(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 4 தொடர்ச்சி)

ஊரும் பேரும் – 5

மருத நிலம்‌

ஆறு

நிலவளமும்‌, நீர்வளமும்‌ உடைய தமிழ்‌ நாட்டில்‌ நினைப்பிற்கு எட்டாத காலந்‌ தொட்டுப்‌ பயிர்த்தொழில்‌ பண்புற நடந்து வருகின்றது. பண்டைத்‌ தமிழர்‌ ஆற்று நீர்‌ பாயும்‌ அவல பரப்பைப்‌ பண்படுத்திப்‌ பயிர்‌ செய்து மருத நிலமாக்கினார்கள்‌. அருமந்த பிள்ளையைப்‌ பாலூட்டி வளர்க்கும் தாய்போல் மருத நிலத்தை நீரூட்டி வளர்ப்பது நதியென்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள்.49

காவிரியாற்றைப்‌ பொன்னியாறென்று புகழ்ந்தார்கள்‌; வைகையாற்றைப்‌  “பொய்யாக்‌ குலக்கொடி” 50 என்று போற்றினார்கள்‌. சுருங்கச்‌ சொல்லின்‌ நதியே நாட்டின் உயிர்‌ என்பது தமிழர்‌ கொள்கை.

ஆற்றங் கரைகளிலே சிறந்த ஊர்கள் அமைந்தன. ‘ஆறில்லா ஊருக்கு
அழகில்லை’ என்ற பழமொழியும் எழுந்தது. முற்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்களும், துறைமுகங்களும் ஆற்றையடுத்தே உண்டாயின. உறையூர் என்பது சோழநாட்டின் பழைய தலைநகரம். அது காவிரிக் கரையில் அமைந்திருந்தது. பட்டினம் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சோழநாட்டுத் துறைமுகம் காவிரியாறு கடலில் புகுமிடத்தில் வீற்றிருந்தது. அக் காரணத்தால் புகார் என்றும்,51 காவிரிப்பூம்பட்டினம் என்றும் அந் நகரம் பெயர் பெறுவ தாயிற்று. அவ்வாறே பாண்டி நாட்டுப் பெருநதியாகிய வைகையின் கரையில் மதுரை என்னும் திருநகரம் அமைந்தது.
பாண்டியர்க்குரிய மற்றொரு சிறந்த நதியாகிய பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் சிறந்து விளங்கிற்று.52 எனவே, பண்டைத் தமிழகத்தின் வேளாண்மைக்கும் வாணிப வளத்துக்கும் நதியே சிறந்த சாதனமாக அமைந்திருந்ததென்பது நன்கு விளங்கும்.

       கங்கை, கோதாவரி போன்ற பெரிய ஆறுகள் தமிழ்நாட்டில் இல்லை. ஆயினும் சிறிய நதிகளைச் சிறந்த வகையிற் போற்றிய பெருமை தமிழ்நாட்டார்க்கு உரியது. ஆற்று நீரின் அருமை யறிந்த தமிழரது ஆர்வம் அன்னார் நதிகளுக்கு இட்டு வழங்கிய பெயர்களால் அறியப்படும். பாலாறு என்பது ஓர் ஆற்றின் பெயர். அது தொண்டை நாட்டின் வழியாகச் செல்கின்றது. அந்நதியில் கண்ணீர் சுரக்குமே யன்றிப் பெரும்பாலும் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. இன்னும், நீர்வளம் குறைந்த சேதுநாட்டின்53  வழியாகச் செல்லும் ஒரு சிறு நதி தேனாறு என்னும் அழகிய பெயர்
பெற்றுள்ளது. அதனருகே உள்ள குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள ஈசனைத் தேனாற்று நாயகர்54 என்று சாசனம் கூறும். சுவையுடைய செழுந்தேனைச் சொட்டுச் சொட்டாக வடித்தெடுத்துப் பயன்படுத்துதல் போன்று இந் நதியின் நீரைத் துளித் துளியாக எடுத்து அந்நாட்டார் பயன் அடை கின்றார்கள். பாலாறு தொண்டை நாட்டிலும், தேனாறு பாண்டி நாட்டிலும் விளங்குதல் போலவே, சேர நாட்டில் நெய்யாறு என்னும் நதி உள்ளது. அந்நதியின் கரையில் அமைந்த ஊர் நெய்யாற்றங்கரை என்று வழங்குவதாகும்.55

       நெல்லை நாட்டில் உள்ள ஒரு சிறு நதியின் பெருமையை வியந்து
கருணையாறு என்று அதற்குப் பெயரிட்டுள்ளார்கள். தென்னார்க்காட்டில் விருத்தாசலத்தின் வழியாகச் செல்லும் நதி மணிமுத்தாறு என்னும் பெயர் பெற்றுள்ளது.56

     இவ்வாறு நாட்டின் உயிரென விளங்கும் நதிகளின் பெயர்கள் சில
ஊர்களுக்கு அமைந்துள்ளன. திருஐயாறு என்பது சோழ நாட்டிலுள்ள ஒரு பழைமையான ஊரின் பெயர். காவிரி முதலிய ஐந்து ஆறுகள் பரந்து பாயும் வள நிலத்தில் அமைந்த நகரம் ஐயாறு என்று பெயர் பெற்றது போலும். பஞ்சநதம் என்று அதனை வட மொழியாளர் வழங்குவர்.

    தொண்டை நாட்டில் சேயாறு என்னும் நதியொன்று உண்டு. அதன்
கரையில் எழுந்த ஊரும் சேயாறு என்றே பெயர் பெற்றது.57 இன்னும்
சென்னை மாநகரின் வழியாகச் செல்லும் ஆறு ஒன்று அடையாறாகும்.58 அது செங்கற்பட்டிலுள்ள செம்பரம்பாக்கத்து ஏரியினின்றும் புறப்பட்டுச் சென்னையின் வழியாகச் சென்று கடலோடு கலக்கின்றது. அவ்வாற்றுப் பெயரே அடையாறு என்னும் பாக்கத்தின் பெயராயிற்று.


    இக் காலத்தில் சில ஆற்றுப் பெயர்கள் மாறிவிட்டாலும் அவற்றை
ஊர்ப் பெயர்களால் உணர்ந்து கொள்ளலாம். திருக்குற்றால மலையினின்று புறப்பட்டுச் செல்கின்ற சித்திரா நதியோடு ஒரு சிறு நதி வந்து சேர்கின்றது. புராணக் கதையில் அது கோதண்டராம நதியென்று கூறப்படுகிறது.59 வனவாசம் செய்த இராமர் சீதையின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டுத் தமது கோதண்டத்தைத் தரையில் ஊன்றி உண்டாக்கிய நதியாதலால் அப் பெயர் அதற்கமைந்த தென்று கூறுவர். ஆயினும், அவ்வாற்றின் பழம் பெயர் கயத்தாறு என்று தெரிகின்றது. கயம் என்பது ஆழமான நீர்நிலை. அத்தகைய நீர்நிலைக்கு ஆதாரமாய் ஓர் ஊற்றினின்றும் புறப்படுகின்ற ஆற்றைக் கயத்தாறு என்று அழைத்தார்கள்.

அடிக்‌ குறிப்பு

49. “வாழி யவன்தன்‌ வளநாடு மகவாய்‌ வளர்க்கும்‌ தாயாகி

ஊழி யுய்க்கும்‌ பேருதவி ஒழியாய்‌ வாழி காவேரி” –

சிலப்பதிகாரம்‌, கானல்‌ வரி, 27. 

50. சிலப்பதிகாரம்‌, புறஞ்சேரி யிறுத்த காதை, 169-170.

51. “அதோமுகம்‌ புகாரோடு அழிவு கூடல்‌ கழிமுகம்‌

என்றனர்‌  காயலுமாகும்‌” – பிங்கல நிகண்டு.,

52. “கொற்கைக்‌. கோமான்‌ ‘கொற்கையம்‌ பெருந்துறை” –

ஐங்குறுநூறு, 188. 

53. சேதுநாடு என்பது இராமநாதபுரம்‌ சில்லா.

54.  25/1909.

55. இவ்‌ வாற்றுப்‌ பெயர்களை நோக்கும்பொழுது பெண்ணை

யாறும்‌ முற்காலத்தில்‌ வெண்ணெயாறாக இருந்திருக்குமோ என்ற

எண்ணம்‌ எழுகின்றது. பகர வகரங்கள்‌ தம்முள்‌ மயங்கும்‌ என்பது

தமிழ்‌ ஒலியிலக்கணத்தால்‌ அறியப்படும்‌. அன்றியும்‌ பெண்ணை

யாற்றின்‌ தென்கரையிலுள்ள நல்லூர்‌ திருவெண்ணெய்‌ 

நல்லூர்‌ என்று பெயர்‌ பெற்றுள்ளது.

56. “முத்தாறு வலஞ்செய்யும்‌ முதுகுன்றமே” என்பது

தேவாரம்‌. 

57. சேயாறு, செய்யார்‌ என மருவி வழங்குகின்றது.

58. சென்னையின்‌ வழியாக மூன்று கல் சென்று கடலிற்‌

கலக்கும்‌ அடையாற்றின்‌ முகத்தில்‌ அமைந்த ஊர்‌ அடையாறு

என்னும்‌ பெயர்‌ பெற்றது.

59. முக்கூடற் பள்ளு நாடகம்‌-51.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்