(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 23. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):24

4. குலமும் கோவும் தொடர்ச்சி

சிரீவல்லபன்

     தென்பாண்டி நாட்டுக்குப் பெருந் தொண்டு செய்த பாண்டியன் சிரீவல்லபன் என்று கருண பரம்பரைக் கதை கூறுகின்றது. தாமிரவருணி யாற்றங்கரையில் உள்ள மணப்படை வீடு அம் மன்னனுக்குரிய படை வீடுகளில் ஒன்றாக விளங்கிற்றென்று தெரிகின்றது. அப் படை வீடு, சிரீவல்லபன் மங்கலம் என்ற ஊரின் ஓர் அங்கமாக அமைந்திருந்ததென்று சாசனம் கூறும். 35 அவ்வூரின் அருகே கொட்டாரம் என்னும் பெயருடைய சிற்றூர் காணப்படுகின்றது. கொட்டாரம் என்பது அரண்மனையைக் குறிக்கும். இவ்வூர்களுக்கு எதிர்க்கரையில் செப்பறை என்ற சிற்றூர் அமைந்துள்ளது. செப்பறை என்னும் சொல் செம்பினால் ஆகிய அறை என்று பொருள்படும். செப்புத் தகடுகள் பொதிந்து கோட்டையின் மதில்களை வலுப்படுத்தும் முறை முன்னாளில் கையாளப்பட்டதாகத் தெரிகின்றது.36 எனவே, செப்பறை என்பது ஒரு சிறந்த கோட்டையாக இருந்திருத்தல் கூடும். இடிந்த மதிற் சுவர்களும், உயர்ந்த மேடுகளும் இன்றும் அங்கே காணப்படுகின்றன. அதற்கு அண்மையில் இராசவல்லிபுரம் என்னும் பெயருடைய சிற்றூர் ஒன்று அமைந்திருக்கின்றது. சாசனத்தில் இராசவல்லவபுரம் என்று அவ்வூர் வழங்கும். இவைகளில் எல்லாம் சிரீவல்லபன் என்னும் பாண்டியனது கைவண்ணம் விளங்கக் காணலாம்.37

 பராக்கிரம பாண்டியன்

    பாரத நாட்டில் இந்துக்கள் போற்றும் புண்ணியத் தலங்களுள் தலைமை சான்றது காசியாகும். இத்தகைய காசியைத் திசை நோக்கித் தொழுத பழந்தமிழர் தமது நாட்டில் அப்பதியின் பெயரைச் சில ஊர்களுக்கு அமைத்துள்ளார்கள். சிவகாசி, தென்காசி முதலிய ஊர்கள் வடகாசியை நினைவூட்டுவனவாகும். தென் பாண்டி நாட்டில் தென்காசியைச் சிறக்கச் செய்தவன் பதினைந்தாம் நூற்றாண்டில் அரசு செலுத்திய பராக்கிரம பாண்டியன். சிவநேயச் செல்வனாகிய அம்மன்னன் கங்கைக் கரையில் உள்ள காசி விசுவநாதரின் கோலத்தைச் சித்திரா நதிக்கரையிற் கண்டு வணங்க ஆசைப்பட்டு, அங்கு விசுவநாதர் கோயிலைக் கட்டினான். திருப்பணி முற்றுப் பெறுவதற்குப் பதினேழு ஆண்டுகள் ஆயின என்று சாசனம் கூறுகின்றது. தென் காசியில் கோயில் கொண்ட விசுவநாதர் பெயரால் அம்மன்னன் பெரியதோர் ஏரியும் வெட்டுவித்தான். விசுவநாதப் பேரேரி என்று பெயர் பெற்ற அவ் வேரி, விசுவநாதப்பேரி என இன்றும் வழங்கக் காணலாம். இன்னும் விந்தனூர் முதலாய ஐந்து ஊர்களில் அவ்வரசன் அகரங்கள் அமைத்து அந்தணரைப் பேணிய செய்தி கல்வெட்டுகளால் அறியப்படும். அவ் வகரங்கள் ஒன்று மேலகரம் என்னும் பெயரோடு இன்றும் தென்காசிக்கு அருகே நின்று நிலவுகின்றது. சிவபக்திச்செல்வமும், செந்தமிழ்ப் புலமையும் வாய்ந்த அம் மன்னன் தென்காசித்திருப்பணியைக் குறித்துப் பரிவுடன் பாடிய பாட்டு அன்பர் உள்ளத்தை உருக்குதாகும்.38

கிருட்டிணப்ப நாயக்கன்

     பதினாறாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் பாண்டி நாடு நாயக்கரது ஆட்சியில் அமைவதாயிற்று. விசயநகரப் பேரரசர்களின் சார்பாக, கருத்தாக்கள் என்னும் பெயரோடு நாயக்கர், மதுரையில் ஆட்சி புரிவாராயினர். அவர்களுள் ஒருவன் கிருட்டிணப்ப நாயக்கன். பாளையங் கோட்டையின் அருகேயுள்ள கிருட்டிணாபுரம் அவன் பெயரைத் தாங்கி நிற்கின்றது. அங்குள்ள திருமால் கோவிலில் அமைந்துள்ள சிற்பத்தின் சீர்மை இன்றும் கலைவாணர்களால் வியந்து பாராட்டப்படுவதாகும்.

திருமலை நாயக்கன்

    நாயக்கர் மரபைச் சேர்ந்த திருமலை நாயக்கன் பெயரைத் தென்னாடு நன்கு அறியும். மதுரை மாநகரை அலங்கரிக்கின்ற கட்டடங்களில் மிகச் சிறந்தது திருமலை நாயக்கன் மாளிகையேயாகும். அவ்வரசன் சிரீவில்லிபுத்தூரிலும்  ஒரு சிறந்த அரண்மனை அமைத்தான். அந்த நாயக்கன் பெயரால் அமைந்த ஊர்கள் திருச்சி நாட்டிலுள்ள திருமலை சமுத்திரமும், நெல்லை நாட்டிலுள்ள திருமலை நாயக்கன் படுகையும் ஆகும்.

 அரியநாத முதலியார்

     நாயக்கர்கள் மதுரையில் அரசு புரிந்தபோது அவர்க்குப் பெருந்துணைபுரிந்தவர் அரியநாத முதலியார் ஆவர். குழப்பம் நிறைந்திருந்த பாண்டிநாட்டில் நீர்மையும் ஒழுங்கும் நிலைபெறச் செய்தவர் அவரே. அவர் நெல்லை நாட்டில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிப் பயிர்த் தொழிலைப் பண்புற வளர்த்தனர். பொருநை யாற்றிலுள்ள நான்காம் அணைக் கட்டு இன்றும் அரியநாத முதலியார் அணை என்றே அழைக்கப்படுகின்றது. திருநெல்வேலி நகருக்குத் தென் மேற்கே பத்து கல் தூரத்திலுள்ள அரியநாயகபுரம் என்னம் ஊரின் பெயரிலும் அவர் பெருமை விளங்கக் காணலாம். பொருநை யாற்றின் வடகரையிற் பொருந்தியுள்ள அவ்வூர் வளங்கள் பலவும் நிறைந்த சிற்றூராக விளங்குகின்றது. நாயக்கர் ஆட்சியில் அவர் பெற்ற தளவாய் என்ற பட்டம் இன்றும் நெல்லை நாட்டிலுள்ள தளவாய் முதலியார் குடும்பத்தில் நிலவுகின்றது.

வீரராகவ முதலியார்

     திருநெல்வேலி நகரத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது வீரராகவபுரம். அது வீர ராகவ முதலியார் பெயரால் அமைந்த ஊராகும்.

கிருட்டிணப்ப நாயக்கர் மதுரையில் ஆட்சி  புரிந்த போது வீரராகவர் அவருடைய பிரதிநிதியாகத் தென்னாட்டில் விளங்கினார் என்பது சாசனத்தால் அறியப்படும்.39

திருவேங்கட நாதன்

     பதினேழாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் மாதைத் திரு வேங்கடநாதன் என்பவர் நாயக்கரது பிரதிநிதியாக நெல்லை நாட்டின் நிருவாகத்தை நடத்தி வந்தார். அவர் கலைவாணரைப் பெரிதும் ஆதரித்தவர். இலக்கண விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் அவரது கொடைத் திறத்தினைப் நாவாரப் புகழ்ந்துள்ளார். குடிகளின் நன்மையைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணிய அந் நல்லார் பெயர் திருநெல்வேலிக்குத் தென் மேற்கிலுள்ள திருவேங்கடநாதபுரம் என்னும் ஊரால் விளங்குகின்றது.

நாயக்கர்

     விசயநகரப் பெரு மன்னரது ஆட்சி நிலைகுலைந்த பின்பு ஆந்திர நாட்டில் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டன. ஆந்திரத் தலைவர் பலர் தம் பரிவாரங்களோடு தமிழ் நாட்டிலே குடியேறி வாழத் தலைப்பட்டார்கள். இங்ஙனம் தென்னாட்டிற் போந்த வடுகத் தலைவர்களில் ஒருவர் எட்டப்பநாயக்கர். அவர் பெயரால் அமைந்த ஊர் எட்டயபுரம் ஆகும்.40

இவ்வண்ணமே கொடைக்கானல் மலைக்குப் போகும் வழியிலுள்ள அம்மை நாயக்கனூர் ஒரு நாயக்கன் பெயரைக் கொண்டுள்ளது. இன்னும் போடிநாயக்கனூர் முதலிய ஊர்களின் பெயரிலும் தென்னாட்டில் வந்து சேர்ந்த வடுகத் தலைவரின் பெயர் விளங்கக் காணலாம்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

35. 442 / 1909

36. “செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்”- கம்பராமாயணம், கும்பகருணன் வதை 159.

37. சீவலப்பேரி, வல்லநாடு என்னும் ஊர்கள் சிரீ வல்லபப் பேரேரி, வல்லவன் நாடு என்பர்.

38. தென்காசிக் கோயிற் சாசனம் :- “சேலேறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச் செயலாலே சமைந்தது, இங்கென் செயல் அல்ல, அதனையின்னம் மேலே விரிவு செய்தே புரப்பார் அடி வீழ்ந்து, அவர் தம்பால் ஏவல் செய்து, பணிவன் பராக்கிரம பாண்டியனே”(T.A.S. Vol., I.pp. 96-97.)

39. 478 / 1916

40. திருநெல்வேலி அரசிதழ் (Tinnevelly Gazetteer,)பக்கம் 376.