(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 தொடர்ச்சி)

 

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின்

மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன்

2/3

 

நீங்கள் செயகாந்தன் தவிர வேறெந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்புச் செய்துள்ளீர்கள்?

இதுவரை நாற்பதுக்கும் மேலான நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். அசோகமித்திரன் படைப்புகள், கலைஞரின் குறளோவியம், அப்புறம் அண்மையில் உ.வே.சா., அவர்களின் என் சரிதம்ஆகியவை குறிப்பிடத்தக்கன.

உ.வே.சா-வின் என் சரிதம்அரிய பணியாக இருக்கும் அல்லவா?

ஆம்! அஃது ஏறக்குறைய ஆயிரம் பக்கங்கள் கொண்டது. சாகித்திய பேராயத்தின்(Sahithya Academy) வேண்டுகோளுக்கு இணங்க முடித்துள்ளேன். விரைவில் வெளிவர இருக்கிறது. அற்புதமான நூல்! உலகிலுள்ள தன்வரலாறுகளை வரிசைப்படுத்துவோமாயின், அவற்றுள் முதல் நான்கைந்துக்குள் ஒன்றாக இந்த மூலநூல் இருக்கும் என்பது என் கணிப்பு. தமிழின் சுவையோடு அந்த நூலில் அவர் சுட்டும் குமுகாயப்(சமுதாயப்) பழக்க வழக்கங்கள் யாவும் சித்திரமாக விளக்கப்பட்டுள்ளன.

உங்களுடைய கவிதை மொழியாக்க முயற்சிகள் குறித்துச் சொல்லுங்களேன்!

நீண்ட நாட்களாக, கவிதைகளை மொழிபெயர்க்கும் எண்ணமற்றவனாகவே இருந்தேன். பின்னர், கவிதை மொழியாக்கம் வழியில் என்னை உந்தியவர் என் நண்பர் முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம். அவர் தன்னுடைய சில கவிதைகளை மொழியாக்கம் செய்து தர வேண்டியதன் காரணமாக, அவரது நாற்பது கவிதைகளை மொழியாக்கம் செய்து கொடுத்தேன். அது ஒரு நூலாக வந்துள்ளது. பின்னர், எனக்கே அந்த நூல் உந்துதலாக அமைந்ததால், பல கவிதைகளை – ஏறக்குறைய 800 கவிதைகளை – மொழியாக்கம் செய்துள்ளேன்.

அவை குறித்து மேலும் சில விவரங்கள் அறிய ஆவல்!

சிற்பி அவர்களின் கவிதைகள், தமிழன்பன் கவிதைகள், உமா மகேசுவரி அவர்களின் கவிதைகள், புவியரசன் அவர்களின் ‘கையொப்பம்’ என்ற தொகுப்பு (இத்தொகுப்பு சாகித்திய பேராய விருதைப் பெற்றதால் பேராயமே அத்தொகுப்பை மொழிபெயர்க்க வேண்டியது) போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதற்குப் பின்னர், புதிய கவிதைத் தொகுப்பு  [‘நியூ பொயட்டிரி கலெக்சன்’ (New Poetry Collection)], உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இன்றைய தமிழ்க்கவிதை [‘தமிழ் பொயட்டிரி டுடே’ (Tamil Poetry Today)] , தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சங்க இலக்கியத்  தொகையிலிருந்து  பெண் புலவர்கள் [‘தமிழ் விமன் பொயட்சு பிரம் தி சங்கம் கலெக்சன்’ (Tamil Women Poets from the Sangam Collection)] போன்ற தலைப்புகளில் பல தொகுதிகளை மொழியாக்கம் செய்துள்ளேன்.

சங்கத்தமிழ்க் கவிதைகளின் மொழிபெயர்ப்புகளாக உங்கள் பணி குறித்து விவரமாகக் கூறுங்களேன்!

மேற்சொன்ன, சங்கத்தமிழில் பெண் கவிஞர்கள் சிலரின் கவிதைத் தொகுப்பைத் தவிர, சங்கப் பெண்புலவர்கள் [‘சங்கம் விமன் பொயட்சு’ (Sangam Women Poets)] என்ற தலைப்பில் அண்மையில் ஒரு படைப்பை முடித்துள்ளேன். 40 பெண் கவிஞர்களின் ஒட்டுமொத்தச் சங்கக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பான இந்த நூலை பு.நூ.பு.நி. (என்.சி.பி.எச்.) வெளியிடுகிறது. இந்த நூல் குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஏதேனும் மொழியாக்கம் செய்துள்ளீர்களா?

இல்லை. அவ்வளவாக இல்லை. ஒரே ஒரு நூலை மொழிபெயர்த்துள்ளேன். அது மிகவும் அற்புதமான நூல்! மணி பௌமிக் என்ற அமெரிக்கவாழ் இந்திய  எழுத்தாளர் எழுதிய ‘குறியீட்டுப்பெயர் கடவுள்’ (Codename God) என்ற நூல். அந்த நூல் அண்டங்கள் குறித்த கருத்துகளைக் கொண்ட நூல். மணி பௌமிக்கு அவர்கள் கதிரைப்(laser) பண்டுவத்தில்(சிகிச்சையில்) மிகவும் கைதேர்ந்த அறிவியலாளர். அந்தப் பண்டுவ முறையில் அவர்தான் தலைசிறந்தவர் எனக்கூடச் சொல்லலாம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மணி பௌமிக்கு, தன்னுடைய உழைப்பால் செல்வத்தின் உச்சியைக் கண்டவர். பின்னர் உலகைப் புரிந்து கொள்ளும் அவாவினால் தன்னுள் உள்நோக்கிய பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். அந்தப் பயணத்தின் சாரமே இந்த நூல். இந்நூல் அண்டம் மற்றும் கோட்பாட்டியல்(தத்துவம்) சாரத்தைச் சொல்லும் நூல். வேறெவரோ சொல்லி மணி பௌமிக் என்னைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அந்த நூல் இலாசு ஏஞ்சல்சு (Los Angeles) ஏட்டின் சிறந்த நூல்கள் வரிசையில் பல மாதங்கள் இடம்பெற்ற நூல். நான் அந்த நூலைப் படித்திருக்கிறேன்; படித்து வியந்திருக்கிறேன் என்றாலும், மொழிபெயர்ப்பது என்பது மிகவும் கடினமான செயலாகவே அமைந்தது. ஆங்கில மூலத்தைப் பெங்குவின் பதிப்பகமும், என்னுடைய தமிழ் மொழியாக்க நூலைக் கவிதா பதிப்பகமும் வெளியிட்டுள்ளன.

உங்களின் மற்றொரு படைப்பான “சிந்தனை ஒன்றுடையாள்” என்கிற நூல் குறித்துச் சொல்லுங்களேன்!

நான் ஏழாம் வகுப்பு வரையிலும்தான் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்றேன். எட்டாம் வகுப்பிலிருந்து சமற்கிருதத்தை மொழியாகக் கொண்டேன். அதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, தமிழ் என் தாய்மொழி; அதை நான் வளர்த்துக் கொள்ளல் இயலும். சமற்கிருதம் வேறு மொழி. அதையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. இரண்டாவது, தமிழ்மொழிக்கு இணையாக சமற்கிருதமும் இந்தியப் பண்பாட்டின் கண்ணாடியாக இருந்து வருகிறது. இக்காரணங்களால் நான் இரு மொழிகளின்பாலும் ஆர்வம் கொண்டேன். இராமகிருட்டிணா இல்லத்தில் வளர்ந்ததால், எனக்குப் பல்வேறு சமற்கிருத நூல்களின் அறிமுகம் இருந்தது. கீதையின் ஏழெட்டுப் பகுதிகள் எனக்கு மனப்பாடமாக முன்னர் தெரிந்திருந்தன. இப்பொழுது அந்த மனமும் இல்லை; பாடமும் இல்லை. எனினும், அவ்வப்பொழுது படிப்பேன். தமிழிலக்கியங்களைத் தேடித் தேடிப் படிப்பேன். என்.வி.நாயுடு என்பவரின் சிறிய நூலை ஒருமுறை படிக்க நேர்ந்தது. அதில் சமற்கிருத மேற்கோள்களைத், தேவநாகரி எழுத்தில் இட்டு, அவற்றின் பொருளைத் தமிழில் வழங்கியிருந்தார். அது எனக்கு வியப்பாக இருந்தது. அதுவே காரணமாகிச், சமற்கிருதத்தின் அழகான மேற்கோள்களைத் திரட்டித் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அவ்வாறு செய்யும்பொழுது தமிழிலும் சமற்கிருதத்திலும் ஒரே முறையான சிந்தனைகளைக் காண நேர்ந்தது. பின்னர் நான் அந்த வழியில் எழுதியதே ‘சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற இந்நூல்.

(தொடரும்)

இலக்கிய வேள் சந்தர் சுப்பிரமணியன்

இலக்கிய வேல், சூலை 2017

தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்