(உ.வே.சா.வின் என் சரித்திரம் 90 : அத்தியாயம்-55 : சிறு பிரயாணங்கள்-தொடரச்சி)

தஞ்சை மார்சல் கல்லூரி தமிழ்ப்பண்டிதரும் என் ஆசிரியருடைய மாணாக்கருமாகிய ஐயாசாமிப்பிள்ளையென்பவரும் இலக்கணம் இராமசாமி பிள்ளையென்பவரும் வேறு சிலரும் விரும்பியபடி ஆசிரியர் தஞ்சை சென்று அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தார். அக்காலத்தில் நான் அவருடைய உத்தரவின்படியே உத்தமதானபுரம் சென்று என் தாய் தந்தையரோடு இருந்து வரலானேன். என் சிறிய தகப்பனாருடைய வருவாய் போதாமையால் குடும்பம் மிக்க சிரமத்தோடு நடைபெற்று வந்தது.
அக்குடும்ப நிலை திருந்தவேண்டுமாயின் என் தந்தையார் மீட்டும் ஊர் ஊராக அலைந்து தம் சங்கீதத் திறமையாலே பொருளுதவி பெற வேண்டும். அவர்
எவ்வளவு காலந்தான் கட்டப்படுவார்! எனக்கு ஏதேனும் உத்தியோகமோ
வேறு வகையில் வருவாயோ கிடைத்தால்தான் நிரந்தரமான சௌக்கியம் குடும்பத்துக்கு உண்டாகுமென்பதை நான் உணர்ந்தேன். உணர்ந்து என் செய்வது!

நெல் வேண்டிய செய்யுள்

நான் வேறிடத்தில் இருந்தபோது எனக்குக் குடும்பத்தின் கட்டம் அதிகமாகத் தெரியவில்லை. கண் முன்னே பார்க்கும்போது தான், “நாம்
இருந்தும் ஒரு பயனும் இல்லாமற் போகிறதே!” என்ற வருத்தம் உண்டாயிற்று,
“இப்பொழுது நம்மால் ஆன சௌகரியத்தைச் செய்து வைப்போம்” என்று யோசித்தபோது எனக்கு ஒரே ஒரு வழி தோற்றியது,

எங்கள் ஊருக்கு அருகிலுள்ள வெள்ளைப் பிள்ளையாம் பேட்டை என்ற ஊரில் ஐயாக்கண்ணு மூப்பனார் என்ற செல்வர் ஒருவர் இருந்தார்.
அப்பக்கங்களில் அவருக்கு மிக்க செல்வாக்கு உண்டு. அவர் என் தந்தையாரிடம் அன்புடையவர். அவரிடம் சென்று நெல் வேண்டுமென்ற கருத்துடைய செய்யுளொன்றை இயற்றிச் சொல்லி அதன் பொருளையும் கூறினேன். பிறரிடம் ஒரு பொருளை விரும்பி நான் பாடிய முதற் செய்யுள் அது. என் பாடலைக் கேட்டவுடன் அவர் மகிழ்ந்து நான்கு கலம் நெல்லை அனுப்பினார். என் பெற்றோர்கள் அதனால் மிகவும் திருப்தியுற்றார்கள். அப்பாடல் இப்போது ஞாபகத்தில் இல்லை.

கலைமகள் துதி

திருப்பெருந்துறைப் புராணத்தை என் ஆசிரியர் இயற்றிக் கொண்டு வந்த சந்தர்ப்பமாதலின் என் மனம் அவர் கவித்துவத்தில் ஒன்றிப் போயிருந்தது. நானும் செய்யுள் இயற்றும் முயற்சியில் ஈடுபடலானேன். உத்தமதானபுரத்தில் தங்கியபோது எனக்கு ஓய்வு இருந்தமையால் அம்முயற்சி அதிகமாயிற்று. தனிப்பாடல்கள் பல இயற்றினேன். என் சிறிய தந்தையார். “உருப்படியாக ஏதாவது பாடு” என்று சொன்னார்.

முதலில் கலைமகள் விசயமாகச் செய்யுட்களை இயற்றத் தொடங்கினேன். நான் சொல்லச் சொல்ல என் சிறிய தந்தையார் எழுதி வந்தார். சில வெண்பாக்களையும் சில கட்டளைக் கலித்துறைகளையும் இயற்றினேன்.

“உள்ளக் கவலை யெலாமுரைத் தேனுக் குவந்தருள
மெள்ளக் கவினன மீதிவர்ந் தேவர வேளையிதே
கள்ளக் கயவர்க் கருமமு தேகலைக் கற்பகமே
வள்ளக் கமல மலர்மீதில் வாழும் மனோன்மணியே”

என்பது அவற்றில் ஒன்று. இவ்வாறு பாடல்களை இயற்றி வந்த போது என் மனத்துள்ளே ஒரு பெருமிதமுண்டாகும். என் சிறிய தந்தையார் அவ்வப்போது நன்றாயிருக்கிறதென்று பாராட்டுவார்.

திருவேரக மாலை

அப்பால் சுவாமிமலையிலுள்ள முருகக் கடவுள் விசயமாகப் பதினாறு கட்டளைக் கலித்துறைகளை இயற்றினேன். உயர்ந்த சாத்திரக் கருத்துகளோ, கற்பனைகளோ அப்பாடல்களில் அமையவில்லை. என்னுடைய அனுபவம் சிறிது; பழக்கமும் குறைவு. அந்த அளவில் எத்தகைய கருத்துகள் இருக்குமோ அவற்றையே அப்பாட்டில் காணலாம்.

பலவகையான துன்பங்களில் புண்பட்டவன் நான்; ஆதலின், அத்துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமென்று என் மனத்துள் இருந்த ஆவல் திருவேரகச் சண்முகப்பிரானை நோக்கி நான் கூறிய பிரார்த்தனையில் அங்கங்கே புலப்படும்.

“ஆடும் அரவிற்கு நேராகச் சீறும் அவரையகன்
றீடொன் றடியர்க ளோடென்று மேவி யிருப்பவருள்
நாடு மிருவர் தமக்கரி யானரு ணாததுயர்
சாடும் புனற்பொன்னி சூழ்திரு வேரகச் சண்முகனே”

சண்முகப்பிரான் ஞாபகத்தோடு ஆறுமுகத்தா பிள்ளையின் ஞாபகமும்
எனக்கு அப்போது இருந்ததுதான் இத்தகைய கருத்துகள் எழுதுவதற்குக் காரணமாகும்.

ஆனந்தவல்லி பஞ்சரத்தினம்

இச்செய்யுட்களை எல்லாம் எழுதிய என் சிறிய தந்தையார், “இந்த ஊர்
அம்பிகைமேல் ஏதேனும் பாடலாமே” என்று சொல்லவே நான் அவ்வாறே ‘ஆனந்த வல்லியம்மை பஞ்சரத்தினம்’ என்ற பெயருடன் ஐந்து செய்யுட்களை இயற்றினேன்.

நான் செய்யுட்கள் இயற்றுவதோடு, யாரேனும் வந்தால் சில செய்யுட்களின் பொருளையும் எடுத்துச் சொல்லுவேன். அதைக் கேட்டு அவர்கள் மகிழ்வார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அடையாவிடினும் எனக்கே ஒரு திருப்தி உண்டாகும். நான் உத்தமதானபுரத்தில் தங்கியிருந்த அந்த ஒரு மாதத்தில் என் பெற்றோர்களுக்கும் என் அபிவிருத்தியிற் கவலை கொண்ட மற்றவர்களுக்கும், “குற்றமில்லை, இவன் முன்னுக்கு வந்து விடுவான்” என்ற அபிப்பிராயம் உண்டாயிற்று.

கருவபங்கம்

எங்கள் பந்துவும், தமிழிலும் சங்கீதத்திலும் நல்ல பயிற்சி பெற்றவரும் ஆகிய சேசு வையரென்னும் முதியவர் உத்தமதானபுரத்தில் இருந்தார். தமிழ்
வித்துவானாக உள்ளவர்களிடம் தமிழ் படிப்பவர் யாரேனும் சென்றால்
அவரைப் பரீட்சை செய்வது அக்காலத்து வழக்கம். மாணாக்கர்கள் அவ்வாறு பரீட்சிப்பவர்களிடம் கோபம் கொள்வதில்லை. நான் சேசு வையரிடம் சென்று பேசிய போது அவர் என்னைப் பல கேள்விகள் கேட்டார். “நாம் பெரிய வித்துவானிடம் படிக்கிறோம். செய்யுள் செய்யும் பழக்கமும் நமக்கு உண்டாகிவிட்டது” என்ற நினைவிலே மிதந்திருந்த நான் அவர் கேட்ட கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொன்னேன்.

அவர் கம்ப ராமாயணத்திலே நல்ல பழக்கமுடையவர். அதிலிருந்து ஒரு
செய்யுளை எடுத்துக் கூறி, “இதற்கு அருத்தம் தெரிந்தால், சொல்லு, பார்க்கலாம்” என்றார். நான், “இன்னும் கம்பராமாயணத்தைப் பாடம் கேட்கவில்லை” என்று அவரிடம் சொல்லியிருக்கலாம். “பார்க்கலாமே; நம் அறிவிற்கு எட்டாமலா போகப் போகிறது?” என்ற எண்ணத்தால் அச்செய்யுளைக் கவனித்துப் பார்த்தேன்.

யுத்த காண்டத்தில் வருணனை வழிவேண்டு படலத்தில் வருகிறது
அப்பாட்டு. வருணன் வாராமை கண்டு கோபித்த இராமபிரான் கடலில் அம்பு
எய்யவும், வருணன் நடுங்கிப் பலவகையாக அப்பெருமானைத் துதித்துக் கொண்டே வந்து பணிகின்றான்.

பாயிருள் சீக்குந் தெய்வப் பருதியைப் பழிக்கு மாலை
ஆயிரங் கரத்தான் மண்மே லடியுறை யாக வைத்துத்
தீயன சிறியோர் செய்தாற் பொறுப்பது பெரியோர் செய்கை
ஆயிர நாமத் தையா சரணமென் றடியில் வீழ்ந்தான்.

“வருணன் பல மணிமாலைகளைக் கொணர்ந்து இராமபிரான்
திருவடிகளில் வைத்து, சிறியோர் பிழை செய்தால் பொறுப்பது பெரியோர்
செயல்; சரணம் என்று திருவடிகளில் வீழ்ந்தான்” என்பது அதன் கருத்து.

அதற்கு, “பரவிய இருளைப் போக்கும் தெய்வத் தன்மை பொருந்திய சூரியனை இகழ்ச்சி செய்யும் ஒளியையுடைய மாலையை ஆயிரம் கையையுடைய வருணன் பூமியின் மேல் பாத காணிக்கையாக வைத்து………” என்று நான் பொருள் சொல்லி வரும்போது, சேசுவையர் இடைமறித்து, “இரு, இரு; ஆயிரங் கையையுடைய வருணன் என்கிறாயே; பாட்டில் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.

“ஆயிரம் கரத்தான் என்று இருக்கிறதே” என்றேன் நான். அவர் சிரித்தார். பிறகு, “வருணனுக்கு ஆயிரம் கைகள் உண்டு என்பதற்கு எங்காவது ஆதாரம் உண்டா?” என்று கேட்டார்.

“இதில் தான் இருக்கிறது” என்றேன் நான். “உன் ஆசிரியர் இதற்கு இப்படியா பொருள் சொன்னார்?”

“நான் சொன்னதில் என்ன பிழை? அதை முதலில் சொல்லுங்கள்.”

“ஆயிரம் என்பதைக் கரத்தான் என்பதனோடு சேர்த்துப் பொருள்
செய்யக்கூடாது. பருதியைப் பழிக்கும் மாலை ஆயிரம் என்று பிரித்து ஆயிரம் மாலைகளைக் கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து என்று கூட்டி அர்த்தம் சொல்ல வேண்டும். நீ அவசரப்பட்டு விட்டாய்” என்றார் அப்பெரியார். என் கருவம் பங்கமுற்றது. “யார் யாரிடத்தில் என்ன என்ன அறிவாற்றல் இருக்குமோ என்று எண்ணாமல் இவர்பால் மதிப்பின்றி நாம் நம் பேதைமையை வெளிப்படுத்தி விட்டோமே” என்று வருந்தியதோடு, அவரைப் பார்த்து, “நானாக அருத்தம் பண்ணிச் சொன்னேன். என் ஆசிரியரிடம் இன்னும் இந்த நூலை நான் பாடம் கேட்கவில்லை. நீங்கள் சொன்ன அருத்தந்தான் சரியென்று தோற்றுகிறது” என்று பணிவாகக் கூறினேன்.

“எதையும் யோசித்துச் சொல்ல வேண்டும். நீ தைரியமாகப் பொருள்
சொல்ல முன்வந்தது பற்றிச் சந்தோசமடைகிறேன்” என்று சொல்லி அவர் என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். சில வாரங்களுக்குப் பின் என் ஆசிரியர் தஞ்சாவூரிலிருந்து பட்டீச்சுரம் வந்தார். வந்த பின் என்னைப் பார்த்து வரும்படி அரிகர புத்திர பிள்ளையை அனுப்பினார். அவர் வந்து என் சேம சமாசாரத்தை விசாரித்து விட்டுச் சென்றார். நான் சில நாட்களில் பட்டீச்சுரம் போய்ச் சேர்ந்தேன்.

கோளால் நேர்ந்த கலகம்

அப்பொழுது என் ஆசிரியர் எதிர்பாராத ஒரு விசயத்தைச் சொன்னார். நான் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். “நான் தஞ்சாவூரிலிருந்து வந்தவுடன் திருவாவடுதுறைக்குப் போயிருந்தேன். சந்நிதானத்தினிடம் உம்மைப் பற்றி யாரோ கோள் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. நீர் என்னிடம் சந்நிதானத்தைப் பற்றிக் குறை கூறி மனவருத்தம் உண்டாக்கியதாகவும், அதனால் நான் இங்கே வந்து இருப்பதாகவும் யாரோ சொல்ல அதைச் சந்நிதானம் உண்மை என்று நம்பி உம்மிடம் சிறிது சினங் கொண்டிருந்தது. ‘சாமிநாதையர் அப்படிச் சொல்லவில்லையே! அவர் அவ்வாறு செய்யக் கூடியவரும் அல்லவே?’ என்று சொல்லி நான் சமாதானம் சொன்னேன். பெரிய
இடங்களில் கோள் சொல்பவர்கள் எவ்வளவோ பேர் வந்து சேருவார்கள்.
சம்பந்தமில்லாதவர் விசயத்திலெல்லாம் கோள்கள் கிளம்பும். அவற்றை
உண்மையென்று நம்புவோர் சிலர். சந்நிதானம் உம்மிடம் இயல்பாகவே அன்பு கொண்டிருப்பதால் நான் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொண்டது. நீரும் அவர்கள் திருவுள்ளம் திருப்தியடையும் படி நடந்து கொண்டால் அனுகூலமாக
இருக்கும்” என்று அவர் கூறினார். “இது விபரீதமாக அல்லவா இருக்கிறது?
என்ன செய்யலாம்?” என்று எண்ணி நான் வருந்தினேன். என் ஆசிரியரும்
யோசித்துச் சுப்பிரமணிய தேசிகர் விசயமாக ஒரு விருத்தமும், ஆங்கிலக் குறிப்பு மெட்டில் ஒரு கீர்த்தனமும் இயற்றி, “நாம் மறுபடி
திருவாவடுதுறைக்குப் போகும்போது இந்த இரண்டையும் சந்நிதானத்தினிடம் இசையுடன் சொன்னால் ஏதேனும் சிறிதளவு கோபம் மிஞ்சியிருந்தாலும் மறைந்து விடும். இவற்றை நன்றாகப் பாடம் பண்ணி வைத்துக் கொள்ளும்”
என்று என்னிடம் சொன்னார். நான் அவ்வாறே அவற்றைப் பாடம் பண்ணி
இசையுடன் பாடப் பழகிக் கொண்டேன்.

கீர்த்தனம்

சில தினங்களுக்குப் பின் நாங்கள் திருவாவடுதுறை சென்றோம். சுப்பிரமணிய தேசிகரைக் கண்டவுடன் ஆசிரியர் கட்டளைப்படி நான் செய்த முதற் காரியம் என் ஆசிரியர் இயற்றிய விருத்தத்தையும் கீர்த்தனத்தையும் பாடிக் காட்டியதே.

“துங்கஞ்சார் தருதுறை சையில்வளர்
சுப்பிர மணிய தயாநிதியே
துன்றும்பே ரருள்நனி பொழிதரு
சுத்தமெய்ஞ ஞான கலாநிதியே”

என்பது அந்த அங்கிலக் குறிப்பின் பல்லவி. அக்கீர்த்தனம்
பெரியதாதலின் நிதானமாகவும் என்னால் இயன்ற வரையில் நன்றாகவும் பாடிக் காட்டினேன். தேசிகர் கேட்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார். மடத்திலுள்ளவர்களும்
பலமுறை கேட்டு இன்புற்றனர். ஓதுவார்கள் அக்கீர்த்தனத்தைப் பாடம் செய்து ஒவ்வொரு நாளும் சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையிலே பாடி வரலாயினர்.
தேசிகருக்கு என்னிடம் சினம் உண்டாயிற்றென்பதன் அறிகுறியே எனக்குத் தெரியவில்லை. என்னிடம் வழக்கம்போலவே அவர் ஆதரவு காட்டி வந்தார்.

ஆசிரியரது உள்ளப் பெட்டி

விரைவில் திருப்பெருந்துறைப் புராணத்தை நிறைவேற்ற வேண்டுமென்று சுப்பிரமணியத் தம்பிரான் தேசிகருக்குக் கடிதம் எழுதியிருந்தார். பிள்ளையவர்களிடம் தேசிகர் அவ்விசயத்தைத் தெரிவிக்கவே ஆசிரியர், “விரைவிற் புறப்பட்டுச் சென்று புராண அரங்கேற்றம் ஆரம்பிக்க வேண்டும்” என்று அன்புடன் சொல்லலானார். புராணத்தில் படலங்களே ஆகியிருந்தன. “முழுவதும் இயற்றிய பின்புதானே அரங்கேற்ற வேண்டும்” என்று நான் நினைத்தேன். பிறகு பிள்ளையவர்களது வழக்கம் எனக்குத் தெரிய வந்தது. ஒரு புராணத்தை முற்றும் இயற்றிப் பிறகுதான் அரங்கேற்ற வேண்டுமென்ற நியதி அவருக்கு இல்லை. புராணத்தின் பிற்பகுதிகளை இயற்றிக் கொண்டேயிருப்பார்; முற்பகுதிகளை அரங்கேற்றுவார். சில சமயங்களில் அன்றன்று முற்பகலில் பாடல்களை இயற்றிப் பிற்பகலில் அரங்கேற்றுவதும் உண்டு. பெட்டி நிறையப் பணம் வைத்துக் கொண்டிருப்பவன் எந்தச் சமயத்திலும் வேண்டிய தொகையை எடுத்துச் செலவழிப்பதைப் போல அவர் எந்தச் சமயத்தில் நினைத்தாலும் தம் உள்ளப் பெட்டியைத் திறந்து வேண்டிய கவிகளை எடுத்து வெளியிடும்
நிலையில் இருந்தார். அப்பெட்டியைத் திறப்பதற்குரிய திறவுகோலாகிய
உற்சாகம் மாத்திரம் அவரிடம் இருக்க வேண்டும்; அப்பொழுது
அவரிடத்திலிருந்து புறப்படும் கவிதை வெள்ளத்தை யாரும் தடை செய்யவே
முடியாது.

(தொடரும்)