(உ.வே.சா.வின் என் சரித்திரம் 26 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 16
கண்ணன் காட்சியின் பலன்

காலை எட்டு நாழிகையளவில் குன்னம் போய்ச் சேர்ந்தோம். சிதம்பரம் பிள்ளையும் அவர் நண்பர்களும் எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அங்கே எங்களுக்காக அமைக்கப் பெற்றிருந்த வீட்டில் இறங்கினோம்.

அந்தச் சாகை அவ்வூரிலிருந்து சிரீ வைணவராகிய இராம ஐயங்கா ரென்பவருடைய வீட்டின் ஒரு பகுதியாகும். அவர் என் தந்தையாருக்கு இளமை முதல் நண்பர்; சித்த வைத்தியத்தில் நல்ல பயிற்சி யுடையவர். அவர் வசிட்டபுரத்தா ரென்னும் வகையைச் சேர்ந்தவர். குன்னத்திலும் அதைச்சார்ந்துள்ள ஊர்களிலும் அவ்வகையினர் இருந்தனர். அவர்கள் வைதிகத் தொழில் செய்து வந்தனர். பிறரை ஆதரிக்கும் குணமும் எல்லாரோடும் மனமொத்துப் பழகும் தன்மையும் வாய்ந்தவர்கள்.

என் தந்தையார் அரியிலூரிலிருந்து வந்தமையால் அவரை ‘அரியிலூரையர்’ என்ற பெயரால் குன்னம் முதலிய இடங்களிலுள்ளவர்கள் வழங்கலாயினர். அப்பக்கங்களில் உள்ளவர்கள் அவருடைய கதைகளையும் சங்கீதத்தையும் முன்னமே கேட்டவர்கள். “அரியிலூரையர் இங்கே வந்திருக்கிறார்” என்ற செய்தி எல்லாரிடத்தும் பரவியது. அவரவர்கள் அன்போடு தங்கள் தங்களால் இயன்ற பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து என் தந்தையாரைப் பார்த்துச் சென்றார்கள். அரிசி, பருப்பு, காய், கறி முதலிய உணவுப் பொருள்கள் வீட்டில் நிரம்பி விட்டன. அவற்றைப் பார்த்தபோது என் தந்தையார், அரியிலூர்க் கோயில் வாசலில் நிகழ்ந்த தீபாராதனையையும் கண்ணன் காட்சியையும் நினைந்து நினைந்து இன்புற்றார். ஊர் ஊராய்த் திரிந்து சீவிக்க வேண்டி நேர்ந்தால் என் செய்வது!’ என்று அவருக்கிருந்த சிந்தனை மாறியது.

ஊற்றை நாட்டாரும் பிறரும்

குன்னத்திற்கு எங்களை வருவித்த சிதம்பரம் பிள்ளை கார்காத்த வேளாளர். அவ்வூரிலுள்ள மற்ற வேளாளர்களிற் பெரும்பான்மையோர் ஊற்றை நாட்டார். குன்னத்திற்கு அருகில் ஊற்றத்தூரென்ற தேவார வைப்பு தலமொன்று இருக்கிறது. அதைத் தலைநகராகக் கொண்ட ஊர்களின் தொகுதி ஊற்றை நாடு என்று பழங்காலத்தில் வழங்கி வந்தது. அங்கே வாழ்ந்தமையால் அவ்வேளாளர்களுக்கு ஊற்றை நாட்டாரென்னும் பெயர் வந்தது. ஊற்றத்தூரிலுள்ள சுத்தரத்தினேசுவர ரென்னும் கடவுளே அவ்வகுப்பினருக்குக் குல தெய்வம். படையாட்சிகள், உடையார்கள் முதலிய வேறு சாதியினரும் குன்னத்தில் இருந்தனர். யாவரும் தெய்வ பக்தியும் தரும சிந்தையும் உடையவர்கள். காலை மாலைகளிற் கோயில்களிற் சென்று சுவாமி தரிசனம் செய்து தேவார திருவாசகங்களைச் சொல்லித் தோத்திரம் பண்ணிவிட்டு வருவார்கள். தங்கள் வருவாயில் ஒரு பகுதியைத் தருமத்திற் செலவிடுவார்கள்.

அவர்களுள் நல்ல நூல்களைக் கற்றவர்கள் பலர்; கல்லாவிடினும் பல நூல்களிலுள்ள விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டோரும் உண்டு. கல்வி, கேள்வி இல்லாதவர்களும் கற்றவர்களிடத்தில் அன்பு வைத்து மரியாதையோடு நடப்பார்கள். செல்வத்தினால் உண்டாகும் அகங்காரம் முதலிய குற்றங்களும் தம்முள் விரோதமும் அவர்கள்பால் இருக்கலாம்; ஆனாலும் கல்வியுடையவர்களைக் கண்டால் அவர்களை ஆதரிப்பதில் எல்லோரும் ஒரு முகப்பட்டு நிற்பார்கள். இந்த நிலை அக்காலத்தில் தமிழ்நாட்டுக் கிராமங்கள் எங்கும் காணப்பட்டதுதான்.

‘ஆனந்தமான பரம்’

குன்னத்திற்குச் சென்ற தினம் பிற்பகலில் தந்தையாரும் நானும் சிதம்பரம் பிள்ளையின் வீட்டிற்குச் சென்றோம். அவ்வீட்டுத் திண்ணையிற் பலர் கூடியிருந்தார்கள். சிதம்பரம் பிள்ளையும் அவர் தமையனாராகிய அப்புப் பிள்ளை என்பவரும் அங்கேயிருந்தனர். எல்லாரும் எங்களை வரவேற்றனர். அவர்கள் முகத்தில் விளங்கிய புன்னகையில் எங்கள் மனங்கள் திளைத்துத் தளிர்த்தன. சிதம்பரம் பிள்ளை தந்தையாரை அழைத்துத் தம் வீட்டுக்குள் சென்று இடைகழியிலுள்ள தம் புத்தக அலமாரியைக் காட்டினார். அதிலே பல புத்தகங்கள் இருந்தன. அதில் ஒரு புத்தகத்தை என் தந்தையார் எடுத்தார்; அது தாயுமானவர் பாடலாக இருந்தது. அதைப் பிரித்து என் கையிற் கொடுத்து “இவர்களுக்குப் படித்துக்காட்டு” என்று கூறினார். பிரித்த இடம் ஆனந்தமான பரமென்னும் பகுதி. நான் வாசல் திண்ணையில் உள்ளவர்களுக்கு அப்பகுதியிலுள்ள பாடல்களில் ஒவ்வொன்றையும் தோடி முதலிய ஒவ்வொரு இராகத்தில் வாசித்துக் காட்டினேன். தாயுமானவர் யாவருக்கும் விளங்கும் சொற்களில் தம் அனுபவ   உணர்ச்சியை நன்றாக வெளியிட்டுள்ள அப்பாடல்களின் பொருளும், இளமைக்குரிய முறுக்கோடு வெளிவரும் என் தொனியும் அங்கிருந்தவர்களுக்கு இன்பத்தை விளைவித்தன. “அரியிலூர் ஐயர் தம் குமாரரையும் நன்றாகப் பழக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே இவரும் நல்ல நிலைக்கு வருவார்” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். குன்னத்திற் புகுந்த முதல் நாளே ‘ஆனந்தமான பரத்’ தைத் துணையாகக் கொண்டு அவர்கள் உள்ளத்திலும் நாங்கள் புகுந்து கொண்டோம்.

தலங்கள்

தலங்களைப்பற்றிய வரலாறுகளைத் தெரிந்து கொள்வதில் அக்காலத்தினருக்கு அதிக விருப்பம் இருந்தது. தலத்தில் விருட்சம், மூர்த்திகளின் திருநாமம், வழிப்பட்டவர்கள் வரலாறு, தீர்த்த விசேடம் முதலிய விசயங்களை அங்கங்கே உள்ளவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டு மற்றவர்களுக்குச் சொல்வார்கள். தங்கள் ஊர் சிறந்த தலமென்றும் பலவகையான மாகாத்மியங்களை உடையதென்றும் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. குன்னத்தின் தல மாகாத்மியங்களை என் தந்தையார் விசாரிக்கத் தொடங்கினார். நானும் அவற்றைத் தெரிந்துகொண்டேன்.

மிகச் சிறந்த தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் சிரீரங்கம், சம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று தலங்களுக்கும் பிரதியாக மூன்று தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவாரத் தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிட்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர். அன்றியும் கும்கோணத்துக்குக் கிழக்கே திருவிடைமருதூர் இருப்பது போலக் குன்றத்திற்குக் கிழக்கே வெண்மணி என்னும் ஊர் இருக்கிறது. திருவிடைமருதூருக்கு மத்தியார்சுனம் என்று பெயர். அதற்கு வெண்மையாகிய இருதயாகாசத்தின் மத்தியென்று பொருள் செய்து, திருவிடை மருதூர் தகராகாசத்திற்குச் சமானமானதென்று தத்துவார்த்தம் கூறுவர் சிலர். (அர்சுனம்-வெள்ளை) வெண்மணி என்னும் பெயர் மத்தியார்சுன மென்னும் பெயரோடு ஒருவாறு ஒப்புமையுடையதாகவே, அவ்வூரில் தோன்றிய கோயில் மூர்த்திக்கு ஆதி மகாலிங்கமென்ற திருநாமம் உண்டாயிற்று. மகாலிங்கமென்பது திருவிடை மருதூர் சுவாமியின் திருநாமம். பிருகத்து குச நாயகியென்பதே இரண்டிடங்களிலும் உள்ள அம்பிகையின் திருநாமம். இத்தகைய அமைப்புக்களால் ஆலய வழிபாட்டைப் பழங்காலத்தில் எவ்வளவு அவசியமானதாகக் கருதின ரென்பதை உணரலாம். என் இளமையிலும் அந்நிலை மாறாமலே இருந்தது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.