(உ.வே.சா.வின் என் சரித்திரம் 20  தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 12 தொடர்ச்சி

அரியிலூர் ஞாபகங்கள்


இங்குள்ள விட்ணு கோயில் பெரியது. பெருமாளுக்கு வேங்கடேசப் பெருமா ளென்பது திருநாமம். கோயிலின் மகா மண்டபத்தில் மகா விட்ணுவின் பத்து அவதாரங்களின் திருவுருவங்களும் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அம்மண்டபத்திற்குத் தசாவதார மண்டபமென்ற பெயர் வழங்குகின்றது. அங்கே மூர்த்திகளெல்லாம் மிக அழகாக அமைந்திருக்கின்றன.

இங்கே ஒரு சிவாலயமும் இருக்கிறது. சிவபெருமானுக்கு ஆலந்துறை ஈசரென்றும் அம்பிகைக்கு அருந்தவநாயகி யென்றும் திருநாமங்கள்  வழங்குகின்றன. சமீன்தார்கள் குலதெய்வமாகிய ஒப்பிலாதவளென்னும் துருக்கையின் கோயிலும், காமாட்சியம்மன் கோயில், விசுவநாதசுவாமி கோயில். சஞ்சீவிராயன் கோயில், காளிங்க நர்த்தனர் கோயில், அனுமார் கோயில், முதலிய வேறு கோயில்களும் இவ்வூரில் இருக்கின்றன. என் இளமையில் இவ்வளவு கோயில்களிலும் சனங்கள் ஈடுபட்டு வழிபட்டு வந்தனர்.

இந்த ஊரில் அந்தணர்களில் வைசுணவர்கள், சுமார்த்தர்கள், மாத்துவர்கள் என்னும் மூன்று மதத்தினரும் வாழ்ந்தனர். சுமார்த்தர்களில் எங்கள் உறவினர் பலர் உண்டு. வேறு சாதியினரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் வசித்தனர். கார்காத்த வேளாளச் செல்வர்கள் இவ்வூரில் அதிகமாக இருந்தனர். அவர்கள் தெய்வபக்தியும் பரோபகார சிந்தையும் மிகுதியாக உடையவர்கள். கோயில்களில் நித்திய நைமித்திகங்கள் அரண்மனையாருடைய ஆதரவில் முன்பு நடந்து வந்தன நாளடைவில் சமீன்தாரது செல்வநிலை குறையவே அவ்வேளாளச் செல்வர்கள் அக்கடமையை மேற்கொண்டனர்.

காலை நேரத்தில் குறிஞ்சான் குளத்துக்குப் போய்ப் பார்த்தால் கார்காத்த வேளாளச் செல்வர்களாகிய ஆடவரும் பெண்டிரும் நீராடிவிட்டுத் தூய்மையே உருவாக அமர்ந்து பூசை செய்வதையும் தியானம் செய்துகொண்டிருப்பதையும் காணலாம். அப் பக்கங்களில் அத்துவைத சாத்திரப் பயிற்சி அதிகமாகப் பரவியிருந்தது. பல துறவிகள் அங்கங்கே மடம் அமைத்து வேதாந்த சாத்திரங்களைப் பாடஞ் சொல்லியும் தியானம் செய்தும் அடக்கமாகக் காலங்கழித்து வந்தனர். அவர்களுடைய முகத்திலுள்ள தெளிவிலிருந்தே உள்ளத்திலுள்ள அமைதியை அறிந்து கொள்ளலாம்.

அரியிலூரில் சில நந்தவனங்களும் இருந்தன. அங்கங்கே சில சிறுகாடுகள் உண்டு. அந்தக் காட்சிகள் என் கண்களுக்கு விருந்தாக இருக்கும். காவிரி நீர் பாய்ந்து வளம் பெருக்கும் தஞ்சாவூர் சில்லாவிலுள்ள வயல்களையும் வரப்புகளையும் பார்க்கும் போதுகூட எனக்கு அந்தப் பழைய சந்தோசம் உண்டாவதில்லை. என் இளமைக் காலத்திற் கண்ட அக்காட்சிகளைத்தான் என் உள்ளத்துக்குள் உயர்வாகப் போற்றி வருகிறேன்.

கிருட்டிண வாத்தியார்

அரியிலூருக்குச் சென்ற பிறகு கிருட்டிண வாத்தியார் என்பவரிடம் முதலிற் படித்தேன். அவர் பெருமாள் கோவிலுக்கு வடக்கேயுள்ள வேளாளத் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வந்தார். அவரிடம் நான் ஒரு வருடம் படித்தேன்.
 
கிருட்டிண வாத்தியார் கிழவர். அவரிடம் பல பிள்ளைகள் படித்தார்கள். அவர் தமிழ் இலக்கியங்களில் நல்ல பழக்கமுடையவர். ஆத்திசூடி, மூதுரை, மணவாள நாராயண சதகம் முதலிய சதகங்கள், இரத்தினசபாபதி மாலை, நாலடியார், குறள் முதலியவற்றையும் கணக்கையும் அவரிடம் கற்றேன். நாலடியார் குறளென்னும் நூல்கள் அவ்வளவு இளம்பிராயத்தில் நன்றாகப் பொருளறிந்து கற்பது சாத்தியமன்று. ஆயினும் அவற்றை மனப்பாடம் செய்யும்படி கிருட்டிண வாத்தியார் மாணாக்கர்களை வற்புறுத்துவார். எழுத்தாணியால் ஏடுகளில் எழுதியும் கறடா (மட்டி)க் காகிதத்தில் கொறுக்காந் தட்டைப் பேனாவால் எழுதியும் திருத்தமாக எழுதிக் கற்றுக்கொண்டோம். கையெழுத்து நன்றாக இராவிட்டால் குண்டெழுத்தாணியால் கட்டை விரலில் உபாத்தியாயர் அடிப்பார். அவரிடம் படித்தவர் யாவரும் எழுதுவதில் நல்ல பழக்கத்தைப் பெற்றனர்.

அவரிடம் படித்த நூல்களெல்லாம் எனக்கு மனப்பாடமாயின. வீட்டிலும் என் தந்தையார் தினந்தோறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார். நாளுக்கு ஐந்து செய்யுட்கள் பாடம் பண்ணி அவரிடம் ஒப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரது தண்டனைக்கு உட்பட நேரும்.

ஏறாத தெலுங்கு

 எனது கல்வி விசயத்தில் என் தந்தையாருக்கு மனத்துக்குள் கவலை இருந்து வந்தது. என்னையும் சங்கீதத் துறையில் பழக்க வேண்டுமென்றே அவர் நினைத்திருந்தார். அக்காலத்தில் சங்கீத வித்துவான்கள் யாவருக்கும் தெலுங்கு மொழியிற் பழக்கம் இருந்தது. தமிழ், தெலுங்கு, சம்சுகிருதம் என்னும் மூன்று பாசைகளிலும் உள்ள கீர்த்தனங்களை அவர்கள் பாடுவார்கள்.

சங்கீதப் பயிற்சிக்குத் தெலுங்கு உதவியாக இருக்குமென்ற எண்ணத்தின்மேல் என் தந்தையார் கிருட்டிண வாத்தியார் பள்ளிக்கூடத்தைவிட்டு என்னை வேறொரு பள்ளிக்கூடத்திற் சேர்த்தார். பெருமாள் கோவிலுக்குத் தெற்கேயுள்ள காமாட்சியம்மன் கோவிலில் அந்தப் பள்ளிக்கூடம் இருந்தது. அதன் தலைவராகிய முத்து வேலாயுத பண்டாரமென்னும் வீரசைவர் தெலுங்கும் கற்பித்து வந்தார். அவரிடம் தெலுங்கு கற்கத் தொடங்கி, கணிதம் முதலியனவும் வேமன்ன சதகம், இராமதாச சதகமென்னும் சிறுநூல்களும் கற்றேன்.

சங்கீதத்திலும், தமிழிலும் என் புத்தி சென்றது போலத் தெலுங்கிற் செல்லவில்லை. என் நிலைமையை உணர்ந்த தந்தையார் சிறிது வருத்தத்தை அடைந்தார்; “நீ ஒரு காரியத்திற்கும் உபயோகம் இல்லாதவன்; பரிசாரக வேலைக்கு கூடப் பயன்பட மாட்டாய்” என்று என்னைக் கடிந்து கொண்டார். அன்று அவர் கூறின அவ்வார்த்தைகள் என் மனத்தைப் புண்படுத்தின. நான் என்ன செய்வேன்! எனக்குப் படிப்பில் விருப்பம் இருந்தது; தமிழும் சங்கீதமும் எனக்கு இன்பத்தை அளித்தன. தெலுங்கில் அந்த இன்பத்தை நான் காணவில்லை. எனக்கும் அதற்கும் வெகுதூரமென்ற எண்ணம் ஆரம்பத்திலேயே எனக்கு உண்டாயிற்று. நான் வேண்டுமென்று அதை வெறுக்கவில்லை.

தெலுங்கு கற்பதனால் வீண்சிரமம் உண்டாவதைத் தந்தையார் உணர்ந்தமையால் என்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் நிறுத்திக்கொண்டார். வீட்டில் தாமே சதகங்களையும் வேறு நூல்களையும் கற்பித்து வரலானார். சங்கீதத்திலும் சரளி, வரிசை, அலங்காரம் முதலியவற்றைக் கற்றுத் தந்தார். நான் சிறிதளவேனும் அயர்வாக இருந்தால் கடுமையாகக் கண்டிப்பார். அவர் செய்யும் தண்டனையினால் நான் துன்புறுவேன்; என் துன்பத்தைக் கண்ட என் தாயாரும் வருந்துவார்.

— அடிக்குறிப்பு 1. நான் எழுதி வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை முதற் பாகத்தில் மற்ற வரலாறுகளைக் காணலாம்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.