(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 1/4 தொடர்ச்சி)

என் சரித்திரம்

மகாமகோபாத்தியாய முனைவர்

உ. வே. சாமிநாதர்

அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4

இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகசுதர்கள் இல்லை; ரெயிலின் சத்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது; சனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் இலட்சுமீகரம் விளங்கியது.

இவ்வளவு (உ)ரூபா யென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆசுதி அந்தக் காலத்து உத்தமதானபுர வாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.
இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதே யொழியக் குறையவில்லை.

எங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது. பெரியவர்கள், விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி யாற்றுக்குப்போய் நீராடி வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது சுநானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையிற் போகவேண்டும்; வயல்களின் வரப்புக்களில் ஏறி இறங்கவேண்டும். சூரியோதய காலத்தில், நீர்க் காவியேறிய வசுதிரத்தை உடுத்து நெற்றி நிறைய விபூதி தரித்துக்கொண்டு வீடுதோறும் சபம் செய்துகொண்டிருக்கும் அந்தணர்களைப் பார்த்தால் நம்மை அறியாமலே அவர்களிடம் ஒரு விதமான பக்தி தோற்றும். காயத்திரி சபமும் வேறு சபங்களும் முடிந்த பிறகு அவர்கள் சூரிய நமசுகாரம் செய்வார்கள்.

அது வரையில் தவக்கோலத்தில் இருக்கும் அவர்கள் பிறகு வயற் காட்டை நோக்கிக் கிளம்பி விடுவார்கள். சிலர் மண் வெட்டியையும். சிலர் அதனோடு அரிவாளையும் எடுத்துக்கொண்டு புறப்படுவார்கள். தேக பலத்திற் சிறிதும் குறைவில்லாத அவ்வந்தணர்கள் நடுப் பகல் வரையில் வயற் காடுகளில் வேலை வாங்கித் தாமே வேலை செய்தும் பொழுது போக்குவார்கள். பிறகு வீட்டிற்கு வந்து பூசைசெய்து உணவை உட்கொண்ட பின் இராமாயண பாரத புராண கதைகளைப் படிப்பார்கள். தமிழ் சமசுகிருதம் என்ற இரண்டு பாசைகளிலும் உள்ள நூல்களைப் படித்தும் படிக்கச் செய்தும் இன்புறுவார்கள்.

பிற்பகலில் மீண்டும் வயற் காட்டுக்குச் சென்று கவனிக்க வேண்டியவற்றைக் கவனித்து விட்டு ஆறு மணியளவுக்கு வீட்டுக்கு வருவார்கள். அப்பால் இலட்சுமி தீர்த்தத்தில் சந்தியாவந்தனம் செய்துகொண்டு ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்வார்கள். பிறகு வீட்டுக்கு வந்து ஆகாரம் செய்து விட்டு ஒன்பது மணி வரையில் புராண சிரவணம் செய்வார்கள். வாரத்தில் சில நாட்கள் பசனை செய்வதும் உண்டு.

காய்கறித் தோட்டங்கள் போட்டு அவற்றை நன்றாகப் பாதுகாத்து விருத்தி செய்வதிலும், பசுக்களையும் எருமைகளையும் வளர்த்துப் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு ஊக்கம் அதிகம்.
இளமை தொடங்கியே உழைக்கும் பழக்கம் அவர்களிடம் காணப் பட்டது. இவ்வாறு உழைப்பதிலும், நல்ல விசயங்களைக் கேட்பதிலும் அவர்கள் பொழுது போக்கிக்கொண்டு இருந்ததனால் வேறு விதமான காரியங்களைக் கவனிக்க நேரமோ மனமோ இருப்பதில்லை.

எங்கள் ஊரில் அந்தணர்களுள் மாத்தியமர், வடமர், அட்ட சகசுரத்தினர் என்னும் வகையினர் இருந்தார்கள். விட்ணுவாலய பூசை செய்துவந்த நம்பியார் குடும்பம் ஒன்றும், சிவாலய பூசகராகிய ஆதி சைவர் குடும்பம் ஒன்றும் உண்டு. அட்ட சகசுரத்தினரில் ஏழெட்டுக் குடும்பத்தினர் வைதிகர்கள். அயலூரிலுள்ள அக்கிரகாரங்களுக்கு இவர்களே உபாத்தியாயர்கள்; அங்கங்கே சென்று வைதிக காரியங்களைச் செய்வித்துச் சுக சீவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் கவலையின்றியிருந்தமையால் தேக பலம் மிக்கவர்களாக விளங்கினார்கள். வியாதி இவர்கள் இருந்த திக்கிலே கூட வராது.

உத்தமதானபுரத்தில் அண்ணா சோசியரென்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் சோசியத்தினாலும் வைதிக வாழ்க்கையினாலும் வேண்டியவற்றைப் பெற்றுக் கவலையின்றி சீவனம் செய்து வந்தார். நல்ல கட்டுள்ள தேகம் வாய்ந்த அவர் ஒரு நாள் எங்கோ ஒரு கிராமத்தில் பிராமணார்த்தம் (சிராத்த உணவு) சாப்பிட்டு விட்டு மார்பு நிறையச் சந்தனமும், வாய் நிறையத் தாம்பூலமும், குடுமியிற் பூவும் மணக்க உல்லாசமாக ஊருக்கு வந்து கொண்டிருந்தார். நடுவழியே பாபநாசத்தில் தஞ்சாவூர் கலெக்டர் ‘முகாம்’ செய் திருந்தார். அவ்வழியே வரும்போது கலெக்டரும் சிரசுதேதாரும் வெளியே நின்றுகொண்டிருந்தனர். கலெக்டர் வெள்ளைக்காரர்; சிரேசுதேதார் இந்தியர்.
(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.