள் மூலமே வெளியேறுகிறது.
இலை என நாம் எல்லாப்பயிரினங்களின் இலைகளையும் கூற இயலாது. இலையானது தழை, (பனை)ஓலை, (தாழை)மடல், (கரும்புத்)தோகை, (வெங்காயத்)தாள், எனப் பல பெயர் பெறும். தமிழில் அறிவியல் உண்மையை அறிந்து அதற்கேற்ப இலைகளுக்குப் பெயர் சூட்டி உள்ளனர்.
மெல்லியதாய் இருப்பது இலை. எ.கா.: புளி, வேம்பு
தண்டு ஆகிய தாளை ஒட்டி நீண்டு சுரசுரப்பாய் இருப்பது தாள். எ.கா.: நெல், புல்.
பெருந்தாளாக இருப்பது தோகை. எ.கா. சோளம், கரும்பு
திண்ணமாய் இருப்பது ஓலை. எ.கா.: தென்னை, பனை.
மரபறிவியல் எடுத்துக்காட்டுகளுடன் சொல்வதானால் பின்வருமாறு சொல்லலாம். வாழை மரம், அரச மரம், ஆல மரம் முதலிய மரங்களின் இலை, இலை என்றுதான் அழைக்கப் பெறுகிறது. ஆனால், நிலத்தொடு படரும் சிறு செடிகொடி வகைகளின் இலை, பூண்டு எனக் குறிக்கப் பெறுகிறது. (சிறு சிறு பற்களாய் அமைந்த பூண்டு போன்றவை வேறு) கோரை, அறுகு இவற்றின் இலையை நாம் புல் என்றுதான் வகுத்துள்ளோம். நெல், கேழ்வரகு இவற்றின் இலை, தாள் எனப்படுவதே சரியாகும். மலையைச் சார்ந்த மரங்களின் இலையோ தழை எனப் பெறும். சப்பாத்தி, தாழை இவற்றின் இலை, மடல் என்றுதான் சொல்லப்பெற வேண்டும். நாணல், கரும்பு இவற்றின் இலையைத் தோகை என்பதுதான் முறை. தென்னை, பனை இவற்றின் இலை, ஓலை என்றுதான் அழைக்கப்பட வேண்டும். அகத்தி, பசலை இவற்றின் இலை, கீரை என்று சொல்லப் பெறுவதே செம்மையான முறையாகும்.
பயிரினங்களுக்கும் உயிர் உண்டு எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தவர்கள் அல்லவா நம் முன்னைத் தமிழ் மக்கள். எனவே, இலைகளை வேறுபடுத்திக் கண்டதில் வியப்பில்லை. இலையையும் அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப வேறுபடுத்திக் கண்டுள்ளனர். தொடக்கநிலையில் கொழுந்து, அடுத்த நிலையில் தளிர், முழு நிலையில் இலை, தளரும் நிலையில் பழுப்பு, வீழ் நிலையில் சருகு எனப் பாகுபடுத்தி உள்ளனர்.
தண்டின் உட்பகுதி உறுதியற்ற – அகக்காழ் இல்லாத – நெல், கம்பு, சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியன புல் எனப் பெறும். புல் விளையும் இடத்தைப் புலம் என்றனர்.
கொழுந்து வகை
துளிர் அல்லது தளிர். நெல் புல் முதலியவற்றின் இளந்தளிரே கொழுந்து; புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து முறி அல்லது கொழுந்து; சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் இளந்தளிரானது குருத்து ; கரும்பின் நுனிப்பகுதி கொழுந்தாடை என வகைப்படுத்தி உள்ளனர்.
இலைக்காம்பு வகை
இலையின்அடிநுனி காம்பு எனவும் தாள், தோகை இவற்றின் காம்பு அடி எனவும், ஓலையின் காம்பு மட்டை எனவும் பாகுபடுத்தப்பட்டுள்ளன.
இலைப்பரப்பில் நடு நரம்பு பல திசைகளிலும் பரவி இருக்கும்முறை
1. வலைப்பின்னல் (rediculate) எனப் பெறுகிறது.
நரம்புகள் ஏறத்தாழ சம அளவாயும் ஒன்றுக் கொன்று இணையாயும் அமைதல்
2. இணைப்போக்கு (parallel venation) எனப் பெறுகிறது.
முதல்வகையானது,
- இறகு வலைப்பின்னல் (pinnete rediculate) எனவும்
- அங்கை வலைப்பின்னல் (palmately) எனவும் பகுக்கப்பெறுகிறது.
இரண்டாம் வகையானது,
- இறகு இணைப்போக்கு ( pinnately parallel) எனவும்
- அங்கை இணைப் போக்கு(almately parralel) எனவும்
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இலை வகை
1. தனியிலை(simple leaf)
2. கூட்டிலை(compound leaf)
3. சிறப்பிலை(special leaf)
என மூவகைப்படும்.
கூட்டிலை
- சிறகுக் கூட்டிலை (pinnately compound leaf)
- அங்கைக் கூட்டிலை(palmately compound leaf)
என இரு வகைப்படும்.
சிறகுக் கூட்டிலையானது,
1. ஒற்றைச் சிறகுக் கூட்டிலை(unipinnate)
2. இரட்டைச் சிறகுக் கூட்டிலை(bipinnate)
3. முச்சிறகுக் கூட்டிலை (trypinnate)
என முப்பிரிவாகும்.
இவற்றுள் ஒற்றைச்சிறகுக் கூட்டிலை,
1. ஒரு சிற்றிலைச் சிறகுக் கூட்டிலை impari pinnate
2. இரு சிற்றிலைச் சிறகுக் கூட்டிலை paribinnete
என மேலும் பிரிக்கப்படும்.
மேலும், அங்கைக் கூட்டிலை
1. ஒரு சிற்றிலை (unipoleate)
2. இரு சிற்றிலை (bipoiate)
3. முச் சிற்றிலை (trifoliate leaf)
4. நாற்சிற்றிலை(detrapoliate)
5. பல சிற்றிலை (multipoliate)
என ஐவகையாகப் பகுக்கப்படும்.
சிறப்பிலைகள் பின்வருமாறு பிரிக்கப்படும்
1. செதில் இலைகள் (scale leaves)
2. வித்திலைகள்(seedlings)
3. செதில்கள்(scales)
4. பூவிலைகள்(floral leaves)
5. புறவிலைகள் (dorciventral)
6. ஓரக இலைகள்(isobilatrel)
7. மைய இலைகள்(centeric)
8. தண்டிலைகள் (பொதுஇலைகள்)(plyageleaves)
செதில்கள்
1. பூவடி(ச் செதில்)(breaket)
2. பூக்காம்பு(ச் செதில்) (braktiyate)
3. இலையடி(ச் செதில்) (stipulate)
என மூவகையாகும்.
இலையின் வேறு வகைப் பாகுபாடுகளை அடுத்துப் பார்ப்போம்.
இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய அறிவியல் – புதன்கிழமை, ஆவணி 27, 2043 16:50 இதிநே
Wednesday, September 12, 2012 16:50 IST
Leave a Reply