மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் காலம் இது. ஆற்றல் வாய்ந்த இருபால் இளைஞர்கள், நாட்டு மக்களின் உரிமைக்காகத் தங்கள் உயிர்க்கொடையை அளித்ததை நினைவுகூர்ந்து போற்றும் காலம் இது. உலகின் தொன்மையான இனம், தனக்கே உரிய நிலப்பரப்பில், அடிமைப்பட்டு, அல்லல்பட்டு, துன்பப்பட்டுத், துயரப்பட்டு, நிலம் இழந்து, வளம் இழந்து, உற்றார் உறவினர் இழந்து, தாங்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும் என்பதற்காகத் தத்தம் உயிர்களை இழந்தவர்களைப் போற்றும் வாரம் இது. நாமும் ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கான வீர வணக்கத்தைச் செலுத்துவோம்!
 அதே நேரம், இத்தகைய நாள் வந்ததன் காரணம் என்ன?  தாய்த்தமிழ் மக்கள் உரிமை உணர்வு இன்றி, ஒற்றுமை உணர்வு இன்றி, உரியவாறு உறுதுணையாக இல்லாமல் போனதுதானே! நாம் தொடக்கத்திலேயே தமிழ் ஈழ விளக்கு அணையாவண்ணம் செயல்பட்டிருந்தோம் என்றால், உயிர் ஈகியர் பெருகிய சூழல் உருவாகியிருக்காது அல்லவா?

 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னரும்கூட நாம் உணர்ந்து திருந்தவில்லையே! அவ்வாறு நாம் திருந்தியிருந்தால் இனப் படுகொலையாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்களே! தமிழ் ஈழ நாடு தனக்குரிய ஏற்பிசைவைப் பெற்றிருக்குமே! உலகின் பல நாடுகள் தமிழ் ஈழப் பாதையில் அணி வகுக்க ஆயத்தமாக இருந்தாலும், இந்தியத் தடைதானே அவர்களைக் கட்டிப்  போட்டிருக்கின்றது. பன்னாட்டு அவையே சிங்களக்  கொடுங்கோன்மைக்குத் துணையாகச் செயல்பட்ட நிலை இந்தியாவால் தடுக்கப்பட்டிருக்குமே! மிகச்சிறிய எதிர்ப்பைக்கூட இந்தியா காட்டும் சூழல் இன்னும் வரவில்லையே! வந்திருந்தால், தமிழினப் படுகொலையாளிகள் நாட்டில் தமிழினப்படுகொலைஞன் தலைமையில் பொதுவளஆய மாநாடு நடக்க விட்டிருப்போமா?

இனப்படுகொலையில், படையணியையும், படைக்கருவிகளையும், படை  ஊர்திகளையும் கொத்துக் குண்டுகளையும் ஏவுகணைகளையும் பிறவற்றையும் வாரி வழங்கிய, இந்தியாவிற்குப் பெரும் பங்கு உள்ளதை அனைவரும் அறிவர். இருந்த போதும்  இனியாவது இந்தியா மனம் மாறும் என்னும் நம்பிக் கையில், இம்  மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டில் பன்முனை எதிர்ப்புக்குரல் எழுந்ததே!  உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தனவே! ஆனால் பயனில்லையே!

மொரீசியசு நாட்டுத் தலைமையாளர் நவீன் இராம்கூலம்  தாம் கொள்கை வழி வாழ்பவராகக்கூறிப் பொதுநலஆய மாநாட்டில் பங்கேற்கவில்லை. இதனால் 2015 -17 இல் இவ்வமைப்பின் தலைவராக இருக்கும் வாய்ப்பையும் துறந்துள்ளார்.

கனடாத் தலைமையாளர் இசுடீபென் ஆர்ப்பெர் (Stephen Harper) இனப்படுகொலை நாட்டில் நடைபெறும் இம் மாநாட்டில் பங்கேற்காததுடன்  இலங்கைக்கு இந்தியா உடந்தையாக உள்ளதையும்  கண்டித்துள்ளார்.

இந்தியாவின் நிலை என்னவாக இருந்தது? கட்சித்தலைமை கூறியும்  மன்மோகன்சிங்கு இலங்கை செல்ல மறுத்ததாயும், துணைக்குடியரசுத் தலைவர் முகம்மது அமீத் அன்சாரி அவருக்கு மாற்றாகப் பங்கேற்க மறுத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. இவை உணர்வின் அடிப்படையில் என்றால் மகிழலாம். அன்சாரியின் மறுப்பு உணர்வின் அடிப்படையில் அமைய வாய்ப்பு உள்ளது. ஆனால், மன்மோகன் தன் சார்பாக – இந்தியா சார்பாக – மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் பங்கேற்கச் செய்ததால், அவர் செய்கை மதிப்பிழந்ததாகப் போகிறது. சிலர் தாக்கப்பட்டனர் என்பதற்காக ஆசுதிரேலியாவில்  நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்காததுடன் அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவித்த இந்திய அரசு, இலங்கையில் பங்கேற்காததன் காரணத்தை வெளிப்படையாக அறிவிக்காமையால்,  இதனைப் போற்ற வேண்டிய தேவையில்லை என்பதை நினையுங்கள்.!

மாநாட்டிற்குச் சென்றால்தானே தமிழர் சிக்கல் குறித்துப் பேச முடியும் என்றெல்லாம் இங்குள்ள  கிணற்றுத் தவளைகள் கத்தின. இவற்றின் மூக்கை அறுக்கும் வகையில் – மண்டியிடாத குறையாகத் தாழ்பணிந்து  பக்சேவை வணங்கிய சல்மான், தமிழக எதிர்ப்பிற்கு எதிராகத்தான் கருத்தைத்  தெரிவித்துள்ளார். ஆனால், இங்கிலாந்து தலைமையாளர் கேமரூன்  ஈழத்தமிழர்களைச் சந்தித்ததுடன் மாநாட்டிலேயே பக்சேவிற்கு எதிராகவும் குற்ற உசாவலுக்கும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும் ஆதரவாகவும் பேசியுள்ளார். இலீ இரியனான் (Lee Rhiannon) என்னும் பசுமைக்கட்சியின் பேராளர், ஆசுதிரேலிய நாடாளுமன்றத்திலேயே இராசபக்சே அரசில் தமிழ்மக்கள்  துன்புறுத்தப்படுவது குறித்துத் தெரிவித்துள்ளார். 28 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்காமையின் மூலம், பாதிக்கு மேற்பட்ட நாடுகளின் புறக்கணிப்பை, இலங்கை சந்தித்துள்ளது. ஆனால் இதை உணர்ந்தும் இந்தியா வாய்மூடி அமைதியாக இருப்பதுடன் கொலைகாரச் சிங்களத்திற்கு உறுதுணையாகவே உள்ளது.

‘நியூயார்க்கு டைம்சு’ என்னும் இதழின் ஆசிரியர் உரையில்,  இனப்படுகொலை புரியும் இலங்கை அரசு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபோல் உலக நாடுகளின் இதழுரைகள் சிங்களக்கொடுமைகளை உணர்த்தியும் நன்கறிந்த இந்தியா, சிங்களத்திற்குக் கைகட்டி அடிபணியவே விரும்புகிறது. ஆனால்,  மாநாடு முடிந்தபின் சிங்கப்பூரில் கூறுகிறார் சிதம்பரம்,  இலங்கைப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென! இதனை இந்தியா, மாநாட்டில் பேசியிருக்கக்கூடாதா? இப்பொழுது அவர் கூறுவது ஏன்?  தேர்தல் பாசம் தவிர வேறொன்றுமில்லை என்பதை மக்கள் அறிவார்கள். பேராயக்கட்சியில் சிலர் தமிழ்நாட்டில் வந்து ஈழ நேயத்துடன் பேசுவதாக நடிப்பது தேர்தல் நேயத்தின் வெளிப்பாடே தவிர, வேறொன்றுமில்லை! இனப்படுகொலைஞனின் வரவேற்பைப் பெற்ற பா.ச.க,  -நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாகத் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள்  தீர்மானம் கொண்டு வர முயன்றபோது, அதைத் தடுப்பதற்காக வேறுவகையில் திசை திருப்பிய பா.ச.க., – இன்று ஈழ நேயத்துடன் பேசுகின்றது. இவ்வாறு பேசுபவர்கள் உண்மையிலேயே மனம் மாறிப்  பேசினால் வரவேற்கலாம்! ஆனால், மனம் மாற்றம் உண்மையெனில் வெளிப்படையாகத்  தாங்கள் செய்ய எண்ணியுள்ளது குறித்து  எழுத்து மூலமாகத்  தெரிவிக்க வேண்டும்.

 நாடாளுமன்றத்தில் தமிழ்ஈழ ஏற்புத் தீர்மானத்தை நிறைவேற்றுவதாகவும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இனப்படுகொலையில் இந்தியாவின் உடந்தையை வெளிப்படுத்துவதாகவும்  தமிழ்ஈழ அரசிற்கான ஒத்துழைப்பை நல்குவதாகவும் தெரிவிக்க வேண்டும். இவை,  இவர்களுக்கு மட்டுமல்ல! தேர்தல் நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்! படுகொலை புரிந்து விட்டுத் தப்பிப் பிழைத்தவர்களுக்கு எச்சில்  பண்டம் எறிந்துவிட்டு மறுவாழ்வு தருவதாகக் கூறும் புரட்டை இங்குள்ளவர்கள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழகச் சட்ட மன்றத்தின் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கச் செய்ய வேண்டும். பதவியில் இருக்கும் பொழுது ஒன்றும் இல்லாத பொழுது மற்றொன்றுமாகப் பேசும் கட்சிகளும் மனம் திருந்தித் தமிழர் நலனுக்காகவும் ஈழத்தமிழர் விடுதலைக்கும் மறுவாழ்விற்காகவும் உழைப்பதாக உறுதி அளிக்க வேண்டும்.

அரசியல் கட்சியினரே! நீங்கள் தேர்தலுக்காக நடிக்க வேண்டா! மனித நேயத்துடன் சிந்தியுங்கள்! உலகின் தொன்மையான இனம், மிக அண்மையில் கூட்டம் கூட்டமாகப் படுகொலைகளுக்கு ஆளான பின்னும் அமைதி காப்பது குற்றம் என்பதை உணருங்கள்! இந்தியாவில் தமிழ்நாடும் தமிழ் மக்களும்  அடங்குவர் எனில், தமிழ்ச் சொந்தங்களை இனியாவது காக்க வேண்டும் என்பதை உணருங்கள்!

எனவே இனி வேண்டா உங்களின் நாடகம்! தேர்தல் நேயத்தை மறந்து மனித நேயத்தைப் பின்பற்றுங்கள்!

அகர முதல

இதழ் 2

கார்த்திகை 8, தி.பி.2044

நவம்பர் 24, கி.பி.2013