உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை
உ.சா.வின் என் சரித்திரம்
பதிப்புரை
ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை
கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை
கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!
– இரா.இராகவையங்கார்
தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது.
இந்நூலைக் கற்றால் ‘பெருக்கத்து வேண்டும் பணிதல்’ என்ற இலக்கணத்துக்கு இதுதான் சரியான இலக்கியம் என்ற உண்மை தெளிவாகும்.
பேதங்களுக்கு அப்பாற்பட்ட போதம்தான் தமிழ்ஞானம் என்பது இந்நூலின் தொகுமொத்தப் பொருள் என்றால் அது மிகையாகாது.
‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்ற தொடரை விளக்குவதற்காக இவர் மண்ணுலகில் பிறந்தார் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.
அறிஞர் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரமும் மகாத்மா காந்தி அவர்களின் சத்திய சோதனையும் ஒரே தரம் உடையவை. இவற்றின் ஒவ்வோரெழுத்தும் வாய்மை நிரம்பிய வைர எழுத்துகள்.
என் சரித்திரம் கற்றால் தமிழார்வம் வரும். வந்த தமிழார்வம் வளரும்.
பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுள் ஐந்தும், மூன்று பெரும் காப்பியங்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட பிற இலக்கியங்களும், இலக்கண நூல்களும் நின்று நிலவுவதற்குக் காரணம், அறிஞர் உ.வே.சா. அவர்களின் அயரா உழைப்பே என்பதை, இந்த மன்பதை அறியும். அந்த நூல்களைக் கற்கும் முன், ‘என் சரித்திரம்’ என்னும் இந்த நூலைக் கற்க வேண்டும். இதனைக் கற்றால் தமிழ் நூல்களை அச்சுக்குக் கொண்டுவர அவர்பட்ட இன்னல்கள் புரியும். ‘என் சரித்திரம்’ அறிஞர் உ.வே.சா. அவர்களின் 150ஆவது ஆண்டில் ஆறாம் பதிப்பாக வெளிவரத் திருவருட் சக்தி அருள்பாலித்திருக்கிறது.
தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்களின் பதிப்புப் பணி அதே பாணியில் இந்நூல் நிலையம் வாயிலாக, அறிஞர் உ.வே.சா. அவர்களின் திருமகனார் திரு. சா. கல்யாண சுந்தரம் (ஐயர்) அவர்களாலும், அறிஞர் உ.வே.சா.அவர்களின் பெயரனார் திரு.க.சுப்பிரமணிய( ஐய)ர் அவர்களாலும் கொள்ளுப் பெயரனார் திரு.சு.வேங்கடகிருட்டிணன் அவர்களாலும் தொடர்வது மிக்க மகிழ்ச்சிக்குரியதாகும்.
அச்சில் வெளிவராத தமிழ்நூல்கள் இன்னமும் இருக்கின்றன. ஓலையில் இருக்கும் அவற்றை அச்சுத் தமிழ்ச் சோலையில் உலாவரச் செய்ய முயலும் தமிழ்த் தொண்டர்களை மேலும் உருவாக்க இந்நூல் உதவ வேண்டும் என எல்லாம் வல்ல திருவருட் சக்தியை இறைஞ்சுகிறேன்.
நிதி அறியோம் இவ்வுலகத்து ஒருகோடி
இன்பவகை நிமித்தம் துய்க்கும்
கதி அறியோம் என்றுமனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே
— மகாகவி பாரதி
அறிஞர் உ.வே.சா. நூல்நிலையம்
சென்னை -90
ம.வே.பசுபதி, காப்பாட்சியர்
Leave a Reply