(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 11 தொடர்ச்சி)

ஊரும் பேரும் –12

நாடும் நகரமும்

நாடு

     நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு மூன்று பாகமாகிய பொழுது ஒவ்வொரு பாகமும் தனித்தனியே நாடு என்னும் பெயருக்கு உரியதாயிற்று.

சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என்ற பெயர்கள் தமிழிலக்கியத்தில் மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். நாளடைவில் முந் நாடுகளின் உட்பிரிவுகளும் நாடு என்று அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு முதலியன இதற்குச் சான்றாகும்.

    சிறுபான்மையாகச் சில தனியூர்களும் நாடென்று பெயர் பெற்று வழங்குதல் உண்டு. முன்னாளில் முரப்பு நாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது.1 அதற்கு எதிரே ஆற்றின் மறு கரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்ல நாடு என்னும் பெயருடையது. இங்ஙனம் நாடு என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினைச் சோழ நாட்டிலும் காணலாம். மாயவரத்திற்கு அணித்தாகவுள்ள ஓரூர் கொரநாடு என்று அழைக்கப்படுகிறது. கூறை நாடு என்பதே கொரநாடென மருவிற்று.2 பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுராந்தக வட்டத்தில் தொன்னாடும் உள்ளன. நாடென்னும் சொல்லின் பொருள் வழக்காற்றில் நலிவுற்ற தன்மையை இவ்வூர்ப் பெயர்கள் உணர்த்துவனவாகும்.

நகரம்

    சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கும். நாட்டின் தலைமை சான்ற நகரம் தலைநகரம் எனப்படும். முன்னாளில் ஊர் என்றும், பட்டி என்றும் வழங்கிய சில இடங்கள், பிற்காலத்தில் சிறப்புற்று நகரங்களாயின.

ஆழ்வார்களிற் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம் பெயரைத் துறந்து, ஆழ்வார் திருநகரியாகத் திகழ்கின்றது.3 பாண்டி நாட்டிலுள்ள விருதுப் பட்டி, வருத்தகத்தால் மேம்பட்டு, இன்று விருதுநகராக விளங்குகின்றது.

    இக் காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன. சென்னையின் அருகே எழுந்துள்ள தியாகராய நகரமும், காந்தி நகரமும், சிதம்பரத்திற்கு அண்மையில் அமைந்திருக்கும் அண்ணாமலை நகரமும், தஞ்சையில் தோன்றியுள்ள கணபதி நகரமும் இதற்குச் சான்றாகும்.

 புரம்

   புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். தொண்டை நாட்டின் தலைநகரம் ஆதியில் கச்சி என்றும், காஞ்சி யென்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் புரம் என்பது காஞ்சியொடு சேர்ந்தமையால் அது காஞ்சிபுரமாயிற்று. அந்நகரில் அரசு வீற்றிருந்த பல்லவ மன்னர் பெயரால் அமைந்த ஊர்கள் பல்லவ புரம் என்று முன்னாளில் பெயர் பெற்றன. அவை பெரும்பாலும் பல்லாவரம் என்று இப்பொழுது வழங்கும்.4

சோழ நாட்டை ஆண்ட பெரு மன்னரும் தம்முடைய விருதுப் பெயர்களைப்பல ஊர்களுக்கு அமைத்தார்கள். இராசராச சோழன் உண்டாக்கிய ஊர் செயங் கொண்ட சோழபுரம். அது சில காலம் சோழ நாட்டின் தலைநகராகவிளங்கிற்று.5 செயங் கொண்டான் என்பது இராசராசனது பட்டப்பெயர்களில் ஒன்று.

      புரம் என்பது புரி எனவும் வழங்கும். சேலம் நாட்டில் தருமபுரி என்னும் ஊர் உள்ளது. தேவாரத்தில் திருநெல்வாயில் என்று குறிக்கப்பட்ட ஊர் இன்று சிவபுரியாயிருக்கின்றது. ஆண்டாள் பிறந்தருளிய திருவில்லிபுத்தூர் வைணவ உலகத்தில் கோதை புரி என்றும் குறிக்கப்படும்.

பழனியின் பல பெயர்களில் ஒன்று வையாபுரியாகும்.

 தலைநகரங்கள்

      வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு. முன்னாளில் சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகை படிந்த ஓவியம் போல் பொலிவிழந்திருக்கின்றன. பின்னாளில் தோன்றிய சில ஊர்கள் இப்பொழுது பெருமையுற்றுத் திகழ்கின்றன. இவ்வுண்மையை இரண்டொரு சான்றுகளால் அறியலாம்.

 உறந்தை

     சங்கக்காலம் என்று சொல்லப்படுகின்ற பழங்காலத்தில் சோழ நாட்டின் நல்லணியாகச் சிறந்திருந்த நகரம் உறந்தையாகும். காவிரி யாற்றங்கரையில் உறந்தை என்னும் உறையூர் அமைந்திருந்தது. ‘ஊர் எனப்படுவது உறையூர்’ எனப் பண்டைப் புலவர்கள் அதனைப் பாராட்டினார்கள். அந்நாளில் திருச்சிராப்பள்ளி ஒரு சிற்றூராக அதன் அண்மையில் அமர்ந்திருந்தது. நாளடைவில் உறையூரின் பெருமை குறைந்தது; சிராப்பள்ளியின் சீர் ஓங்கிற்று. இப்பொழுது திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டில் ஒரு சிறந்த நகரமாகத் தலை யெடுத்து நிற்கின்றது. பண்டைப் பெருமை வாய்ந்த உறையூர் அதன் அருகே ஒளி மழுங்கி ஒடுங்கிக் கிடக்கின்றது.

 கங்கை கொண்ட   சோழபுரம்

    பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பு, சோழ நாட்டின் பெருமை குன்றிலிட்டவிளக்குப்போல் நின்று நிலவிற்று, அறிவும் ஆற்றலும் வாய்ந்த பெருமன்னர் வாழையடி வாழையெனத் தோன்றி, அந் நாட்டின் பெருமையை விளக்கினர். அன்னார் தம் பெயர் விளங்குமாறு புதிய நகரங்களை உண்டாக்கினர். அவற்றுள் ஒன்று கங்கை கொண்ட சோழபுரம். அந் நகரத்தை அழகுபடுத்தும் வகையில் கங்கை கொண்ட சோழன் என்னும் இராசேந்திரன் அளவிறந்த பொருளைச் செலவிட்டான். கோவில் இல்லாத நகரில் நன்மக்கள் குடியிருக்க மாட்டார்கள் என்றறிந்து, அவ்வூரில் பெரியதொரு கோவில் கட்டினான். அக் கோவில் தஞ்சையிலுள்ள பெருங் கோவிலினும் சிறப்புடையதாய் விளங்கிற்று. அந் நாளில் பெருஞ்சீலராய் விளங்கிய கருவூர்த் தேவர் அச்சிவாலயத்தைச் சிறப்பித்துத்திருப்பதிகம் பாடினார். அவர் பாட்டில் கங்கை கொண்ட சோழேச்சரம் என்று அக்கோவில் குறிக்கப்படுகின்றது.6 கோவிலுக்கு அரைக்கல் தூரத்தில் சோழ மன்னனது மாளிகை எழுந்தது. இன்னும், வேளாண்மைக்கு இன்றியமையாத நீர் வளத்தைப் பெருக்குமாறு சோழன் அந்நகரில் பெரிய ஏரி ஒன்று கட்டினான். கங்கை யாற்றினின்றும் எடுத்து வந்த நீரை அவ்வேரியில் உகுத்துச் சோழகங்கம் என்று அதற்குப் பெயரிட்டான்.

அடிக் குறிப்பு

 1. இவ்வூர் சோமிதேவ சதுர்வேதி மங்கலம் என்றும் இடைக் காலத்தில்

பெயர் பெற்றிருந்தது. 434 / 1906.

2. கூறை என்பது ஆடை; ஆடை நெய்யப்பட்ட இடம் கூறை நாடு என்று பெயர் பெற்றது. இப் பழைய சொல் இப்பொழுது கூறைப் புடைவை என்று வழங்கும் தொடர் மொழியிலே காணப்படும்.

3. “குருகூர்ச் சடகோபன் சொல்” – திருவாய்மொழி: 11.

4. சென்னைக்கு அண்மையிலுள்ள பல்லாவரம், பல்லவபுரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகிறது. 56 of 1909. அங்குள்ள பழைய குகைக் கோயிலில் மகேந்திரப் பல்லவனது விருதுப் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

5. செயங்கொண்ட சோழபுரம், திருச்சி நாட்டு உடையார் பாளையம்

வட்டத்தில் உள்ளது.

6. இப்பதிகம் திருவிசைப்பாவிலே சேர்க்கப்பட்டுள்ளது

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்