(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 2/4 தொடர்ச்சி)

உ.வே.சா.வின் என் சரித்திரம் 3

அத்தியாயம் 1 – எங்கள் ஊர்

கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா சோசியர் மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும் (இ)ரிசபம் போன்ற நடையையும் முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரசுதேதார் மூலமாக அவரைச் சில விசயங்கள் கேட்கலானார்.

கலெக்டர் :-உமக்குப் படிக்கத் தெரியுமா?
சோசியர் :-தெரியும்.
கலெக்டர் :-கணக்குப் பார்க்கத் தெரியுமா?
சோசியர் :-அதுவும் தெரியும். நான் சோசியத்தில் நல்ல பழக்கமுடையவன்; அதனால் கணக்கு நன்றாகப் போடுவேன். கலெக்டர் :- கிராமக் கணக்கு வேலை பார்ப்பீரா?
சோசியர் :-கொடுத்தால் நன்றாகப் பார்ப்பேன்.

அவர் கம்பீரமாக விடையளிப்பதைக் கேட்ட துரைக்கு சந்தோசம் உண்டாகி விட்டது. சோசியர் நன்றாக அதிகாரம் செய்யக்கூடியவரென்றும், சனங்கள் அவருக்கு அடங்குமென்றும் அவர் நம்பினார். உக்கடை (உட்கிடை) யென்னும் வட்டத்தின் கருணம் தம் வேலையைச் சரியாகப் பாராமையால் கலெக்டர் அவரைத் தள்ளிவிட்டு வேறொருவரை நியமனம் செய்வதற்காக யோசித்துக் கொண்டிருந்த சமயம் அது. அந்த வேலையில் *அண்ணா சோசியரை அவர் நியமித்து விட்டார். அக்காலத்தில் வேலைக்குப் போட்டி இராது. ஆளைப் பார்த்து, வாட்ட சாட்டமாக இருந்தால் உத்தியோகங்களைக் கொடுத்து விடுவது வழக்கம்.

கலெக்டருடைய கண்ணைக் கவர்ந்த தேகக் கட்டு அண்ணா சோசியர் ஒருவருக்குத்தான் அமைந்திருந்ததென்று எண்ண வேண்டா. ஒவ்வொருவரும் அவரைப் போலவே தேக வன்மை பொருந்தியவராக இருந்தனர். இரண்டு வேளைகளே உண்டாலும் அவர்கள் உண்ணும் உணவின் ஒவ்வோர் அணுவும் உடம்புக்குப் பலத்தைத் தந்தது.

உத்தமதானபுரத்தில் தச்சர், கொல்லர், தட்டார், வலைஞர், நாவிதர், வண்ணார் என்பவர்களுக்கும் மான்யங்களுண்டு. அவர்கள் அவற்றை அனுபவித்துக்கொண்டு தத்தம் வேலைகளை ஒழுங்காகப் பார்த்து வந்தார்கள். நாவிதர்களில் வைத்தியத்திற் சிறந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் அன்புடன் நோயாளிகளுக்கு மூலிகைகளாலும் வேறு சரக்குகளாலும் செய்த மருந்துகளைக் கொடுத்து நோயைப் போக்குவார்கள். இதற்காக அவர்கள் வாங்கும் ‘பீசு’ நாலணாவே. ஒருவர் (இ)ரண சிகிச்சையிலும் பழக்கமுடையவராக இருந்தார், அவரிடம் வைத்திய நூல்கள் பல இருந்தன. பல வியாதிகளின் சிகிச்சைகள் புத்தகங்களில் இருந்தனவே யொழிய அந்த மருத்துவர் அனுபவத்தில் கண்டு உணரும்படி அவ்வியாதிகள் மனிதர்களைப் பீடிப்பதில்லை.

மூப்பச் சாதியார் முதலிய குடியானவர்களிற் பலர் அந்தணர்களுடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு அவர்களுடைய மனைக் கட்டுகளில் குடியிருந்து வந்தனர். அவர்கள் அந்த நிலங்களைக் கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்து வந்தார்கள். தம் யசமானர் வீடுகளில் அவசியமான வேலைகளையும் குறைவின்றிச் செய்து வந்தனர். இவற்றிற்காக அவர்களுக்கு அந்தணர்கள் எல்லா வசதிகளையும் கொடுத்து ஒரு கவலையும் ஏற்படாமல் பார்த்து வந்தார்கள். அதனால் அவர்கள் அடைந்த திருப்தி பெரிதாக இருந்தது. அவர்கள் வஞ்சகமின்றிப் பாடு பட்டனர். நிலத்தின் சொந்தக்காரரைவிட அவர்களுக்கே பூமியில் சிரத்தை அதிகமாக இருந்தது. இருசாராரும் மனவொற்றுமையும் அன்பும் உடையவர்களாகி ஒருவருக்கொருவர் இன்றியமையாத நிலைமையில் வாழ்ந்து வந்தனர்.
——-
* அவர் பரம்பரையினர் இப்போது உத்தமதானபுரத்தில் கிராம முனிசீபாக இருக்கிறார்.
—–

வேறு சில குடியானவர்கள் தம்முடைய சொந்த நிலத்தைச் சாகுபடி செய்துகொண்டு வாழ்ந்தார்கள். இவர்களால் வணங்கப் பெறும் கிராம தேவதைகளின் கோயில்கள் சில உண்டு. எல்லாக் கோயில்களிலும் ஊராருடைய ஒற்றுமையினால் உற்சவங்கள் நன்றாக நடைபெற்றன.

இவ்வூரைச் சூழ மிகவும் சமீபமாக நான்கு அக்கிரகாரங்கள் உண்டு. தென் கிழக்கு மூலையில் கோட்டைச்சேரி யென்பதும், தென்மேற்கில் மாளாபுரமென்பதும், அதற்கு மேற்கே கோபு ராசபுர மென்பதும், வடமேற்கே அன்னிகுடி யென்பதும் உள்ளன. கோட்டைச் சேரியில் வேத சாத்திரங்களிற் பரிச்சயமுள்ள வடகலை சிரீவைசுணவர்கள் வாழ்ந்து வந்தனர். மாளாபுரத்தில் வித்துவான்களாகிய சிரீவைசுணவர்களும், அட்டசகசுரம் வடம ரென்னும் இருவகை சுமார்த்தர்களும் இருந்தனர். கோபுராச புரத்தில் தஞ்சாவூர் அரச குருவின் உறவினரான மகாராட்டிரப் பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களைப் பண்டிதர்களென்று வழங்குவர். அவர்கள் செல்வர்களாதலின் அன்னதானம் செய்து வந்தார்கள், அன்னிகுடியில் தெலுங்குப் பிராமணர்கள் வசித்தனர். அவர்களிற் பலர் சங்கீதத்திலும் பரத சாத்திரத்திலும் மந்திர சாத்திரத்திலும் மிகுந்த திறமையுடையவர்களாக விளங்கினார்கள். சங்கச் செய்யுட்களில் அன்னியென்னும் பெயருடைய ஓர் உபகாரி கூறப் பெறுகிறான். இவ்வூர் அவன் பெயரால் அமைக்கப் பெற்றதென்று கூறுவர்.

உத்தமதானபுரத்துக்குக் கிழக்கே நல்லூரென்ற தேவாரம் பெற்ற சிவதலம் இருக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய அமர்நீதி நாயனார் அவதரித்த தலம் அது அங்கே கோயில் ஒரு கட்டு மலையின் மேல் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து பார்த்தால் அந்தக் கோயில் நன்றாகத் தெரியும். வடமேற்கில் திருப்பாலைத்துறை என்ற தேவாரம் பெற்ற தலம் உள்ளது. அங்கே பேசுவாக்களென வழங்கும் மகாராட்டிரப் பிராமணச் செல்வர்கள் இருந்தார்கள்.


இந்தக் கிராமங்களினிடையே, சோம்பலை அறியாத சனங்களை உடையதாய், நவீன நாகரிகத்தின் வாசனை சிறிதளவும் வீசாமல், நிலமகள் தரும் வளத்தை யாவரும் பங்கிட்டு உண்ணுவதற்கும் அமைதியான வாழ்க்கையை நடத்துவதற்கும் இடமாக விளங்கியது எங்கள் ஊர்.

உத்தமதானபுரம் ஒரு சிறிய கிராமந்தான்; ஆனாலும் அந்த ஊர் எங்கள் ஊர்; என் இளமைக் காலத்தின் இனிய நினைவுகளையும், விரிந்த உலகத்தை அறியாத என் இளங் கண்களுக்குக் கவர்ச்சியை அளித்த தோற்றத்தையும் கொண்ட என்னுடைய ஊர். வேறு எந்த ஊரும் நகரமும் என் உள்ளத்தில் அதன் தானத்தைப் பெறுவதென்பது சாத்தியமா?

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.